

நீங்கள் வேலைக்கு செல்லும் சமயத்தில் ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்கத் தொடங்கி இருப்பீர்கள். ஆனால் ஆண்டுகள் கூடக் கூட நீங்கள் எடுத்திருக்கும் பாலிசி போதுமானதாக இருக்குமா? பணவீக்கம் மற்றும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும் சூழலில் சில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த பாலிசி போதுமானதா? வில்லீஸ் டவர் வாட்சன் என்னும் நிறுவனம் மருத்துவ பணவீக்கம் கடந்த சில ஆண்டுகளாக 10 சதவீத அளவுக்கு இருக்கிறது. நடப்பு ஆண்டில் 11.3 சதவீதமாக இருக்கும் என கணித்திருக்கிறது.
காப்பீட்டு நிறுவனங்களும் ஆண்டுக்கு 15 சதவீதம் அளவுக்கு மருத்துவ கட்டணம் உயரும் என எதிர்பார்க்கின்றன. தற்போது ரூ. 3 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரைக்கும் காப்பீடு வைத்திருந்தால், உங்களின் குடும்பத்துக்கு நிச்சயம் இந்த தொகை போதுமானதாக இருக்காது. அதனால் குறைந்த பட்சம் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை மருத்துவ காப்பீடு தேவைப்படும். இந்த சூழலில் கூடுதலாக ஒரு பாலிசி எடுத்துக்கொள்ள முடியும், ஆனால் அந்த பாலிசிக்கு அதிக பிரீமியம் செலுத்த வேண்டி இருக்கும்.
அதனால் ஏற்கெனவே வைத்திருக்கும் பாலிசியில் குறைந்த தொகையில் டாப் அப் அல்லது சூப்பர் டாப் அப் செய்து கொள்ள முடியும். என்னென்ன டாப் அப் திட்டங்கள் இருக்கிறது என்று பார்ப்போம்.
அப்போலோ முனிச், ஐசிஐசிஐ லொம்பார்டு, யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ், ஹெச்டிஎப்சி எர்கோ, பஜாஜ் அலையன்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் டாப் அப் பாலிசியை சில நிபந்தனைகளுடன் வழங்குகின்றன. 35 வயது ஆண், தனது குடும்பத்துக்கு (மனைவி மற்றும் குழந்தை) 5 லட்ச ரூபாய்க்கு பாலிசி எடுத்தால் ரூ.8,500 முதல் ரூ.13,500 வரை பிரீமியம் செலுத்த வேண்டி இருக்கலாம். இந்த நிலையில் 10 லட்ச ரூபாய்க்கு டாப் அப் செய்ய வேண்டும் என்றால் ரூ.4,300 முதல் ரூ.6,330 வரையில் பிரீமியம் செலுத்தினாலே போதுமானது. குறைந்த பிரீமிய தொகையில் அதிக கவரேஜ் கிடைக்கும். ஆனால் சில நிபந்தனைகளும் இருக்கின்றன என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
சில உதாரணங்களுடன் அந்த நிபந்தனைகளை புரிந்துகொள்ள முடியும். உதாரணத்துக்கு உங்களது அடிப்படை ஹெல்த் பாலிசியின் தொகை ரூ. 3 லட்சம். இதில் 10 லட்ச ரூபாய்க்கு டாப் அப் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அடிப்படை பாலிசியில் க்ளைம் தொகை முழுவதும் முடிந்தபின்புதான் டாப் அப் பாலிசியில் இருந்து க்ளைம் பெற முடியும். உதாரணத்துக்கு ஏழு லட்ச ரூபாய் க்ளைம் பெற வேண்டும் என்னும் பட்சத்தில் 3 லட்ச ரூபாய் அடிப்படை பாலிசியில் இருந்தும், மீதமுள்ள 4 லட்ச ரூபாய்க்கு டாப் அப் பாலிசியில் இருந்து க்ளைம் கிடைக்கும்.
ஒரு வேளை இரு பில்கள் மூலம் தலா 2 லட்ச ரூபாய் செலுத்த வேண்டி இருந்தால் டாப் பாலிசியில் இருந்து எந்தவிதமான க்ளைமும் கிடைக்காது. ஒரே பில்லில் அடிப்படை பாலிசி தொகை முழுமையடையும் பட்சத்தில்தான் டாப் அப் பாலிசியில் இருந்து க்ளைம் பெற முடியும். இந்த சூழலில் ஒரு லட்ச ரூபாயை நீங்கள்தான் செலுத்த வேண்டும்.
சாதாரண டாப் அப் பாலிசிகளில் இருக்கும் சிக்கலை சூப்பர் டாப் அப் பாலிசிகள் மூலம் தீர்வு காண முடியும். ஹெச்டிஎப்சி எர்கோ, அப்போலோ முனிச் மற்றும் யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சூப்பர் டாப் அப் பாலிசிகளை வழங்குகின்றன. உதாரணத்துக்கு ரூ. 3 லட்சத்துக்கு அடிப்படை பாலிசி எடுக்கிறீர்கள். 12 லட்ச ரூபாய்க்கு டாப் அப் செய்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.
4 லட்ச ரூபாய்க்கு க்ளைம் பெறுகிறீர்கள் என வைத்துக்கொண்டால் 3 லட்ச ரூபாய் அடிப்படை பாலிசியில் இருந்தும், ஒரு லட்ச ரூபாய் சூப்பர் டாப் அப் பாலிசி மூலமும் கிடைக்கும். அதே ஆண்டில் மற்றுமொரு 4 லட்ச ரூபாய்க்கு க்ளைம் பெறுவதாக இருந்தால் சூப்பர் டாப் அப் பாலிசியில் இருந்து க்ளைம் பெறமுடியும். 15 லட்ச ரூபாய்க்கு மேல் கூட சூப்பர் டாப் அப் செய்ய முடியும்.
டாப் அப் பாலிசிகளில், நெட்வொர்கில் இணைக்கப்பட்ட மருத்துவமனைகளில் திட்டமிட்டு செல்லும் பட்சத்தில், கேஷ்லெஸ் முறையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும். வேறு மருத்துவமனைகளாக இருக்கும் பட்சத்தில் மருத்துவமனைகளில் பணத்தை செலுத்திய பிறகு காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து க்ளைம் பெற்றுக்கொள்ளலாம்.
அடிப்படை பாலிசி ஒரு நிறுவனத்திலும் டாப் அப் பாலிசி ஒரு நிறுவனத்திலும் இருக்கும் பட்சத்தில் க்ளைம் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். ஆனால் இரு காப்பீட்டு நிறுவனங்களின் நெட்வொர்க்கிலும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்பட்சத்தில் க்ளைம் பெறுவது எளிதாக இருக்கும். டாப் அப் பாலிசிகளை பொறுத்தவரை க்ளைம் பெறவில்லை என அதற்கான போனஸ் ( no claim bonus) எதுவும் கிடைக்காது.
டாப் அப் பாலிசிகளில் 80 வயது நபர்களையும் சேர்க்க முடியும். அதனால் உங்களது பெற்றோர்களை டாப் அப் பாலிசியில் இணைப்பது (அடிப்படை பாலிசியில் பெற்றோர் இல்லை என்றாலும் டாப் அப் பாலிசியில் இணைக்க முடியும்) குறித்து பரிசீலனை செய்யலாம்.
-