

மோட்டார் வாகனங்களுக்கான காப்பீடு (இன்சூரன்ஸ்) முதல் 5 ஆண்டுகளுக்கு கட்டாயமாகிறது. இதனால் புதிய வாகனங்கள் வாங்கும்போது ஒரு ஆண்டுக்கு வாகன காப்பீடு வழங்குவதற்குப் பதிலாக 5 ஆண்டுகளுக்கான கட்டணத்தை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும்.
கார்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கும் இரு சக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கும் காப்பீடு வழங்க வேண்டும்.
இது தொடர்பாக இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் ((ஐஆர்டிஏ) விதிமுறைகளை வகுத்து வருகிறது. இந்த புதிய விதிமுறை ஒரு மாதத்துக்குள் அமலுக்கு வரும் என்று இத்துறையின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது புதிய வாகனங்கள் வாங்கும் போது அது காராக இருந்தாலும் சரி, இரு சக்கர வாகனமாக இருந்தாலும் ஓராண்டுக்கு காப்பீடு செய்ய வேண்டியது கட்டாயம். அதன் பிறகு காரின் உரிமையாளர் ஆண்டுதோறும் அதை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். காப்பீடு செய்யப்பட்ட வாகனங்களுக்கு ஏற்படும் சேதம் அல்லது சம்பந்தப்பட்ட வாகனங்களால் ஏற்படும் இழப்பு ஆகியவற்றுக்கு உரிய இழப்பீட்டை சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க வேண்டும். காப்பீடு செய்யப்படாத வாகனங்களை இயக்கக்கூடாது என்ற சட்டமும் அமலில் உள்ளது. 1988-ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டமும் இதை உறுதி செய்கிறது.
கடந்த ஆண்டு வாகனங்களுக்கு காப்பீடு செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஒரு வழிகாட்டுதலை ஐஆர்டிஏ-வுக்கு அளித்தது. இதன்படி வாகனங்களுக்கு காப்பீடு செய்வது மூன்று ஆண்டு முதல் ஐந்து ஆண்டு வரை கட்டாயமாக்க வேண்டும் என்று அதில் அறிவுறுத்தியிருந்தது.
கடந்த ஜனவரி மாதம் அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் ஆன் லைன் மூலம் தேர்டு பார்ட்டி காப்பீடு வழங்கலாம் என்று ஐஆர்டிஏ அறிவுறுத்தியிருந்தது. வழக்கமாக காப்பீட்டு நிறுவனங்களில் மட்டுமே இத்தகைய காப்பீடு செய்வது தவிர்த்து ஆன்லைன் மூலமும் வழங்க அறிவுறுத்தப்பட்டது.
மூன்றாம் தரப்பு காப்பீடு எனப்படும் (தேர்டு பார்ட்டி) காப்பீட்டை எந்தெந்த வழிகளில் வழங்க முடியுமோ அதை ஆராய்ந்து வழங்குமாறும் கூறப்பட்டது. வாகனங்களுக்கு மூன்று ஆண்டு முதல் 5 ஆண்டு வரை கட்டாயம் காப்பீடு செய்வது என்ற முடிவு மிகச் சிறந்தது என்று பஜாஜ் அலையன்ஸ் பொது காப்பீட்டு நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி சசிகுமார் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இயக்கப்படும் வாகனங்களில் 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையானவை மூன்றாம் தரப்பு காப்பீடு கூட பெறாமல் இயக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்புதிய நடைமுறையால் இந்த நிலை மாறும் என்று தெரிகிறது.