மாணவ பருவத்தில் தொழில்முனைவு கல்வி

மாணவ பருவத்தில் தொழில்முனைவு கல்வி
Updated on
2 min read

மேல்நிலை பள்ளியில் படிக்கும் போது தொழிற்கல்வி பாடப்பிரிவு மூலம் தொழில் பழகும் உத்தி மாணவர்களுக்கு கற்றுத் தரப்படுகிறது. இது போல, தொழில்முனைவு கல்வியையும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கற்றுத் தரவேண்டியது அவசியமாகிறது. தொழில்​முனை​வோராக ஆவதற்கு எவ்வித கட்டுப்​பாடு​களும் கிடை​யாது.

வரலாற்றில் இளம் வயதில் பெரும் தொழில்​ முனை​வோராக உருவானவர்கள் முதல் 60 வயதுக்கு மேல் தொழில்​முனை​வோராக உருமாறிய​வர்கள் என பலரும் உள்ளனர். வயது தடையில்லை என்றாலும், சவாலுடன் துணிந்து செல்​பவ​ராக​வும், புத்​தாக்கம் நிறைந்​தவ​ராக​வும், மீண்டு வரும் திறன் கொண்​ட​வ​ராக​வும் தொழில்​முனை​வோர் இருக்க வேண்​டும் என்பது அடிப்​படை​யாகும்.

அவ்வாறான அடிப்படை பண்புகளை ஒரே நாளில் பட்டை தீட்டி பெற்றுவிட முடி​யாது. எனினும் அதற்கான பட்டறையாக பள்ளி மற்றும் கல்லூரிகளை மாற்ற முடி​யும். மேலும் அந்தப் பட்டறை​யின் அரணாக இருந்து வழிகாட்ட அரசின் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை, பள்ளிக் கல்வித் துறை மற்றும் உயர்​கல்​வித் துறை என அனைத்​தும் கைகோர்க்க வேண்​டும்.

தமிழ்​நாடு அரசின் தொழில் முனை​வோர் மேம்​பாடு மற்றும் புத்​தாக்க நிறு​வனம், யுனிசெப் அமைப்பு மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து அரசு மற்றும் அரசு உதவி​பெறும் பள்ளி​களில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களுக்காக பள்ளி புத்​தாக்க மேம்​பாட்டுத் திட்​டத்தை கொண்டு வந்துள்ளது.

இந்த திட்டம் படைப்​பாற்​றலுடன் சிந்​திக்​க​வும், புது​மையான தீர்​வுகளை உருவாக்​க​வும், தொழில்​முனைவு திறன்களை வளர்க்​க​வும் மாணவர்களை ஊக்கு​விக்​கிறது. அத்துடன் சிறந்த மாணவர்கள் குழுக்​களின் புத்​தாக்க சிந்​தனை​களுக்கு ரூ.25,000 முதல் ரூ.1 லட்சம் வரை ரொக்கப் பரிசும், பாராட்டு சான்​றிதழும் வழங்​கப்​படும் என்ற அறிவிப்பு வரவேற்​கத்​தக்​கது.

குஜராத்​தில்.. அதேபோல் குஜராத் மாநிலத்​தில் இருக்​கும் இந்திய தொழில்​முனை​வோர் மேம்​பாட்டு நிறு​வனம், மாணவர்​களிடத்​தில் தொழில்​முனைவு திறனை ஏற்படுத்​தும் வகையில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பள்ளி மாணவர்​களுக்கு தனியாக ஒரு பாடத்​திட்​டத்தை வைத்​துள்ளது. மேலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களுக்காக 5 நாள் தங்கி பயிலும் பயிற்சி முகாம் ஒன்றை​யும் நடத்தி வருகிறது. இதுபோல மற்ற மாநிலங்​களில் இருக்​கும் தொழில்​முனை​வோர் சார்ந்த நிறு​வனங்​களும் செயல்​படுத்த முன்​வரலாம்.

கல்லூரி கல்வி​யில்.. அடுத்து கல்லூரிக் கல்வி​யில் தொழில்​முனைவு நம்பிக்கையை ஏற்படுத்​தும் வகையிலான பாடத்​திட்​டத்தை தொடங்க வேண்​டும். அது செயல்​முறைக் கல்வியை முன்னிறுத்தி இருக்க வேண்​டும். மேலும் கல்லூரிகள் தொழில்​முனைவு சார்ந்து இருக்​கும் நிறு​வனங்​களோடு புரிந்​துணர்வு ஒப்பந்தம் மேற்​கொள்​ளலாம். குறிப்பாக தமிழ்​நாடு புத்​தொழில் மற்றும் புத்​தாக்கக் கொள்கை (TANSIM - Tamil Nadu Startup and Innovation Mission) அமைப்​பானது பல்வேறு வகைகளி​லும் செயலாற்றி வருகிறது.

