

இந்திய பங்குச் சந்தையின் முக்கிய குறியீட் டெண் நிப்டி நவம்பர் மாத தொடக்கத்தில் 24,304-ல் இருந்து, கீழ்நோக்கி இறங்கி, 23,263-ஐ தொட்டு, தற்போது 24,123-ல் முடிந்துள்ளது. இதை ஒரு வி வடிவரெக்கவரி என்று கூட சொல்லலாம். இந்திய பங்குச்சந்தை, தொடர்ந்து இறங்கியதற்கான காரணங்கள், அவை மீண்டு எழுந்ததற்கான முக்கியமான காரணங்களை பார்க்கலாம்.
இந்திய பங்குச்சந்தையின் வீழ்ச்சி கடந்த செப்டம்பர் மாத கடைசி வாரத்தில் தொடங்கியது. நிப்டி உச்ச அளவாக 26,277-ஐ தொட்டு, பின் அக்டோபர் மற்றும் நவம்பர் மாத 3-வது வாரம் வரை தொடர்ந்து இறங்கியது. கிட்டத்தட்ட 3,000 புள்ளிகள் சரிந்தன. இந்நிலையில், நவம்பர் மாத கடைசி வாரத்தில் ஒரு பலமான ஏற்றத்தை கொடுத்துள்ளது. இந்த ஏற்றம், 23,304-ல் இருந்து ஏறி 24,123-ஐ தொட்டுள்ளது. சந்தை மொத்தமாக 3,000 புள்ளிகளை இழந்து 800 புள்ளிகளை மீட்டு எடுத்துள்ளது.
அந்நிய நிதி நிறுவனங்களின் செயல்பாடு: சந்தையின் நகர்வுக்கு முக்கிய காரணம் அந்நிய நிதி நிறுவனங்களின் செயல்பாடுகள் ஆகும். அக்டோபரில் அந்நிய நிதி நிறுவனங்கள் சுமார் ஒரு லட்சம் கோடிக்கு மேல் பங்குகளை விற்றார்கள். இந்த நவம்பரில் சுமார் ரூ.41,000 கோடிக்கு மேல் விற்றிருக்கிறார்கள். சந்தை மீண்டும் எழும் போதெல்லாம் அந்நிய நிதி நிறுவனங்கள் பங்குகளை விற்றுக் கொண்டே இருக்கின்றன. எனவே குறுகிய கால அடிப்படையில் சந்தை மேல் நோக்கி செல்வது தொடர்ந்து தடுக்கப்படுகிறது.
வரைபடம் என்ன சொல்கிறது? - நிப்டி தற்போது 24,600 என்ற புள்ளியில் மிக வலுவாக தடுக்கப்படுகிறது. மாதவரைபடத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, சுத்தியல் போன்ற கேண்டில் வரைபடம் தோன்றியுள்ளது. இதற்கான அர்த்தம், சந்தை மீண்டும் எழுவதற்கான ஒரு பலமான முயற்சியை எடுக்கிறது என்பதாகும். அதாவது வாங்குபவர்கள், விற்பவர்களைவிட சற்றே பலமாக செயல்படுவதாக எடுத்துக் கொள்ளலாம். சந்தை 24,600 என்ற தடையைத் தாண்டி நிலைபெற்றால் அடுத்து 25,000 நோக்கி நகரலாம். கீழே சரிந்தால் 23,600 என்பது முக்கிய ஆதரவாக உள்ளது.
துறைவாரியாக ஒரு பார்வை: வங்கித்துறை: வங்கித்துறை இம்மாத முடிவில் சற்றே வலுவான இடத்தில் இருப்பதைப் பார்க்கிறோம். கடந்த நான்கு மாதங்களாக, பெரிய அளவில் இறங்காமல், பக்கவாட்டு நகர்வில் உள்ளது. சந்தை சற்று ஏற ஆரம்பித்தால் இந்தத் துறைக்கு ஒரு பெரிய உந்துதலாக இருக்கும். வங்கித்துறையின் இரண்டாம் காலாண்டு முடிவுகள், ஓரளவுக்கு நல்ல லாபத்தை காட்டியிருப்பது இந்தத் துறைக்கு சாதகம்.
