தானியங்கி கார்: போபால் பொறியாளர் அபார சாதனை

தானியங்கி கார்: போபால் பொறியாளர் அபார சாதனை
Updated on
1 min read

உலகம் முழுவதும் டிரைவர் இல்லாமல் இயங்கும் கார்கள் உருவாக்கம் மிகவும் முனைப்பாக நடைபெற்று வருகிறது. கூகுள் தொடங்கி வைத்த இந்த டிரைவர் தேவைப்படாத கார் உருவாக்க முயற்சியை இப்போது பெரும்பாலும் அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களுமே மேற்கொண்டு வருகின்றன. கனரக வாகனங்கள் மற்றும் டிராக்டர்கள் உள்ளிட்டவற்றை டிரைவரின்றி இயக்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மஹிந்திரா குழுமம் டிரைவர் தேவைப்படாத, வயலில் உழவுப் பணிக்கான டிராக்டரை உருவாக்கி அதை செயல்படுத்தி வருகிறது. இப்போது போபாலைச் சேர்ந்த பொறியாளரான சஞ்ஜீவ் சர்மா,  டிரைவர் தேவைப்படாத காரை உருவாக்கியுள்ளார்.

இதன் சிறப்பம்சமே மற்ற பெரிய நிறுவனங்கள் மிக அதிக அளவில் செலவு செய்துவரும் நிலையில் மிகக் குறைந்த செலவில் இவர் இத்தகைய காரை தயாரித்துள்ளதுதான். இம்மாத தொடக்கத்தில் பெங்களூருவில் சிஐஐ நடத்திய இந்தியா இன்னோவேஷன் மாநாட்டில் இவரது தயாரிப்புதான் பிரதான விவாத பொருளாக பலரையும் வியப்பிலாழ்த்திய விஷயமாக இருந்தது. இவரது திறமையை கவுரவிக்கும் வகையில் இந்த மாநாட்டில் இவருக்கு சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

2009-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள மாசசூஸெட்ஸ் தொழில்நுட்ப கல்லூரி (எம்ஐடி) மாணவர் இருவர் தானியங்கி கார் குறித்து நடத்தப்பட்ட போட்டியில் தாக்கல் செய்த ஆய்வறிக்கைதான் தனக்கு உத்வேகம் அளித்தது என்கிறார் சஞ்ஜீவ்சர்மா.

இந்தியாவில் இவர் தயாரித்த இந்த நுட்பத்தை பிற நிறுவனங்கள் விரைவில் சோதித்துப் பார்க்க முன்வரும் என்று தெரிகிறது. குறைந்த செலவிலான தானியங்கி டிரோன்கள் மற்றும் தானியங்கி பீரங்கிகளை ராணுவத்துக்கு தயாரித்துத் தரவும் திட்டமிட்டுள்ளார் சஞ்சய் சர்மா.

ராணுவத்துக்கு குறைந்த செலவில் புதிய தொழில்நுட்பத்தை அளிப்பதே இவரது முக்கிய நோக்கமாகும். தானியங்கி வாகனங்களை விவசாயம் மற்றும் பிற பணிகளுக்கும் பயன்படுத்துவதே இவரது நோக்கம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in