பணக்காரராக வேண்டுமா? - ஏழையைப் போல வாழுங்கள்!

பணக்காரராக வேண்டுமா? - ஏழையைப் போல வாழுங்கள்!
Updated on
2 min read

“முன்பெல்லாம் மாதத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினேன். அப்போது என் வாழ்க்கைக்கு அந்தப் பணம் போதுமானதாக இல்லை. இப்போது 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறேன். இப்போதும் பணம் போதவில்லை.. என்னடா வாழ்க்கை இது ?” என்று புலம்புபவரா நீங்கள் ?

பார்கின்சன் விதியைப் (PARKINSON LAW OF MONEY) பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

"அதிகரிக்கும் வருமானத்துக்கு ஏற்ப, ஒருவரது செலவுகளும் தொடர்ந்து அதிகரிக்கும்" என்கிறார், பார்கின்சன். இன்னும் சொல்லப்போனால், "ஒருவர் எவ்வளவு பணம் சம்பாதிக் கிறாரோ அதைவிட சற்று ‘திகமாகவே அவர் செலவழிப்பார்" என்கிறார் அவர். உளவியல் ரீதியாக பார்க்கையில், இது சராசரி மனிதர்களின் மனோபாவம். இதைக் கடப்பவர்களே பணக்காரர்கள் ஆகிறார்கள். சரி.. இதைப் பணக்காரர்களால் மட்டும் எப்படிக் கடக்க முடிகிறது? இதோ.. அவர்கள் பின்பற்றும் ஐந்து உத்திகள்..

1. இது என்னுடைய பணம் அல்ல: "வருமானம் அதிகரிக்கும்போது வருமானத்தில், 50% மட்டுமே தன்னுடைய பணம் என எண்ணி பணக்காரர்கள் செலவழிக்கிறார்கள். மீதமுள்ள 50% பணத்தை, அது தன்னுடைய பணம் அல்ல என்ற சிந்தனையோடு அதை எதிர்காலத்துக்காக சேமிக்கிறார்கள்" என்கிறார், பிரையன் ட்ரேசி என்கிற தன்முனைப்பு எழுத்தாளர்.

2. சேமிப்புகள் தாமாகவே நிகழ வேண்டும்: வீட்டுக் கடன், வாகனக் கடன், கிரெடிட் கார்டு கடன் வாங்கும்போது, அவற்றை இ.எம்.ஐ. முறையில் திருப்பிச் செலுத்துகிறோம். இதுபோல சேமிப்பைத் தொடர்வதற்கும் ஒரு முறை உள்ளது. பணக்காரர்கள் வங்கிகளுக்கு சேமிப்புக்கும், ஸ்டாண்டிங் இன்ஸ்டிரக்ஷன் (Standing Instruction) கொடுத்து விடுகிறார்கள். தானாகவே சேமிப்புக்கு சென்றுவிடும். இதனால் ஒவ்வொரு மாதமும், சேமிக்கலாமா, வேண்டாமா என்று சிந்திக்க வேண்டிய அவசியம் கிடையாது.

3. பேரம் பேசுவதில் தவறில்லை: பணக்காரர்கள் எந்தப் பொருளை வாங்கும் போதும் பேரம் பேசத் தவறுவதில்லை. பேரம் பேசுவதால் தங்கள் மதிப்பு குறைந்துவிடும் என்று எண்ணுவதும் இல்லை. மேலும் அதிக விலை உள்ள பொருள் வாங்குவதையும் அவர்கள் தவிர்க்கவே விரும்புகிறார்கள். துணிகள் முதல் வாகனங்கள் வரை எல்லாப் பொருள்களிலும் மிகக் குறைந்த விலை, நடுத்தர விலை, சற்று உயர்வான விலை, மிக அதிக விலை என்ற நான்கு வகையான விலைகள் உள்ளன. பணக்காரர்கள் இரண்டாவது அல்லது மூன்றாவது விலையில் உள்ள பொருள்களை மட்டுமே வாங்குகிறார்கள்.
மேலும் தேவையற்ற பொருட்களை அவர்கள் வாங்குவதில்லை.

4. வருமானம் தராத பொருள்களை கடனில் வாங்குவதில்லை: தவணை முறை என்கிற சித்தாந்தம் வந்தாலும் வந்தது.. செல்போன், டி.வி.யில் தொடங்கி, ரிசார்ட், வாகனம், வீடு என அனைத்தையும் தவணை முறையில் வாங்கும் பழக்கம் நம்மிடம் வந்துவிட்டது. வருமானம் தரக்கூடிய அல்லது செலவைக் குறைக்கக்கூடிய எந்தப் பொருளையும் தவணை முறையில் வாங்குவதில் தவறில்லை. ஏனென்றால் அவற்றின் மூலம் கிடைக்கிற கூடுதல் தொகையை வைத்து நாம் வட்டியைக் கட்டி, கடனை அடைத்து விடலாம். ஆனால் வருமானம் தராத எந்த பொருளையும் நாம் கடனில் வாங்குவது என்பது நமக்கான கூடுதல் செலவையே ஏற்படுத்தும்.

5. ஏழையைப் போல் வாழ வேண்டும்: பணக்காரர்கள், ஏழைகளைப் போல வாழ்கிறார்கள். ஆனால் பணக்காரர்களைப் போல சேமிக்கிறார்கள். குறைவாகப் பணம் சம்பாதிப்பதில் தவறில்லை. ஆனால் அதிகம் செலவழிக்கக் கூடாது என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே, ஆரம்ப காலத்தில் ஏழைகளைப் போல குறைந்த தேவைகளுடன் வாழப் பழகிக்கொண்டால் ஓய்வுக்குப் பிறகு, யார் கையையும் எதிர்பார்க்காமல் பணக்காரர்களைப் போல் 'ஜம்'மென்று வாழலாம் என்பதே அவர்களது நோக்கம். பார்கின்சன் விதி சொல்வதும் இதைத்தான்.

நாமும் பின்பற்றலாமே !

- rkcatalyst@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in