

வீட்டைப் பூட்டி விட்டு, சாவியை கதவிலேயே வைத்துவிட்டு வந்த அனுபவம் உண்டா? ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துவிட்டு, டெபிட் கார்டை மெஷினிலேயே விட்டுவிட்டு வந்திருக்கிறீர்களா? பேனாவை இன்னொருவரிடம் எழுதக் கொடுத்துவிட்டு, அதை வாங்க மறந்திருக்கிறீர்களா? இந்தப் பழக்கங்களுக்கு ஜிகார்னிக் எஃபெக்ட் (ZEIGARNIK EFFECT) என்று பெயர்.
ஜிகார்னிக் என்ற பெண்மணி லித்துவேனிய-சோவியத் நாட்டு உளவியல் அறிஞர் ஆவார். இவர் ஒரு முறை தனது உறவினர்களுடன் உணவகத்துக்குச் சென்றிருந்தார். அப்போது, அனைவரும் பலவிதமான உணவுகளை ஆர்டர் கொடுத்தனர். சர்வர், குறிப்புகள் ஏதும் எடுக்காமல் அனைத்தையும் நினைவில் வைத்து, மிகச் சரியாக அவரவர்க்கு உரிய உணவைப் பரிமாறி, சரியான தொகைக்கு பில்லையும் கொடுத்து ஆச்சரியப்படுத்தினார்.
இந்த ஆச்சரியத்தோடு வெளியில் வந்த ஜிகார்னிக், சற்று தூரம் சென்ற பிறகு, தன்னுடைய கைப்பையை எடுத்துவர மறந்து விட்டதை உணர்ந்து, திரும்பவும் உணவகத்துக்குச் சென்றார். இவரைப் பார்த்த அதே சர்வர், அதற்குள் இவரை மறந்து போயிருந்தார். "நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று அவர் கேட்க, அப்போதுதான், சர்வருக்கு நினைவாற்றலும், மறதியும் எப்படி அடுத்தடுத்து வந்தது என்பது பற்றிய கேள்வி ஜிகார்னிக்-குக்கு எழுந்தது. இது தொடர்பான ஆராய்ச்சியில் அவர் ஈடுபடத் தொடங்கினார். இதன் விளைவாக உருவானதுதான் 'ஜிகார்னிக் எஃபெக்ட்' என்ற உளவியல் தியரி.
"ஒரு வேலை முடிவடைந்து விட்டால், பல நேரங்களில் மூளை அதனை உடனே மறந்துவிடும்" என்பதுதான் இந்த எஃபெக்ட் சொல்கிற விஷயம். அப்படியானால் உங்கள் மூளை ஒரு வேலையை மறக்காமல் இருக்க, நீங்கள் அந்த வேலையை முடித்து விடாமல், அதைத் தொடரச் செய்து கொண்டே இருக்க வேண்டும். அல்லது அந்த வேலை தொடர்பான கேள்விகளை மூளைக்குள் எழுப்பி அது குறித்த சிந்தனையை மூளையில் பதிவு செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த வேலை மறக்கப்படாமல் இருக்கும்.
இந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே நாம் பார்க்கிற டி.வி. மெகா சீரியல்கள், பத்திரிக்கைத் தொடர்கள், சினிமாக்களின் 2-ம் பாகம் - மூன்றாம் பாகம் போன்றவை உருவாக்கப்படுகின்றன. ஒரு சஸ்பென்சை வைத்து ஒவ்வொரு பகுதியும் முடிக்கப்படும்போது மூளை அதை மறக்காமல் வைத்திருக்கும். அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கும்.
சரி... இப்போது முதலில் கேட்ட கேள்விகளுக்கு வருவோம். நீங்கள் சாவியையோ, டெபிட்கார்டையோ, பேனாவையோ மறக்காமல் இருக்க வேண்டுமென்றால், அதைத் தொடர் நிகழ்வாக மூளையில் மாற்றி, பதிய வைத்துக் கொள்ள வேண்டும். எப்படி தெரியுமா? சாவியை எடுத்து பையில்போட்டுக் கொண்டு, பிறகு வீட்டைத் திறந்து, உள்ளே சென்று, வாங்கி வந்த பொருள்களை அடுக்கி வைக்க வேண்டும் என்று தொடர் வேலையாக மூளையில் பதிய வைத்துக் கொள்ளலாம்.
அதுபோல், ஏ.டி.எம்.முக்குச் சென்று, பணத்தை எடுத்துவிட்டு, டெபிட் கார்டை உருவிக் கொண்டு, பிறகு கடைத் தெருவுக்குச் சென்று, தேவைப்படும் பொருள்களை வாங்க வேண்டும் என்று பதிவு செய்து கொள்ளலாம். இதேபோல், பேனாவைக் கொடுத்த பிறகு, திரும்பவும் பேனாவைப் பெற்றுக்கொண்டு, அந்த இடத்தைவிட்டு கிளம்பி, அடுத்தடுத்து என்னென்ன இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று மூளையில் பதிய வைத்தல் நல்லது. இப்படிச் செய்தால் நீங்கள் எதையும் மறக்க மாட்டீர்கள்.
சரி.. இந்தக் கட்டுரை உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம். "நினைவாற்றலை அதிகரிக்க 10 வழிகள்" என்ற அடுத்த கட்டுரையின் மூலம் விரைவில் மீண்டும் சந்திப்போம்
(இதுவும் ஒரு ஜிகார்னிக் எஃபெக்ட்தான்).
- rkcatalyst@gmail.com