

புதிதாக 16-வது நிதி ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் பரிந்துரைகள் வரும் ஏப்ரல் 2026 முதல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அமல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் புதிய ஆணையத்தின் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில், அதன் உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் கடந்த வாரம் சென்னைக்கு வந்திருந்தனர்.
அவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினர் அப்போது, "மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆகும் கூடுதல் செலவினங்களால் தமிழகத்துக்கு நிதிச்சுமை அதிகரித்து வருகிறது. அதேநேரம் மத்திய அரசின் நிதிப் பகிர்வு குறைந்து வருகிறது. எனவே, மத்திய வரி வருவாயில் 50 சதவீத பங்கை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். மேலும் வரி வருவாய் பகிர்வில் புதிய அணுகுமுறையை உருவாக்க வேண்டும்" என முதல்வர் கோரிக்கை வைத்தார். நிதி ஆணைய சட்டம் (1951) என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
இந்திய அரசியலமைப்பின் 280-வது பிரிவின் கீழ் நிதி ஆணைய சட்டம் (1951) கொண்டுவரப்பட்டது. இதன்படி, ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை மத்திய அரசின் பரிந்துரை அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி ஆணையத்தை உருவாக்குகிறார். மத்திய அரசின் வரி வருவாயை மாநிலங்களுக்கு இடையே எவ்வாறு பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதைப் பரிந்துரை செய்வதே இந்த ஆணையத்தின் முக்கிய பணியாகும். 1951-ம் ஆண்டு முதல் இதுவரை 15 நிதி ஆணையங்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் பரிந்துரைகளின்படி வரி வருவாய் மாநிலங்களுக்கு பகிரப்பட்டிருக்கின்றன.
15-வது நிதி ஆணையத்தின் (ஏப்ரல் 2020 – மார்ச் 2026) பரிந்துரைப்படி, ஆண்டு வரி வருவாயில் 41 சதவீதத்தை மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். வரி வசூலை விநியோகிக்கப் பயன்படுத்தப்படும் அளவு கோல்களில், வருமான வித்தியாசம் (அதாவது, அதிக வருமானம் உள்ள மாநிலத்திலிருந்து மற்ற மாநிலங்களின் வருமான வித்தியாச அளவு) மற்றும் மாநில மக்கள் தொகை ஆகியவை முக்கியமானவை ஆகும்.
மாநில அரசுகள் அதிருப்தி: இதனிடையே, மத்திய அரசு பகிர்ந்து கொடுப்பது பாரபட்சமாக இருப்பதாகவும், போதுமானதாக இல்லை என்றும் தென் மாநிலங்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கின்றன. ஏழைகள் மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட உத்தர பிரதேசம் (18%) மற்றும் பிஹார் (10%) ஆகிய 2 மாநிலங்களுக்கு மட்டுமே மொத்த வரி வருவாயில் 28% வழங்கப்படுகிறது.
ஆனால், தமிழ்நாடு (4.2%), கர்நாடகா (3.65%), தெலங்கானா (2.13%), ஆந்திரப் பிரதேசம் (4.11%) மற்றும் கேரளா (1.96%) போன்ற மாநிலங்கள், வரி வருவாயில் இருந்து தங்களுக்கு குறைவான அளவே பகிர்ந்து அளிக்கப்படுகிறது என குறை கூறுகின்றன. நல்ல பொருளாதார வளர்ச்சி பெற்றிருப்பதுடன், குறைவான மக்கள் தொகை கொண்டிருக்கும் எங்கள் மாநிலங்களை தண்டிப்பது போல இது உள்ளது எனவும் கூறுகின்றன.
குறைவான நிதிப் பகிர்வு: இதுமட்டுமல்லாமல், மாநில அரசுகளுக்கு பகிரப்படும் வரி வருவாய் நிதி ஆணையம் பரிந்துரை செய்துள்ள விகிதத்தைவிட குறைவாகவே வழங்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக மத்திய அரசின் வரி வருவாயில் 32 சதவீதத்தை மாநில அரசுகளுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும் என 14-வது நிதி ஆணையம் பரிந்துரை செய்தது.
ஆனால் ஆணையத்தின் 5 ஆண்டு காலத்தில் (ஏப்ரல் 2015 – மார்ச் 2020) சராசரியாக ஆண்டுக்கு 27.9 சதவீதம் மட்டுமே வரி வருவாய் பகிரப்பட்டுள்ளது. இதுபோல மத்திய அரசின் வரி வருவாயில் 41 சதவீதத்தை மாநிலங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று 15-வது நிதி ஆணையம் பரிந்துரைத்த போதும், 31 சதவீதமே பகிரப்பட்டிருக்கிறது.
செஸ், கூட்டு வரியை பகிர வேண்டும்: அரசியலமைப்பு ரீதியாக, நிதி ஆணையம் மாநில அரசுகளுக்கு பகிர்ந்து அளிக்கக்கூடிய வரிகள் தொகுப்பில், செஸ் (Cess) மற்றும் கூட்டு வரி (Surcharge) அடங்காது (சட்டப்பிரிவுகள் 268, 269 மற்றும் 270). கூட்டு வரி என்பது 'வரிகள் மீதான கூடுதல் கட்டணம்' ஆகும். செஸ் வரி என்பது 'குறிப்பிட்ட நோக்கங்களுக்காக குறிப்பிட்ட காலத்துக்காக விதிக்கப்படும் வரி' ஆகும்.