இன்று தமிழ்​நாட்​டில் கிட்​டத்​தட்ட 120-க்​கும் மேற்​பட்ட இன்குபேட்டர் மையங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்​டத்​தி​லும் ஒரு இன்குபேட்டர் மையம் அமைக்க வேண்​டும் என முனைந்து வரும் அதே வேளை​யில் ஸ்டார்ட் அப் சார்ந்து கல்லூரி மாணவர்​களுக்கு பல்வேறு நிகழ்ச்சி மற்றும் போட்​டிகளை​யும் TANSIM நடத்தி வருகிறது.

தமிழ்​நாட்​டில் தற்போது 9,000-க்​கும் மேற்​பட்ட ஸ்டார்ட் அப் நிறு​வனங்கள் வெவ்​வேறு துறை​களில் இயங்கி வருகின்றன. அவைகளைக் கொண்டு கல்லூரி மாணவர்​களுக்கு பயிற்சி பட்டறைகளை நடத்​தலாம். சர்வதேச தொழில்​முனைவு மேற்​பார்வை அமைப்​பானது இளம் வயதினரிடையே விதைக்​கும் தொழில்​முனைவு பற்றிய புரிதல் என்பது அவர்​களிடையே நல்லதொரு தாக்​கத்தை ஏற்படுத்து​வதாக கூறி​யுள்​ளது. எனவே அதற்கு ஏற்றார்​போல் பாடத்​திட்டம் முதற்​கொண்டு அவர்​களின் சிந்​திக்​கும் செயல்​திறன் வரை நாளும் வளரும் தொழில்​நுட்ப உதவி​யுடன் தொழில்​முனைவு எண்ணத்தை வளர்த்​தெடுக்க வேண்​டும்.

இவ்விடத்​தில் இறுதியாக நடந்த நிகழ்வு ஒன்றை குறிப்​பிட்​டால் பொருத்​தமாக இருக்​கும். 1988-ம் ஆண்டு குஜராத்​தின் அகமதாபாத்​தில் உள்ள இந்திய மேலாண்​மைக் கழகத்​தில் (IIM-A) நடந்த பட்டமளிப்பு விழா​வில் வெண்​மைப் புரட்​சி​யின் தந்தை என அழைக்​கப்​பட்ட வர்கீஸ் குரியன் சிறப்பு விருந்​தினராக கலந்​து​கொண்டு பேசினார்.

அப்போது, "பட்டம் பெற்றுச் செல்​லும் நீங்கள் அனைவரும் ஏதேனும் ஒரு பன்னாட்டு நிறு​வனத்​தில் வேலை​யில் சேர்ந்து அவர்​களின் ஷாம்பு உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்​வதற்​காகத்​தானே உங்களின் வாழ்க்கையை செலவழிக்கப் போகிறீர்​கள். இதன்​மூலம் உங்களின் இலக்கை​யும் முடித்​துக் கொள்​கிறீர்​கள். இனிமேலாவது உங்கள் ஆசையின் குறிக்​கோளை நம் நாட்டுக்கு உகந்த வளர்ச்​சி​யின் குறி​யீடாக மாற்றுங்​கள்” என்று 30 நிமிடம் உரையாற்றி முடித்​துள்ளார்.

இதனைக் கேட்ட IIMA மாணவர்​களில் பலர் அடுத்த ஆண்டில் தொழில்​முனை​வோராக ஆகி வரலாறு படைத்​தனர் என்று அந்த ஆண்​டைச் சேர்ந்த ​மாணவரும் தற்​போதைய இன்போ எட்ஜ் நிறு​வனத்​தின் நிறு​வனருமான சஞ்​சீவ் தெரி​வித்​துள்ளார். எனவே, கல்விக்​கூடங்​களில் தொழில்​முனைவை வளர்க்க உரமிடு​வோம்​. அது நம்​ மண்​ணில்​ அறுவடை​யாகி நாளைய மக்​களுக்​கு கனி தரட்​டும்​.

- தொடர்புக்கு: saraths1995@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in