

ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை என்று சொல்வதுபோல், நீரவ் மோடியை இன்னமும் கைது செய்ய முடியாத சூழ்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடிக்கான முதன்மைக் காரணமே வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான உஷா அனந்தசுப்ரமணியன்தான் என்று சிபிஐ அமைப்பு சொல்லிவிடும்போல் இருக்கிறது.
உஷா அனந்தசுப்ரமணியன் பெயரை தனது குற்றப் பத்திரிகையில் சேர்த்திருப்பதற்கு சிபிஐ முன்வைக்கும் காரணங்கள் எந்த அளவுக்கு வலுவானவை எனும் சந்தேகம் இயல்பாகவே எழுகிறது. குற்ற பத்திரிகையில் உஷா அனந்தசுப்ரமணியன் பெயர் இடம்பெற்றதும் உடனடியாக அரசு உத்தரவுக்கு ஏற்ப அவரது அதிகாரங்கள் இயக்குநர் குழுவால் பறிக்கப்பட்டுள்ளன. சிபிஐ அமைப்பும், அரசும் இந்த மோசடியின் மையமாக உஷா அனந்தசுப்ரமணியனை மாற்றுவதன் மூலம் இந்த வழக்கை எதைநோக்கி கொண்டுசெல்ல முயலுகின்றன எனும் கேள்வி எழுகிறது.
நீரவ் மோடிக்கு சொந்தமான நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து வைரத்தை இறக்குமதி செய்யும்பொழுது, வெளிநாட்டு விற்பனையாளர்களுக்கு தரவேண்டிய பணத்தை, இந்திய வங்கிகளின் வெளிநாட்டுக் கிளைகள் நீரவ் மோடிக்கு தந்துவிடலாம், அதனை நீரவ் மோடியின் சார்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி இந்திய வங்கிகளுக்கு தந்துவிடும் என்கிற உறுதியளிப்புக் கடிதங்களை (எல்ஓயு) இரண்டு பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர்களின் உதவியோடு வங்கி நிர்வாகத்துக்கே தெரியாமல் மும்பை பிராடி ஹவுஸ் கிளையில் நீரவ் மோடி போலியாக உருவாக்கியதுதான் இந்த மோசடியின் மூலக்கரு.
பொதுவாக இத்தகைய வெளிநாட்டு பரிவர்த்தனைகளை, உலகளாவிய முறையில் பெரும்பாலான வங்கிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஸ்விஃப்ட் என்ற மென்பொருள் அமைப்பின் வழியாகத்தான் செய்யமுடியும். இந்த ஸ்விஃப்ட் முறையை அணுகுவதற்கு கடவுச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. பிராடி ஹவுஸ் கிளையின் மூத்த மேலாளரான கோகுல்நாத் ஷெட்டி தனக்குத் தெரிந்த இந்த கடவுச்சொல்லை பயன்படுத்தி போலியான உறுதியளிப்புக் கடிதங்களை நீரவ் மோடிக்கு உருவாக்கிக் கொடுக்கிறார். இந்திய வங்கிகள் அனைத்தும் இப்பொழுது சிபிஎஸ் எனப்படும் கோர் பேங்கிங் சொல்யூஷன்ஸ் முறைக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இதன்படி ஒரு குறிப்பிட்ட வங்கியின் எல்லா கிளைகளும் ஒரு மத்திய அமைப்போடு கணினி நெட்வொர்க் வழியாக இணைக்கப்படுகின்றன.
ஒரு குறிப்பிட்ட வங்கியின் எந்த கிளையில் பணப் பரிவர்த்தனை நடைபெற்றாலும், இந்த மத்திய அமைப்பில் அதுகுறித்த தகவல்கள் சேமிக்கப்பட்டுவிடும். இதன்மூலம் பல நன்மைகள் விளைந்துள்ளன. வங்கிப் பரிவர்த்தனைகளை செய்வதற்கு, ஒரு வாடிக்கையாளர் தான் கணக்கு வைத்துள்ள வங்கிக்குத்தான் செல்லவேண்டும் என்ற நிலைமை மாறி, குறிப்பிட்ட வங்கியின் எந்த கிளைக்கும் செல்லலாம் என்பது சிபிஎஸ்சின் குறிப்பிடத்தக்க பயன்பாடுகளில் ஒன்று. மனிதர்கள் செய்யக்கூடிய தவறுகள், தகவலை சேமிப்பதில் உள்ள சிக்கல்கள் போன்றவை சிபிஎஸ் முறையால் குறைந்துள்ளன. ஆனால் ஸ்விஃப்ட் முறையில் நடக்கும் வெளிநாட்டு பண பரிவர்த்தனை தகவல்கள், சிபிஎஸ் மத்திய அமைப்பில் சில வங்கிகளால் பதிவு செய்யப்படுவதில்லை. இப்படி பதிவு செய்யாத வங்கிகளில் பஞ்சாப் நேஷனல் வங்கியும் ஒன்று.
