

சொந்த வீடு, கார், பிள்ளைகளின் மேற்படிப்பு, வெளிநாட்டு சுற்றுலா… இவைதான் இந்திய நடுத்தர வர்க்கத்தின் கனவுப் பட்டியல். கடந்த 30 ஆண்டுகளில் இந்த வரிசையில் மாற்றம் நிகழ்ந்ததை நீங்கள் பார்த்திருக்க முடியும். குறிப்பாக, சொந்த வீட்டுக் கனவு முதல் இடத்திலிருந்து பின்தங்கி இருக்கலாம். வசதியான ஒரு வாடகை வீட்டில், வாழ்ந்தால்கூட போதும், குடும்பத்தோடு வெளியில் சென்றுவர ஒரு கார் இருந்தால் தேவலாம் என்ற மனநிலை இப்போது ஏற்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டுதான் உள்ளூர் கார் உற்பத்தியாளர்கள் முதல் உலக உற்பத்தியாளர்கள் வரை இந்தியாவை, தமிழகத்தை ஒரு முக்கியச் சந்தையாகக் கருதுகின்றனர். அவர்கள் தங்கள் உற்பத்தி மையங்களையும் இங்கு தொடங்கி உள்ளனர். விலை குறைவான ரக கார்கள் கடந்த 20 ஆண்டுகளில் இந்தியச் சந்தையில் மழை போல் பொழிந்ததே அதற்கு சரியான எடுத்துக்காட்டு.
வங்கிகள், நிதிச்சேவை நிறுவனங்கள் ஆகியவையும் பயணிகள் கார் வாங்குவதற்கு தாராளமாக கடனுதவி வழங்குகின்றன. இது, கார் விற்பனையை ஊக்குவிக்கிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக கார் விற்பனை மந்தமாகி உள்ளது. குறிப்பாக, பண்டிகை காலத்தின் தொடக்கமான செப்டம்பர் மாதத்திலும் கடந்த ஆண்டு செப்டம்பரைவிட விற்பனை குறைந்துள்ளது.
இவ்வாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் நாட்டின் முக்கியமான 7 கார் உற்பத்தி நிறுவனங்கள் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 19.73 லட்சம். கடந்த ஆண்டின் இதே 6 மாதங்களுடன் ஒப்பிடுகையில் இது வெறும் 2% கூடுதல் ஆகும். இதற்காக நாம் பெரிதாக மகிழ்ச்சி அடைந்துவிட முடியாது. ஏனென்றால் மாதவாரியாகக் கணக்குப் போட்டுப் பார்த்தால் கார் விற்பனை எந்த அளவுக்கு இறங்குமுகத்தில் இருந்திருக்கிறது என்பது தெரியவரும்.
7.8 லட்சம் கார்கள் தேக்கம்: இதுமட்டு மல்லாமல் நாடு முழுவதும் உள்ள விநியோகஸ்தர்களிடம் சுமார் 7.8 லட்சம் கார்கள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது. இதன் மதிப்பு ரூ.77,800 கோடி. இதனால், பண்டிகை காலத்துக்காக கார்களை விற்பனை நிறுவனங்களுக்கு அனுப்பி வைப்பதை உற்பத்தியாளர்கள் நிறுத்தி உள்ளனர். இது உற்பத்தியிலும் சுணக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலே சொன்ன புள்ளிவிவரப்படி (நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில்) மஹிந்திரா, டொயோட்டா, கியா மோட்டார்ஸ் நிறுவனங்களின் கார் விற்பனை மட்டுமே முந்தைய ஆண்டைவிட முறையே 21%, 41%, 6% வளர்ச்சி அடைந்தன. மாருதி, ஹூண்டாய் நிறுவனங்கள் தலா 3% விற்பனை சரிவைச் சந்தித்தன. டாடா மோட்டார்ஸ் 4% சரிவையும், ஹோண்டா நிறுவனமும் மிகவும் அதிகபட்சமாக 21% சரிவையும் சந்தித்திருக்கின்றன.
இந்தப் பின்னணி இருக்கும்போது உற்பத்தியாளர்களும் வாகன முகவர்களும் கொஞ்சம் சொந்தக் கடிவாளம் போட்டுக் கொண்டால் என்ன என்று கேட்கின்றனர் வாகன உற்பத்தித் துறை வல்லுநர்கள். சிலரோ, உற்பத்தியாளர்கள் கொஞ்சம் முன்பின் சரிசெய்து இந்த மிகை உற்பத்தியைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம் என்கின்றனர்.
இவ்வாண்டின் முதல் அரையாண்டில் விற்பனை சுணங்கியதற்கு இரண்டு முக்கியக் காரணங்களைச் சொல்கின்றனர் வல்லுநர்கள். முதல் காரணம், பருவமின்றிப் பெய்து பயமுறுத்தும் திடீர் மழை, இரண்டாவது காரணம், நம்பிக்கைகள் மட்டும் சென்டிமெண்ட் சார்ந்தவை.
40% விற்பனை: எது எப்படியிருப்பினும் தற்போதைய பண்டிகைக்காலத்தை விட்டுத்தர கார் உற்பத்தியாளர்கள் தயாராக இல்லை. நவராத்திரி, தசரா, தீபாவளி தொடங்கி கிறிஸ்துமஸ், புத்தாண்டு, தென்னிந்தியாவில் பொங்கல் உள்ளிட்ட இந்த காலம்தான் உண்மையிலேயே ‘கார்’ காலம். ஒட்டுமொத்த ஆண்டின் கார் விற்பனையில் 30% - 40% விற்பனை இந்த காலகட்டத்தில்தான் நடக்கிறது.
ரூ.10 லட்சம் வரை தள்ளுபடி: இன்றைய வாகனக் குவிப்பு சூழலில் திருநாட்களும் வந்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்கியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். பல நிறுவனங்களும் தத்தமது புதிய தயாரிப்புகளைக் களமிறக்கி இருக்கின்றன. அதேபோல விலைச்சலுகை, பல்வேறு தள்ளுபடி சலுகைகளை வழங்குகின்றன.
குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரத்தில் தொடங்கி அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரைகூட (உயர் ரக சொகுசு கார்களுக்கு) விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. குளோபல் என்கேப் முதலிய சோதனைகளில் எத்தனை நட்சத்திரக் குறியீடு வைத்திருக்கிறோம் என்ற விவரங்களோடு கார்கள் வரிசைகட்டி நிற்கின்றன. மொத்தத்தில் நுகர்வோர் கொஞ்சம் துணிந்தும் உற்பத்தியாளர்கள் சிந்தித்தும் செயல்பட வேண்டிய காலமாக இருக்கிறது. எனவே, கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு இதுதான் சரியான தருணம்.
- editdurai@gmail.com