இந்த இரண்டு வரிகளையும் பகிரக்கூடிய வரிகள் தொகுப்பில் சேர்க்க அரசியலமைப்பு சட்டத்தைத் திருத்த வேண்டும் அல்லது இந்த 2 வரிகளின் வருவாய் மூலமாக மாநில அரசுகளுக்கு வழங்கும் இழப்பீடு பங்கை அதிகரிக்க வேண்டும் என்று 14-வது நிதி ஆணையம் கொடுத்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.
செஸ், கூட்டு வரி வருவாய் அதிகரிப்பு: மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் செஸ் மற்றும் கூட்டு வரிகளின் பங்கு பல ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. 2017-18 முதல் 2022-23 வரை மத்திய அரசு பல்வேறு பொருட்களுக்கு விதிக்கப்பட்ட முக்கிய செஸ் மற்றும் கூட்டு வரிகள் 133 சதவீதம் அதிகரித்துள்ளது. இது 2017-ல் ரூ.2,18,553 கோடியாக இருந்தது. 2022-23ல் ரூ.5,10,549 கோடியாக அதிகரித்துள்ளது (நிதி அமைச்சக தரவுகளின்படி).
வரி வருவாயில், செஸ் மற்றும் கூட்டு வரி வருவாயின் பங்கு அதிகமாவதால், மொத்தத்தில் மாநில அரசுகளுக்கு பகிரப்படும் நிதிப் பங்கு குறைந்து கொண்டிருக்கிறது. இதனால் மாநில அரசுகளுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது.
பொருளாதார கட்டமைப்பு மாறிவிட்டது: நாடு சுதந்திரம் அடைந்த பிறகு கட்டுப்படுத்தப்பட்ட பொருள் உற்பத்தி மற்றும் நிதிக் கொள்கை அமலில் இருந்தது. ஆனால் 1990-களில் தாராளமயமாக்கல் கொள்கை அமலுக்கு வந்தது. இதனால் பொருள் உற்பத்தி அதிகரித்தது. இந்திய பொருளாதாரம் தொடக்கத்தில் குறைவான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (ஜிடிபி) வளர்ச்சி பொருளாதாரமாக இருந்தது. ஆனால் தாராளமயமாக்கப்பட்ட பிறகு இந்தியா உயர் தொழில்நுட்பத்துடன் வேகமாக வளரும் பொருளாதாரமாகி விட்டது.
தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் 75 வருடங்களுக்கு முன்பு மிகப் பின்தங்கிய பொருளாதாரமாக இருந்தன. ஆனால் இப்போது மனிதவளக் குறியீடுகளிலும், ஏழ்மையைக் குறைப்பதிலும் முன்னோடி மாநிலங்களாக மாறியுள்ளன. ஆனால் உத்தர பிரதேசம் (18% பங்கு), பிஹார் (10%) ஆகிய மாநிலங்கள் கடந்த 75 ஆண்டுகளாக 15 நிதி ஆணையங்கள் மூலமாக அதிகமான வரி வருவாயை தொடர்ந்து பெற்று வந்தன. ஆனாலும், இம்மாநிலங்கள் இன்னும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே நீடித்து வருகின்றன.
இது எதைக் காண்பிக்கிறது? “75 வருடங்களாக தொடர்ந்து அதிக வரி வருவாய் பகிர்வை அனுபவிக்கும் உ.பி. போன்ற மாநிலங்கள் பின்தங்கிய நிலையிலிருந்து விடுபடவில்லை” என்பதையே காண்பிக்கிறது. உதாரணமாக எத்தியோப்பியா ஒரு காலத்தில் கடுமையான ஏழ்மையைப் போக்க பல நாடுகளிலிருந்து ஏராளமான நிதியுதவிகளை பல ஆண்டுகளாக பெற்று வந்தது. இலவசமாக உணவுப் பொருட்கள் கிடைத்ததால் மக்கள் உழைக்காமல் இருந்தனர். இதனால் ஏழ்மை நிலை தொடர்ந்து கொண்டிருந்தது.
பகிர்வு அளவுகோல்களில் மாற்றம் தேவை: கடந்த 75 ஆண்டுகளாக 15 நிதி ஆணையங்கள் ஒரே மாதிரியான அளவுகோல்களை உபயோகித்து மத்திய அரசின் வரி வருவாயை பகிர்ந்து அளிக்க பரிந்துரை செய்தன. இந்த நீண்ட காலத்தில், இந்தியப் பொருளாதாரம் கணிசமான கட்டமைப்பு மற்றும் நிதித்துறை சார்ந்த மாற்றங்களை அடைந்துள்ளது.
எனவே, நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்படும் வரி வருவாய் பகிர்வு அளவுகோல்களை இன்றைய பொருளாதார கட்டமைப்புக்கு ஏற்றபடி முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் பொருளாதார முன்னேற்றத்தையும் வறுமைக் குறைப்பையும் விரைவுபடுத்தக்கூடிய புதிய வரி வருவாய் பகிர்வு முறையை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.
தொடர்புக்கு: swamidoss@radiantcashservices.com