

சமீப காலமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வருகிறது. 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி 1 டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 83.22 ஆக இருந்தது. இது செப்டம்பரில் 84 ஆகவும், டிசம்பர் தொடக்கத்தில் 85 ஆகவும் சரிந்தது. இப்போது 86-ஐ தாண்டிவிட்டது. குறிப்பாக டிசம்பரில் மட்டும் ஒரு ரூபாய் சரிந்துள்ளது. இதற்கான காரணங்கள் என்ன? சரிவால் ஏற்படும் தாக்கம் என்ன? நன்மைகள் என்ன? என்பது பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் காய்கறி சந்தையில் முருங்கைக்காய் விலை இதுவரை இல்லாத வகையில் கிலோ ரூ.400-ஐ தாண்டியது. ஃபெஞ்சல் புயல் காரணமாக வரத்து குறைந்ததே விலை உயர்வுக்கு முக்கிய காரணம். எனினும் அடுத்தடுத்த நாட்களில் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது. இது உள்நாட்டு பற்றாக்குறையின் விளைவு.