வாகனத்துறை: இந்தத் துறை நிப்டி நகர்வின் அடிப்படையிலேயே நகர்ந்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே நன்கு இறங்கியுள்ள இந்தத் துறைக்கு, ஒரு தற்காலிக ஏற்றம் வரலாம்.
எப்எம்சிஜி துறை: இந்தத் துறை அக்டோபர் மாதம் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. குறிப்பாக இந்தியாவின் நுகர்வு அளவு குறைந்ததால், இந்த துறை நேரடியாக பாதிக்கப்பட்டது. இருந்தாலும், ஒரு தற்காலிக ஏற்றம் வந்தால், முதலீட்டாளர்கள் குறைந்த பட்சம் ஒருபகுதியையாவது பணமாக மாற்றுவது நல்லது.
மருந்து துறை: இந்தத் துறை வலுவான இறக்கத்துக்கு பிறகு, மேலே திரும்பி அடுத்தகட்ட ஏற்றத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. பொதுவாக சந்தை ஏறினால், இந்தத் துறை குறுகிய காலத்துக்கு ஒரு ஏற்றத்தை கொடுக்கலாம்.
தகவல் தொழில்நுட்பத்துறை: இந்த துறை, கிட்டத்தட்ட 50 சதவீதத்துக்கு மேலாக அமெரிக்க வியாபாரத்தை நம்பியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்ற பிறகு, நிறுவனங்களின் வரிகள் குறைக்கப்படும், அந்தப் பணம் தகவல் தொழில்நுட்ப மேலாண்மைக்கு ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதன் அடிப்படையில் ஒட்டுமொத்த பங்குச் சந்தையும் இறங்கு முகமாக இருந்தாலும், ஐ.டி. துறை தொடர்ந்து வலுவாக உள்ளது. இந்த துறை நீண்டகால முதலீட்டுக்கு மிகவும் சிறப்பானதாகவும் பார்க்கப்படுகிறது.
உலோகத் துறை: பொதுவாக இது உலகப்பொருளாதாரம் மற்றும் உள்நாட்டு பொருளாதாரத்தின் நகர்வை ஒட்டியே ஏறி இறங்கும். அந்த வகையில் தற்போது சற்றே மந்தமாக இருந்தாலும், சந்தை மேல்நோக்கி ஏறும்போது ஒரு மிதமான ஏற்றம் வரலாம். அது குறுகியகால முதலீட்டாளர்கள் லாபத்தை வெளியே எடுப்பதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கலாம்.
உலக சந்தை நிலவரத்தை எடுத்துக் கொண்டால், அமெரிக்காவின் பணவீக்கம் தற்போது எதிர்பார்ப்பைவிட சற்று அதிகமாக இருக்கிறது. எனவே, அமெரிக்க மத்திய வங்கிவட்டி விகித குறைப்பை தள்ளி போடும் என்றஅச்சம் ஏற்பட்டுள்ளது.
அதைப் போலவே மத்திய கிழக்கில் இஸ்ரேல் நாட்டை சுற்றி நிகழும் சண்டைகள், ரஷ்யா, உக்ரைன் சண்டை இன்னும் தீவிரமானால், அது உலகப் பொருளாதார வளர்ச்சியை கணிசமாக பாதிக்கும். இந்தியாவிலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இரண்டாம் காலாண்டு முடிவுகள் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. எனவே, சந்தை அடுத்த 6 மாதங்களுக்கு இதுபோன்ற நிச்சயமற்ற தன்மையை கொண்டதாகவே இருக்க வாய்ப்பு உள்ளது.
ஆனாலும் நீண்டகால அடிப்படையில் சந்தை எல்லா இறக்கங்களையும் தாண்டி, பழைய உச்சத்தை தொடலாம் மற்றும் புதிய உச்சங்களை தோற்றுவிக்கலாம். எனவே, வலிமையான நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் நீண்டகால முதலீட்டாளர்கள், பொறுமையாக காத்திருக்கலாம்.
- trarulrajhan@ectra.in