

காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் பகுதிகள் வாகனம் மற்றும் மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முக்கிய மையமாக உருவெடுத்து வருகின்றன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தொடரும் சாம்சங் நிறுவன தொழிலாளர் போராட்டம், இந்தப் பகுதியில் அமைந்துள்ள நிறுவனங்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றிருக்கிறது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வாஷிங்மெஷின், ஏர்கண்டிஷனர் போன்ற நுகர்வோர் பொருட்களையும் சாம்சங் நிறுவனத்தின் நொய்டா தொழிற்சாலைக்கு தேவையான சில உதிரி பாகங்களையும் உற்பத்தி செய்து வருகிறது.
இந்நிலையில் ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை, மேம்படுத்தப்பட்ட பணிச்சூழல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் கடந்த ஆண்டு அக்டோபரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் CITU தொழிற்சங்க ஆதரவுடன், 'சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்ட தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து வேலைநிறுத்தத்தை தொடங்கினர். 37 நாட்கள் நீடித்த வேலைநிறுத்தம், தமிழக அரசு சார்பாக அமைச்சர்கள் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்திய பிறகு விலக்கிக் கொள்ளப்பட்டது.