பெட்ரோல் விலை உயர்வை சமாளிக்க உதவும் கிரெடிட் கார்டுகள்!

பெட்ரோல் விலை உயர்வை சமாளிக்க உதவும் கிரெடிட் கார்டுகள்!
Updated on
2 min read

கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், பெட்ரொல் மற்றும் டீசல் மீதான விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது உங்கள் பட்ஜெட்டை பாதிக்கும் என்றாலும், இந்த பாதிப்பை சிறிதளவு குறைப்பதற்கான வழிகள் உள்ளன. எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து கிரெடிட் கார்டுகளை (கோ பிராண்டட்) வங்கிகள் வழங்குகின்றன. இந்த கார்டுகள் மூலம் பெட்ரோல், டீசல் வாங்கும்போது சில சலுகைகளை வழங்குகின்றன.

சிட்டி பேங்க், ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகள் எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. சிட்டி பேங்க், இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து இந்தியன் ஆயில் சிட்டி பிளாட்டினம் மற்றும் டைட்டானியம் கார்டுகளை வழங்குகிறது. அதேபோல ஹெச்பிசிஎல் நிறுவனத்துடன் இணைந்து ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளை வழங்குகிறது.

ஐசிஐசிஐ பேங்க் ஹெச்பிசிஎல் கோரல் கிரெடிட் கார்டு, ஹெச்பிசிஎல் கோரல் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டு, ஐசிஐசிஐ பேங்க் ஹெச்பிசிஎல் பிளாட்டினம் கிரெடிட் கார்டுகளை வெளியிடுகின்றன. அதேபோல பிபிசிஎல் நிறுவனத்துடன் இணைந்து எஸ்பிஐ கார்டுகளை வழங்குகிறது. இது பிபிசிஎல் எஸ்பிஐ கார்டு ஆகும்.

இந்த கார்டுகள் மூலம் கேஷ் பேக் அல்லது சலுகை புள்ளிகளை பெறமுடியும். இந்த சலுகை புள்ளிகளை அடுத்த முறை எரிபொருள் நிரப்பும் போது பயன்படுத்திக்கொள்ள முடியும். உதாரணத்துக்கு சிட்டி பேங்க் இந்தியன் ஆயில் கார்டில் 150 ரூபாய்க்கு எரிபொருள் நிரப்பும் போது 4 புள்ளிகள் கிடைக்கும். ஒரு புள்ளி என்பது ஒரு ரூபாய்க்கு சமம். உதாரணத்துக்கு நீங்கள் 30,000 ரூபாய்க்கு எரிபொருள் நிரப்பும்பட்சத்தில் 800 புள்ளிகள் கிடைக்கும். தற்போதைய விலைக்கு இதன் மூலம் 9.4 லிட்டர் பெட்ரோல் வாங்க முடியும்.

ஐசிஐசிஐ வங்கி 2.5 சதவீதம் கேஷ் பேக் வழங்குகிறது. இருந்தாலும் மாதத்துக்கு ரூ.100-க்கு மேல் கேஷ் பேக் பெற முடியாது. அதேபோல குறைந்தபட்சம் ரூ.500-க்கு எரிபொருள் வாங்கி இருக்க வேண்டும். இதை தவிர எரிபொருள் அல்லாத கிரெடிட் கார்டு பரிவர்த்தனைக்கு பேபேக் புள்ளிகள் வழங்கப்படும். ரூ.100-க்கு பொருள் வாங்கும் பட்சத்தில் 2 புள்ளிகள் வழங்கப்படும்.

ஆனால் ஹெச்பிசிஎல் கோரல் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுக்கு வேறு சலுகைகள் வழங்கப்படும். 100 ரூபாய் எரிபொருளுக்கு 6 புள்ளிகளும், எரிபொருள் அல்லாத மற்ற செலவுகளுக்கு 2 புள்ளிகளும் (100 ரூபாய்க்கு) வழங்கப்படும். நான்கு புள்ளிகளுக்கு ஒரு ரூபாய் வழங்கப்படும். இந்த புள்ளிகளை எரிபொருள் வாங்குவதற்கு பயன்படுத்திக்கொள்ள முடியும்.

