

தொழில் நகரம் என்று அழைக்கப்படும் கோவை, ஜவுளி, பம்ப்செட், வார்ப்படம், பொறியியல் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகிறது. இந்நிலையில், சமீப காலமாக தகவல் தொழில் நுட்பத் துறையிலும் (ஐ.டி.) கோவை முத்திரை பதித்து வருகிறது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில்தான் அதிக எண்ணிக்கையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பெங்களூரு போன்ற நகரங்களில் காணப்படும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல காரணங்களால் பல முன்னணி பன்னாட்டு ஐ.டி. நிறுவனங்கள் கோவையில் கிளைகளை அமைத்துள்ளன.
கோவை மாவட்டத்தில் 2024 ஜனவரி நிலவரப்படி ஐ.டி. நிறுவனங்களின் எண்ணிக்கை 700-ஐ கடந்துள்ளது. வரும் ஆண்டுகளில் இது பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவிநாசி சாலை, சரவணம்பட்டி சுற்றுப்புற பகுதிகள், பொள்ளாச்சி சாலை என பல்வேறு இடங்களில் அரசு சார்பிலும் தனியார் சார்பிலும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் கோவையில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு படிப்பை முடித்தவுடன் உடனடியாக இங்கேயே வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் (சிஐஐ) கோவை கிளை முன்னாள் தலைவர் பிரஷாந்த் கூறியதாவது: ஐ.டி. துறையில் தமிழ்நாடு இதுவரை இல்லாத வளர்ச்சியை எட்டி உள்ளது. உலகளாவியதிறன் மையங்கள் (ஜிசிசி) அமைப்பதற்கு மிகவும் உகந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. மாநிலத்தில் 300 ஜிசிசி மையங்கள் பல்வேறு துறைகளில் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல்வேறு துறைகள் உள்ள போதும் ஐ.டி. துறைதான் பிரதானமாக உள்ளது.
இந்த மையங்கள் மூலம் தற்போது வரை 1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேசிய அளவிலான திறமை பங்களிப்பில் தமிழ்நாடு 11 சதவீதத்தை கொண்டுள்ளது. சென்னையில் தற்போது 90 மில்லியன் சதுர அடிக்கு மேல் ஐ.டி. அலுவலகங்களில் கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், வரும் 2026-க்குள் இது 100 மில்லியன் சதுர அடியாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது செயல்பட்டு வரும் உலகளாவிய திறன் மையங்கள் எண்ணிக்கை 2030-க்குள் 460 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.டி துறை வளர்ச்சியில் 2-ம் நிலை நகரங்கள் பட்டியலில் கோவை மாவட்டம் தொடர்ந்து மிகச் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதனால் பல ஐ.டி. நிறுவனங்கள் கோவையில் தொழில் தொடங்க தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றன. இதை மெய்ப்பிக்கும் வகையில், தமிழக அரச சார்பில் சமீபத்தில் விளாங்குறிச்சியில் ரூ.158.32 கோடி மதிப்பீட்டில் 2.94 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஐ.டி. பூங்கா திறக்கப்பட்டுள்ளது. இதில் 3,500 பேருக்கு வேலை கிடைக்கும்.
கோவை மாவட்டத்தில் ‘எல்காட்’ நிறுவனம் மேலும் 2 ஐ.டி வளாகங்களை ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் அமைக்க திட்டமிட்டுள்ளது. மொத்தம் 26 லட்சம் சதுர அடிபரப்பளவில் அமைய உள்ள இதில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை கிடைக்கும். ஐ.டி துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப தமிழக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, ஜிசிசி நிறுவனங்களுக்கு முதல் ஆண்டில் 30%, இரண்டாம் ஆண்டில் 20%, மூன்றாமாண்டில் 10% ஊதிய மானியம் வழங்கப்படும்.
தொழில் துறை வளர்ச்சிக்காக ரூ.2,295 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை, மதுரை, திருச்சி போன்ற 2-ம் நிலை நகரங்களில் ஐ.டி துறையின் வளர்ச்சியை கவனத்தில் கொண்டு பல திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவோர் பட்டியலில் தமிழ்நாடு தேசிய அளவில் 15% பங்களிப்பை கொண்டுள்ளது.
மேலும் கோவை மாவட்டத்தில் புதிய மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் திட்டம், விமான நிலைய விரிவாக்கம், புறவழிச்சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. திறமையான தொழிலாளர்கள் அதிகம் இருப்பது கோவை மாவட்டத்துக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. இதனால் தேசிய அளவிலான நிறுவனங்கள் மட்டுமின்றி உலகளவில் புகழ்பெற்ற பல பன்னாட்டு நிறுவனங்களும் கோவையில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. கோவையில் சமீபத்தில் எல்காட் நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்ட ஐ.டி பூங்கா 100% பயன்பாட்டுக்கு வரவுள்ளதே இதற்கு சிறந்த சான்றாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- rajagopal.l@hindutamil.co.in