

வரும் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்தார். இதன்படி, திட்டமிடப்பட்டிருக்கும் மொத்த செலவு ரூ.50.65 லட்சம் கோடி. எதிர்பார்க்கப்படும் வரி வருவாய் ரூ.28.37 லட்சம் கோடி. மற்ற வரவுகளும் சேர்த்து மொத்த வரவு, ரூ.34.96 லட்சம் கோடி. பற்றாக்குறையை சரி செய்ய பெறப் போகும் கடன் தொகை ரூ.14.82 லட்சம் கோடி. நிதி பற்றாக்குறை அளவு, நாட்டின் உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் 4.4 சதவீதம்.
தனி நபர் வருமான வரியில் சலுகைகள்: மாத சம்பளக்காரர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் பாராட்டை பெறுகிற பட்ஜெட்டாக இது அமைந்திருக்கிறது. காரணம் தனிநபர் வருமான வரியில் செய்யப்பட்டிருக்கும் பெரும் மாற்றங்கள். ’நியு ரெஜிம்’ திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள தனிநபர் வருமான வரி மாற்றங்கள் எவரும் எதிர்பாராதது.