

அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவேன் (MAGA) என்ற முழக்கத்துடன் டொனால்டு ட்ரம்ப் அதிகாரத்துக்கு வந்துள்ளார். பதவியேற்ற உடனே தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் சில நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்தார். குறிப்பாக, கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி ஆகும் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்தார். ஆனால், சம்பந்தப்பட்ட நாடுகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் கூடுதல் வரிவிதிப்பு அமலாக்கத்தை தள்ளி வைத்தார்.
அதேநேரம், இந்த வரி விதிப்பை ட்ரம்ப் உண்மையிலேயே அமல்படுத்துவாரா அல்லது உலக நாடுகளை வர்த்தக ரீதியாக பணிய வைப்பதற்கான தந்திரமாக பயன்படுத்துவாரா என்ற சந்தேகம் ஆய்வாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் எத்தகைய அறிவிப்பையும் உடனடியாக அறிவிக்கவில்லை.