

உலகில் உள்ள வாகன உற்பத்தியாளர்கள் அனைவரும் பெட்ரோல், டீசல் வாகனங்களிலிருந்து மின்சார வாகனங்களுக்கு மாறப் போராடி வரும் நேரத்தில், சீன வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. குறிப்பாக, BVD, கிரேட் வால், நியோ போன்ற சீன நிறுவனங்கள் குறைந்த விலையில் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தி, அமெரிக்கா மற்றும் ஜப்பானிய நிறுவனங்களின் சந்தைப் பங்கை குறைத்து வருகின்றன. சீனாவில் மட்டுமல்லாமல் உலகளவிலும் இந்தப் போக்கு தொடர்கிறது.
இந்நிலையில், ஜப்பானின் முன்னணி வாகன தயாரிப்பாளர்களான ஹோண்டா மற்றும் நிசான் ஆகிய நிறுவனங்கள் இணைந்து செயல்படுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த சமீபத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன. இந்த கூட்டணியில் மிட்சுபிஷி மோட்டார்ஸ் நிறுவனத்தையும் இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையும் தொடங்கி உள்ளது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இணைப்பின் மூலம், உலகின் மூன்றாவது மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.