

அர்விந்த் சுப்பிரமணியன்..
தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்து கடந்த வாரம் ஓய்வு பெற்றவர். சென்னையில் பிறந்து வளர்ந்தவர். பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும் கடந்த 2014 அக்டோபரில் தலைமை பொருளாதார ஆலோசகராகப் பொறுப்பேற்றார். ஆட்சிக் காலம் வரைக்கும் பதவி இருந்தாலும், ஓராண்டு முன்பாகவே ஓய்வு பெற்றுவிட்டார்.
கடந்த 4 ஆண்டுகளில் ஜன்தன் வங்கிக் கணக்கு, ஆதார் - ரேசன் இணைப்பு, ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம் என மிகப் பெரிய பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்திய முடிவுகளை மத்திய அரசு எடுப்பதற்கு துணை நின்றவர் இவர்.
தான் வகித்த பதவிகளிலேயே மிகவும் பெருமை வாய்ந்த பதவியாக இதைத்தான் கூறுகிறார் அர்விந்த் சுப்பிரமணியன். நிதி அமைச்சகம் ஆண்டுதோறும் பட்ஜெட்டுக்கு முன்பு சமர்ப்பிக்கும் பொருளாதார ஆய்வு அறிக்கையை சுவாராஸ்யமாக மாற்றியவர். தன்னுடைய பதவிக் கால அனுபவங்கள் குறித்தும் பொருளாதார தலைமை ஆலோசகராக இருப்பதற்கு என்னவெல்லாம் தகுதி வேண்டும் என்பது குறித்தும் பல விஷயங்களை அவர் கூறியிருக்கிறார்.
"எல்.ஜி. படேல், வி.கே. ராமஸ்வாமி, மன்மோகன் சிங், அசோக் மித்ரா, பிமல் ஜலான், சங்கர் ஆச்சார்யா, கவுசிக் பாசு, ரகுராம் ராஜன் போன்ற ஜாம்பவான்கள் வகித்த பதவி இது. நானும் அந்தப் பதவிக்கு வந்தேன். பிரபல வாட்ச் நிறுவனமான படேக் பிலிப்பின், `இந்த வாட்ச் உங்களுக்கு சொந்தமானதல்ல.. பத்திரமாக பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லுங்கள்..' என்ற விளம்பர வாசகம்தான் நினைவுக்கு வந்தது. அதைத்தான் நானும் செய்தேன்'' என தனது பதவிக் காலம் குறித்து நினைவுகூர்கிறார் அ.சு.
`தலைமை பொருளாதார ஆலோசகர் என்ற பதவி உலகில் வேறு எங்கும் கிடையாது அமெரிக்காவில் இருக்கும் பொருளாதார ஆலோசகர்கள் குழுத் தலைவர் மற்றும் தலைமை பொருளாதார நிபுணர் என இரண்டும் கலந்த பதவி இது. அரசின் கொள்கை முடிவுகளுக்குத் தேவையான புள்ளி விவரங்களை அளிப்பது, புதிய யோசனைகளை உருவாக்கி விவாதிப்பது, பலன் தரும் கொள்கைகளை அமல்படுத்துவது, அரசின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்வது, புதிய திறமைகளை உருவாக்குவது என இதன் பணிகள் விரிந்து கொண்டே போகும்.
ஆனால் இத்தனையும் மத்திய அரசுடன் நின்று விடுவதுதான் கொடுமை. சில மாநில முதல்வர்களும் மாநில நிதி அமைச்சர்களும் மாநிலங்களுக்கும் இதுபோன்ற பணிகளை விரிவு செய்ய வேண்டும் என விரும்பினார்கள். நானும் விரும்பினேன். நடைமுறைக்கு வரவில்லை. இனிவரும் தலைமை பொருளாதார ஆலோசகர்கள் இதை முயற்சிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்'' என்கிறார் அர்விந்த்.
தலைமை பொருளாதார ஆலோசகர் எப்படி இருக்க வேண்டும்? அவரே சொல்கிறார். "பொருளாதார நிபுணர் என்பவர் பல்வேறு விதமான திறமைகளைக் கொண்டிருக்க வேண்டும். கணக்கு தெரிந்திருக்க வேண்டும். நாட்டின் வரலாறு தெரிந்திருக்க வேண்டும். நல்ல அரசியல்வாதியாகவும் கொஞ்சம் தத்துவம் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். இப்போதைய பொருளாதார நிலையை கடந்த காலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து, எதிர்கால நலனுக்குத் தேவையான முடிவை எடுக்க வேண்டும் என பிரபல பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் கீன்ஸ் கூறியிருக்கிறார். என்னுடைய அனுபவத்தில், இதோடு மேலும் இரண்டு விஷயங்களும் தேவை.
ஒன்று... அரசாங்கத்தில் இறுதி முடிவு எடுக்கும் அரசியல்வாதிகளின் குணம் அறிந்து செயல்பட வேண்டும். ஒரு விஷயத்தை வலியுறுத்தும்போது, நம்முடைய மேதாவித்தனத்தை காட்டி விடக் கூடாது. அதோடு, கேட்பவரின் ஈகோவையும் தொட்டு விடக் கூடாது. இரண்டாவதாக, சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும்..'' என்பது அவரின் கருத்து.
