

வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் என்ற நிலையிலிருந்து துடிப்பான, பல் துறை வளர்ச்சி இன்ஜின் என்ற நிலைக்கு கிராமப்புற இந்தியா மாறி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் கிராமங்களில் உற்பத்தி, கட்டுமானம் மற்றும் வர்ததகம் உள்ளிட்ட துறைகளும் முக்கிய பங்கு வகிக்கத் தொடங்கி உள்ளன. இதனால் வேளாண்மை துறையை பெருமளவில் சார்ந்திருக்க வேண்டிய நிலை குறைந்துள்ளது. இத்துடன் உள்கட்டமைப்பு வசதிகள் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளதால் ஊரக இந்தியா வளர்ந்து வரும் முதலீட்டுக்கான மையமாக உருவெடுத்துள்ளது.
அதிகரித்து வரும் கட்டமைப்பு வசதிகள் கிராமப்புற இந்தியாவை நகர்ப்புற சந்தைகளுக்கு நெருக்கமாக கொண்டு வந்துள்ளன. அத்துடன் முன்பு பயன்படுத்தப்படாத சந்தை வாய்ப்புகளை பயன்படுத்துவதற்கான கதவுகளைத் திறந்துள்ளது. எப்.எம்.சி.ஜி. முதல் இ-காமர்ஸ் வரை பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் இந்த போக்கைப் பயன்படுத்துகின்றன. குறிப்பாக, கிராமப்புறங்களில் வளர்ந்து வரும் வாங்கும் திறன் மற்றும் நுகர்வு முறைகளிலிருந்து பயனடைகின்றன.