

மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் பல்வேறு வகைகள் உள்ளன. உதாரணமாக பங்குச் சந்தை (ஈக்விட்டி), கடன் பத்திரங்கள் (டெட்), பங்குச் சந்தை குறியீட்டெண்கள் (இண்டெக்ஸ்) பங்குகள்-கடன் பத்திரங்கள் (ஹைபிரிட்) ஆகியவற்றை கூறலாம். இந்த வரிசையில் மல்டி-அசெட் திட்டமும் அடங்கும். பங்குகள், கடன் பத்திரம், தங்கம், வெள்ளி போன்ற பல்வேறு சொத்துகளில் பரஸ்பர முதலீட்டு திட்டங்கள் மூலம் முதலீடு செய்வது மல்டி-அசட் மியூச்சுவல் பண்ட் என்று அழைக்கப்படுகிறது.
இவ்வகை முதலீட்டு திட்டத்தில் குறைந்தபட்சம் 10 சதவீதம் முதல் மூன்று வெவ்வேறு சொத்து வகைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதனால், இந்த செயல்முறை முதலீட்டாளர்களை இடர்பாடுகளில் இருந்து பாதுகாக்கிறது, இந்த சமநிலையான அணுகுமுறை உங்கள் போர்ட்போலியோ பன்முகத்தன்மையுடன் இருப்பதையும், பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தின்போது ஏற்படும் தாக்கங்களில் குறைவாக பாதிக்கப்படுவதையும் உறுதி செய்கிறது. பங்குச் சந்தை சரிவைக் காணும்போது, கடன் பத்திரம், தங்கத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடு உங்களை பாதுகாக்கும்.
அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது. முதலீட்டு பழக்கத்தை தொடங்குபவர்களுக்கு தனித்தனியாக முதலீடுகளை நிர்வகிப்பது என்பது சிக்கலான ஒன்று. அதுபோன்ற இடர்பாடுகளை எதிர்கொள்ளாமல் அவர்களுக்கு பாதுகாப்பான உடனடி தீர்வாக விளங்குவது மல்டி-அசட் பண்ட் திட்டமாகும். அதேநேரம், அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்களுக்கு இந்த திட்டம் சமநிலையை பராமரிக்கவும், அபாயங்களை குறைக்கவும் பெரிதும் கைகொடுக்கிறது.
பங்குகள் இயற்கையில் நீண்ட கால அடிப்படையில் செல்வத்தை உருவாக்குகிறது. கடன் பத்திர முதலீடு இதர திட்டங்களை விட ஒப்பீட்டளவில் நிலையானதாக இருந்தாலும், அதிக வருமானத்தை வழங்காது என்பதே உண்மை. பணவீக்கம் அதிகமாக இருக்கும் காலகட்டங்களில் அல்லது உலகளாவில் நிலவும் நிச்சயமற்ற பொருளாதார சூழல்களில் தங்கம் ஒரு பாதுகாப்பு அரணாக (ஹெட்ஜ்) செயல்படுகிறது. இவற்றை இணைப்பதன் மூலம் மல்டி-அசட் மியூச்சுவல் பண்ட் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியின் சரியான கலவையை வழங்குகின்றன.
நீங்கள் முதன்முறையாக ஒரு போர்ட்போலியோவை உருவாக்கினாலும் அல்லது ஏற்கெனவே இருக்கும் ஒன்றை செம்மைப்படுத்தினாலும் எதிர்பாராத சந்தை இடையூறுகளுக்கு எதிராக பாதுகாப்பு வழங்கும் அதே வேளையில் நீண்ட கால நிதி இலக்குகளை அடைவதற்கான விவேகமான தேர்வாக மல்டி-அசட் மியூச்சுவல் பண்ட் விளங்குகிறது.
இதில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு பிரத்யேகமான முறையில் வடிவமைக்கப்பட்டதுதான் ஐசிஐசிஐ புருடென்ஷியல் மல்டி-அசட் பண்ட் திட்டமாகும். 22 ஆண்டு கால வரலாற்றில் இந்த நிதி திட்டம், 21.20 சதவீத கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (சிஏஜிஆர்) வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது. ஓராண்டில் 22.68 சதவீத வருமானத்தை கொடுத்துள்ளது. மூன்று ஆண்டு மற்றும் ஐந்தாண்டு சிஏஜிஆர் வருமானமாக முறையே 19.73 சதவீதம் மற்றும் 20.61 சதவீதத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பி.கே.முருகன், நிறுவனர், பிரதீப் பைனான்சியல் சர்வீசஸ்