பிபிசிஎல் எஸ்பிஐ கார்டு பயன்படுத்துவதன் மூலம் ரூ.100-க்கு 13 புள்ளிகள் வழங்கப்படும். 4 புள்ளிகள் என்பது ஒரு ரூபாய். இந்த அனைத்து கார்டுகளும் எரிபொருள் மீதான ஒரு சதவீத சர்சார்ஜை தள்ளுபடி செய்கின்றன. ஆனால் எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ கார்டுகளில் ரூ.4000-க்கு மேல் எரிபொருள் வாங்கும்போது இந்த தள்ளுபடி ரத்தாகிறது.

இந்த சலுகைகள் கவர்ச்சிகரமாக இருந்தாலும், சில சிக்கல்களும் இருக்கிறது. இந்த சலுகைகளை பெற வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட வங்கியின் பாயிண்ட் ஆப் சேல் மெஷின்களில்தான் கார்டுகளை தேய்க்க வேண்டும். சிட்டி வங்கியின் இடிசி மெஷினில் தேய்க்கும் பட்சத்தில்தான் ரூ.150-க்கு 6 புள்ளிகள் கிடைக்கும். இல்லை எனில் 2 புள்ளிகள் மட்டும்தான். அதேபோல ஐசிஐசிஐ வங்கியும் ஐசிஐசிஐ ஸ்வைப் மெஷினில்தான் தேய்க்க வேண்டும் என விதிமுறை வைத்திருக்கிறது.

ஆனால் எஸ்பிஐ இது போன்ற எந்த நிபந்தனையும் வைக்கவில்லை. ஆனால் ஏற்கெனவே இருக்கும் புள்ளிகளை பயன்படுத்தி எரிபொருள் வாங்க நினைத்தாலும் அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் புள்ளிகளை பயன்படுத்திக்கொள்ள முடியும். எந்தெந்த பெட்ரோல் நிலையங்களில் பயன்படுத்திக்கொள்ள முடியும் என எஸ்பிஐ ஒரு பட்டியல் வெளியிட்டிருக்கிறது.

இதை தவிர ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி, சூப்பர் வேல்யூ டைட்டானியம் கார்டு என்னும் கார்டை பயன்படுத்துவதன் மூலம் எரிபொருள் சலுகையை பெற முடியும். எந்த நிலையத்தில் பயன்படுத்தினாலும் 5 சதவீதம் கேஷ் பேக் சலுகை வழங்கப்படுகிறது. ஆனால் குறைந்தபட்சம் ரூ.750-க்கு எரிபொருள் நிரப்ப வேண்டும்.

மாதத்துக்கு அதிகபட்சம் ரூ.200 மட்டுமே கேஷ் பேக் வழங்கப்படும். ஒரு முறை அதிகபட்சம் ரூ.100 மட்டுமே வழங்கப்படும். ஆனால் முன்பு குறிப்பிட்ட கார்டுகளில் ஆண்டு கட்டணம் இல்லை. ஆனால் இந்த கார்டில் ரூ.750 ஆண்டு கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதுதவிர பிரீபெய்டு கார்டுகளும் வழங்கப்படுகின்றன.

ஷெல் இந்தியா நிறுவனம் ஷெல் கேஷ் கார்டினை வழங்குகிறது. ஆனால் இதனை ஷெல் மையங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். ஒரு முறை கட்டணமாக ரூ.50 செலுத்தி இந்த கார்டினை பெற முடியும். குறைந்தபட்சம் ரூ.500-க்கு வாங்கும்போது 0.50 சதவீதம் கேஷ் பேக் பெற முடியும். எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து வங்கிகள் வழங்கும் கார்டுகள் பயன்தர கூடியவை. ஆனால் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துபவர்கள் குறைந்தபட்ச பரிவர்த்தனையை எட்ட முடியாத சூழலில் இவை பெரிய பயன் தராது. ஆனால் கார்களை அடிக்கடி பயன்படுத்துபவர்களுக்கு இவை பயனுள்ளதாக இருக்கும்.

-gurumurthy.k@thehindu.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in