டிமேட் கணக்கு எண்ணிக்கையில் தமிழகத்துக்கு 7-ம் இடம்

டிமேட் கணக்கு எண்ணிக்கையில் தமிழகத்துக்கு 7-ம் இடம்
Updated on
1 min read

கரோனா பெருந்தொற்று காலம் சேமிப்பு மற்றும் முதலீட்டின் முக்கியத்துவத்தை உலக மக்களுக்கு கற்றுத் தந்தது என்றே சொல்லாம். நாட்டு மக்களிடையே சேமிப்பு, முதலீடு மற்றும் பங்குச் சந்தைகள் தொடர்பான விழிப்புணர்வு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நிறுவனங்களின் பங்குகளை வைத்துக்கொள்ளவும் பங்கு வர்த்தகம் செய்யவும் தேவைப்படும் டிமேட் கணக்குகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக வேகமாக அதிகரித்து வருவதன் மூலம் இதை உணரமுடிகிறது.

கடந்த மாத நிலவரப்படி நாடு முழுவதும் உள்ளடி மேட் கணக்குகளின் எண்ணிக்கை 11.45 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஓராண்டில் மட்டும் 43% அதிகரித்துள்ளதாக மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) புள்ளி விவரம் கூறுகிறது. ஆனாலும் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் டிமேட் கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை வெறும் 8 சதவீதமாகத்தான் உள்ளது. டிமேட் கணக்கு வைத்திருப்பவர்களில் அதிக அளவாக 2.31 கோடியுடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.

இதற்குக் காரணம் நாட்டின் நிதி தலைநகரான மும்பை, இந்த மாநிலத்தில் அமைந்திருப்பதுதான். அடுத்தபடியாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்களிடம் 1.18 கோடி டிமேட் கணக்குகள் உள்ளன. நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசம் இந்தப் பட்டியலில் 1.04 கோடி கணக்குடன் 3-வது இடத்தில் உள்ளது. இந்த 3 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 1 கோடிக்கும் மேல் டிமேட் கணக்கு வைத்திருக்கின்றனர்.

ராஜஸ்தான், கர்நாடகா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, மத்திய பிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தலா 50 லட்சம் முதல் 66 லட்சம் டிமேட் கணக்குகளை வைத்திருக்கின்றனர். இதில் தமிழ்நாடு 59.39 லட்சம் கணக்குகளுடன் பட்டியலில் 7-ம் இடத்தில் உள்ளது. பிஹார், ஹரியானா, தெலங்கானா, கேரளா, பஞ்சாப், ஒடிசா மற்றும் அசாம் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தலா 20 லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்துள்ளனர். இதில் மிகக் குறைந்த அளவாக லடாக் யூனியன் பிரதேசத்தில் வெறும் 242 பேரிடம் மட்டுமே டிமேட் கணக்குகள் உள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in