"பொருளாதார ஆய்வறிக்கையை எழுதுவதற்கும் கொள்கைகள் தொடர்பான குறிப்புகள் எழுதுவதற்கும் திறமையான குழுவை உருவாக்குவது முக்கியம். தேவைப்பட்டால் திறமையானவர்களை அரசாங்கத்துக்கு வெளியில் இருந்து கூட எடுத்துநியமிக்கலாம். பல்கலைக் கழகங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் இதுபோன்ற திறமைகளைக் கண்டறிந்து குழுவில் சேர்த்து குழுவின் திறனை உயர்த்த வேண்டும்.
கடவுளர்கள் சிவா, விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று பேர் சேர்ந்து முயன்றாலும் தேற்றுவது கடினம் என்ற நிலையில்தான் நாட்டின் பொருளாதாரம் இருக்கிறது. அரசாங்கத்துக்கு வெளியில் இருக்கும் திறமைகளை உள்ளே கொண்டு வந்து அந்த நிலைமையை மாற்ற வேண்டியது அவசியம்.
சர்வதேச பொருளாதாரம் என்பது சிக்கலான விஷயம். 5 அல்லது 6 பெரிய சந்தைகளை உள்ளடக்கியது. வர்த்தகம் செய்யும் பொருட்கள், உள்நாட்டு கரன்சி, உள்நாட்டு கடன் பத்திரங்கள், வெளிநாட்டு கடன் பத்திரங்கள் குறித்து அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும். இதுபோன்ற விஷயங்களில் அனுபவம், பயிற்சி, அறிவு இருக்க வேண்டும். இதெல்லாம் எளிதில் கற்றுக் கொள்ளக் கூடிய விஷயமில்லை..'' என்கிறார் அர்விந்த்.
பொதுத் துறை அமைப்பாக இருப்பதால் மக்களின் நம்பிக்கை அவசியம். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும் அதே நேரத்தில் நாட்டின் நலனுக்கும் பாதிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் விசுவாசத்துக்குப் பேர் போன கர்ணனாகவும் தர்மத்தின் பக்கம் நேர்மையுடன் நின்ற அர்ஜுனனாகவும் இருக்க வேண்டும். அரசாங்கத்தில் இருப்பவர்கள் கூறும் நல்ல திட்டங்களை ஏற்று அவற்றை செம்மைப்படுத்தி அமல் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதும் மோசமான பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்களை வேண்டாம் எனத் தடுத்து அறிவுரை கூறுவதும்தான் ஆலோசகரின் முக்கிய பணியாகும்.
ஒரு தலைமை பொருளாதார ஆலோசகர் எப்படி இருக்க வேண்டும் என இவ்வளவு விளக்கம் சொன்னதால் நான் அப்படி இருந்ததாக அர்த்தமில்லை. உண்மையில் சொன்னப்போனால், பல விஷயங்களில் எனக்கு அனுபவம் போதாது. ஆனால் அடுத்த வருபவர் என்னைப் போல் இல்லாமல், அனைத்துத் தகுதிகளுடனும் இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்'' என முடிக்கிறார் அர்விந்த் சுப்பிரமணியன்.
இவர் கால கட்டத்தில் கொண்டுவரப்பட்ட ஜன்தன் வங்கிக் கணக்கு திட்டம் மூலம் கோடிக்கணக்கான மக்களால் வங்கிச் சேவையைப் பெற முடிந்தது. அரசின் பல்வேறு திட்டங்களின் பலன்களைப் பெற ஆதார் அவசியம் என்ற நடவடிக்கையால் அரசால் பல கோடி ரூபாயை சேமிக்க முடிந்தது.
பல ஆண்டுகள் இழுத்தடித்துக் கொண்டிருந்த ஜிஎஸ்டி அமலானதிலும் இவரின் பங்கு முக்கியமானது. அதேபோல், பணமதிப்பு நீக்க நடவடிக்கையும் இவர் காலத்தில்தான் அமலானது. ஒரே நாளில் திடீரென ரூ.500, ரூ.1000 நோட்டு செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இது தொடர்பாக உங்களின் கருத்து கேட்கப்பட்டதா என்ற கேள்விக்கு இதுவரை பதில் சொல்லவே இல்லை இவர். இதெல்லாம் அரசின் முடிவு என நழுவி விடுகிறார் அர்விந்த்.
"என்னுடைய பதவிக் காலத்தில் நான் ஒன்றுமே செய்யவில்லை என யாரும் கூறிவிட முடியாது எப்போதும் பரபரப்பாகத்தான் இருந்தேன். இனிமையான நினைவுகளுடன் விடை பெறுகிறேன். எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் நாட்டுக்காகப் பணியாற்றத் தயங்க மாட்டேன். நான் பார்த்த பணிகளிலேயே மிகவும் அருமையான பணி இது. இது எனது கனவுப் பணி. ஜிஎஸ்டி, பொருளாதார ஆய்வறிக்கை தயாரிப்பு போன்றவற்றில் இளைஞர்களுடன் இணைந்து பணியாற்றியதில் எனக்குப் பெரிதும் மகிழ்ச்சி. எனக்கும் எனது குழுவினருக்கும் இந்த 4 ஆண்டுகளும் மிகவும் அருமையானவை. எனது வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான காலம் இது என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் அர்விந்த் சுப்பிரமணியன்.
-ravindran.s@thehindutamil.co.in