

கடந்த 1973-ம் ஆண்டு இந்தியா, தென்கொரியா இடையே அதிகாரப்பூர்வமான வர்த்தக தொடர்பு தொடங்கியது. பொன் விழா (50 ஆண்டுகள்) கண்ட இந்த கூட்டுறவு அபரிமிதமான வளர்ச்சியை எட்டி உள்ளது. தொடக்கத்தில் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக மதிப்பு வெறும் ரூ.121 கோடியாக இருந்தது. இது 2023-ம் ஆண்டில் ரூ.2.4 லட்சம் கோடியைத் தாண்டி, 1,940 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இது இரு நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பின் வலிமையையும் பரஸ்பர நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது. தென்கொரியாவின் வெளிநாட்டு முதலீடுகளில் இந்தியா 13-ம் இடத்தைப் பெற்றுள்ளது. இந்திய சந்தையில் கொரியாவின் முதலீடுகள் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தாலும், முன்னணி முதலீட்டாளர்களுடன் ஒப்பிடும்போது இன்னும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. இந்த நிலையை மேம்படுத்த இரு நாடுகளும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்ந்து வருகின்றன. கொரியாவின் முதலீடுகள் வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
இந்தியாவில் தென்கொரிய முதலீடுகள் தென்கொரியா இந்தியாவில் இதுவரை ரூ.69 ஆயிரம் கோடிக்கும் மேல் முதலீடு செய்துள்ளது ஹூண்டாய், சாம்சங், எல்ஜி, கியா, லோட்டே, BGMI போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்திய சந்தையில் முக்கியமான இடங்களைப் பிடித்திருக்கின்றன. குறிப்பாக சாம்சங் தனது நொய்டா உற்பத்தி ஆலையில் உலகின் மிகப்பெரிய மொபைல் உற்பத்தி மையத்தை அமைத்திருக்கிறது. ஹூண்டாய், கியா போன்ற வாகன உற்பத்தியாளர்கள், இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் போக்கையே மாற்றி அமைத்தது மட்டுமல்லாமல், அவர்களது சென்னை மற்றும் ஆந்திராவில் உள்ள தொழிற்சாலைகள் நாட்டின் வேலைவாய்ப்பை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த நிறுவனங்களுக்கு தேவையான உதிரிபாகங்களை தயாரிப்பதற்கும் தென்கொரிய
உற்பத்தியாளர்களே இங்கு தொழிற்சாலைகளை அமைத்திருக்கின்றனர். டாடா டேவூ போன்ற கொரிய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்த பல இந்திய நிறுவனங்களும் உள்ளன.