

ஆயுள் காப்பீட்டில் மணிபேக், எண்டோமெண்ட் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கேள்விபட்டிருப்பீர்கள். இதுபோன்ற திட்டங்களையெல்லாம் விற்பனை செய்த காப்பீட்டு நிறுவனங்களும், அதன் முகவர்களும் டேர்ம் இன்சூரன்ஸ் எனும் ஒரு அற்புதமான திட்டத்தை மக்களிடம் அந்த அளவுக்கு எடுத்துச் செல்லவில்லை!
டேர்ம் இன்சூரன்ஸ், டேர்ம் லைப் இன்சூரன்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. சில நாடுகளில் இதை ப்யூர் ரிஸ்க் இன்சூரன்ஸ் என்றும் அழைக்கிறார்கள். மேலே கண்டவை எல்லாம் ப்யூர் இன்சூரன்ஸ் கிடையாது. அவை காப்பீடு, சேமிப்பு ஆகியவற்றின் கலவையாகும். இதில் என்ன பிரச்சினை என்றால், முதலீடு செய்த தொகைக்கு ஒரு நல்ல வருவாயும் கிடைக்காது; அதேநேரம் போதுமான காப்பீடு கவரேஜையும் தராது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், டேர்ம் இன்சூரன்ஸ் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய லைப் இன்சூரன்ஸ் ஆகும். குறைவான விலையில் அதிக தொகைக்கு இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ளலாம்.
எப்படி வேலை செய்கிறது? - உதாரணமாக இளைஞர் ஒருவர் ரூ.1 கோடிக்கு டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்து அவர் வருடத்துக்கு சுமார் ரூ.15,000 தவணையாக 35 ஆண்டுக்கு செலுத்தி வருகிறார் என எடுத்துக் கொள்வோம். இந்த பாலிசி காலத்தில் (35 வருடங்கள்) அவரது உயிருக்கு இழப்பு ஏற்பட்டால், இன்சூரன்ஸ் நிறுவனம் அவரது வாரிசுக்கு ரூ.1 கோடி வழங்கும். ஆனால் உயிரிழப்பு நிகழவில்லை என்றால் பணம் ஏதும் திரும்ப வராது.
ஏன் டேர்ம் இன்சூரன்ஸ்? - நம் எல்லோருக்கும் லைப் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க ஆசை. நாளை எனது உயிருக்கு இழப்பு ஏற்பட்டால், எனது குடும்பம் பணத்துக்காக கஷ்டப்படக் கூடாது என்பதுதான் இதற்குக் காரணம். இந்த ஆசையில், நாம் நம்மால் எவ்வளவு தவணை செலுத்த முடியும் என கணக்கிடுகிறோம். உதாரணமாக என்னால் ஆண்டுக்கு ரூ.50,000 செலுத்த முடியும் என வைத்துக் கொள்வோம். உடனே முகவர் ஒருவரை அணுகி பாலிசி பற்றி விசாரிப்போம்.
அவரும், நீங்கள் 20 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு ரூ.50,000 வீதம் தவணை செலுத்துங்கள், ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ் கிடைக்கும், பாலிசி முடிவில் உங்களுக்கு கிட்டத்தட்ட ரூ.20 லட்சம் கிடைக்கும் என்று கூறுவார். நாமும் பாலிசியை எடுத்த சந்தோஷத்துடன் வந்துவிடுவோம்.
ஆனால் இது சரியான முறையல்ல. ஒருவரின் ஆண்டு வருமானத்தைப் போல 20 மடங்குக்கு லைப் இன்சூரன்ஸ் அவசியம். உதாரணமாக ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் என்றால், அவர் குறைந்தது ரூ.1 கோடிக்காவது லைப் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஏன் 20 மடங்கு? - நிதி இழப்பை சரிசெய்வதுதான் இன்சூரன்ஸ். ஒரு குடும்பத் தலைவர், மாதத்துக்கு சுமார் 42,000 (ஆண்டுக்கு ரூ.5 லட்சம்) சம்பாதிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் திடீரென காலமாகி விடுவதாக வைத்துக் கொள்வோம். அது போன்ற சமயங்களில் அவரின் வாழ்க்கைத் துணைவரும் குழந்தைகளும், நிதி நெருக்கடிக்கு ஆளாவார்கள்.
இதுவே அவரிடம் ரூ.1 கோடிக்கு (ஆண்டு வருமானத்தைப் போல் 20 மடங்கு) டேர்ம் இன்சூரன்ஸ் இருந்திருந்தால், அவரின் குடும்பத்துக்கு அந்த ரூ.1 கோடி வந்திருக்கும். அத்தொகையை அப்படியே எடுத்து ஒரு வங்கியில் டெப்பாஸிட்டாக போட்டால் கூட, அந்தக் குடும்பத்துக்கு மாதம் ரூ.50,000 கிடைத்துவிடும். இப்பொழுது உங்களுக்கு டேர்ம் இன்சூரன்ஸின் அவசியம் குறித்துப் புரிந்திருக்கும் அல்லவா?
யாருக்கு டேர்ம் இன்சூரன்ஸ் தேவை? - பணம் சம்பாதிக்கும் பருவத்தில் உள்ள அனைவருக்கும் டேர்ம் இன்சூரன்ஸ் அவசியம். ஆண், பெண் ஆகிய இருபாலரும் எடுத்துக் கொள்ளலாம். சம்பாத்தியம் இல்லாதவர்கள் டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்க முடியாது. 18 வயதிலிருந்து டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ளலாம். 85 வயது வரைக்கும் கவரேஜ் உள்ளது.
தவணைத் தொகை எவ்வளவு? - ஒரு 30 வயதுஆண், தனது 75-வது வயது வரை (45 ஆண்டுக்கு) ரூ.1 கோடிக்கு டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்கும்போது, ஆண்டுக்கு சுமார் ரூ.16,000 தவணை செலுத்தகும். அதுவே ஒரு 30 வயது பெண், தனது 75-வது வயது வரை (45 ஆண்டுக்கு) ரூ.1 கோடிக்கு டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்கும்போது, ஆண்டுக்கு சுமார் ரூ.13,500 தவணை செலுத்த வேண்டியிருக்கும். எனவே, காப்பீட்டை முதலீட்டு திட்டமாக கருதாதீர்கள். ஆயுள் காப்பீடையும் முதலீட்டையும் ஒன்றாக கலக்காதீர்கள்.
ஆயுள் காப்பீட்டுக்கு டேர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேருங்கள். முதலீடு செய்வதற்கு பல்வேறு திட்டங்கள் உள்ளன. அவை, காப்பீட்டு திட்டங்களைவிட அதிக வருவாயை தரும். அவற்றில் முதலீடு செய்தால் குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும். குடும்பத்தை நேசிக்கும் அனைத்து குடும்பத் தலைவர்களும், தலைவிகளும் அவசியம் டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்வது நல்லது.
- chokku@gmail.com