நீரவ் மோடிக்கு உதவும் வகையில்தான் உஷா அனந்தசுப்ரமணியன், ஸ்விஃப்ட் முறையை சிபிஎஸ் உடன் இணைக்காமல் இருந்தார் என்கிறது சிபிஐ. பஞ்சாப் நேஷனல் வங்கியின் இயக்குநர்களான கே.வி. பிரம்மாஜி ராவ், சஞ்சீவ் ஷரன், பொது மேலாளர் நெஹல் அகமது போன்றோரும் இதற்கு உடந்தை என்கிறது சிபிஐ குற்ற பத்திரிகை. ஸ்விஃப்ட் முறையை சிபிஎஸ் உடன் இணைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்தியும் அதை செயல்படுத்தாமல் இருந்தார் உஷா அனந்தசுப்ரமணியன் என குற்றம் சாட்டுகிறது சிபிஐ தரப்பு. இங்கே ஒரு கேள்வி எழுகிறது.
2016-ம் ஆண்டு ஸ்விஃப்ட் முறையை கண்காணிக்குமாறு ரிசர்வ் வங்கி அதன் கீழுள்ள அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது, ஆனால் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்விஃப்ட் முறையை சிபிஎஸ் உடன் இணைக்கவேண்டும் என ரிசர்வ் வங்கி மீண்டும் அதன் கீழுள்ள வங்கிகளை கேட்டுக்கொள்கிறது. இந்த இரண்டாவது சுற்றறிக்கை பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு மட்டுமே அனுப்பப்பட்டதல்ல. எல்லா வங்கிகளுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. இதன் பொருள் என்னவாக இருக்க முடியும்? பஞ்சாப் நேஷனல் வங்கி மட்டுமல்லாமல் பிற வங்கிகளும் ஸ்விஃப்ட் முறையை சிபிஎஸ் உடன் இணைக்கவில்லை என்பது இதன்மூலம் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.
ஸ்விஃப்ட் முறையை சிபிஎஸ் அமைப்புடன் உஷா அனந்தசுப்ரமணியன் இணைக்காமல் இருந்தது தவறா என்றால், ஆம் தவறுதான். ஆனால் இந்த செயல்பாட்டை பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடிக்கு உடந்தையாக இருக்கத்தான் உஷா அனந்தசுப்ரமணியன் செய்ததாக எப்படி சொல்ல இயலும்? நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது ஸ்விஃப்ட் முறையை சிபிஎஸ் உடன் இணைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர் அருந்ததி பட்டாசார்யாவை மோசடி குற்றவாளியாக சொல்லமுடியுமா? சொல்லமுடியாது. ஏனென்றால் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் இத்தகைய மோசடி எதுவும் இதுவரை நடக்கவில்லை.
ஒருவேளை இனிவரும் காலங்களில் நடந்தால் அருந்ததி பட்டாசார்யாவை குற்றம் சாட்ட முடியுமா? நிச்சயமாக குற்றம் சாட்ட வேண்டும். ஆனால் சிபிஐ சித்தரிப்பதுபோல் கிரிமினல் குற்றவாளியாக்க முடியாது. சிபிஐ வழியில் சென்று நாம் சிந்தித்தால் ஸ்விஃப்ட் முறையை சிபிஎஸ் உடன் இணைக்காத அனைத்து வங்கிகளின் தலைவர்களும் குற்றவாளிகள்தான். விளைவுகள் ஏற்படாத ஒரே காரணத்தால் தவறிழைத்திருக்கும் மற்ற தலைவர்கள் சரியானவர்கள் ஆகிவிட முடியாது.
எனில் சிபிஐ குற்றப் பத்திரிகையில் உஷா அனந்தசுப்ரமணியனுக்கு முன்பு பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவராக இருந்த கே.ஆர்.காமத், தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த கெளரி சங்கர் போன்றோரது பெயர்கள் ஏன் சேர்க்கப்படவில்லை? உஷா அனந்தசுப்ரமணியனுக்கு பிறகு பொறுப்பேற்ற சுனில் மேத்தாவும் ஸ்விஃப்ட் முறையை சிபிஎஸ் உடன் கடந்த பிப்ரவரி மாதம்வரை இணைக்காத நிலையில் அவரது பெயர் ஏன் சிபிஐ குற்றப் பத்திரிகையில் இடம்பெறவில்லை? 2015-ம் ஆண்டு ஆகஸ்டு முதல் 2017-ம் ஆண்டு மே மாதம் வரை பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக உஷா அனந்தசுப்ரமணியன் பணியாற்றியிருக்கிறார்.
மொத்தமாக 2011-ம் ஆண்டு முதல் நீரவ் மோடிக்கு வழங்கப்பட்ட 1,028 போலி உறுதியளிப்புக் கடிதங்களில் 517 கடிதங்கள் கே.ஆர்.காமத் தலைவராக இருக்கும்போது வழங்கப்பட்டுள்ளன. கெளரி சங்கரையும், சுனில் மேத்தாவையும் விட்டுவிட்டாலும் கே.ஆர்.காமத் பெயர் கண்டிப்பாக குற்ற பத்திரிகையில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதை எவராலும் மறுக்கமுடியாது.
உண்மையில் இந்த மோசடி என்பது ஒட்டுமொத்த அமைப்பின் தோல்வியை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 2016-ம் ஆண்டு ஸ்விஃப்ட் முறை குறித்து கவனமாக இருக்குமாறு வங்கிகளுக்கு அறிவுரை சொல்லும் ரிசர்வ் வங்கி, 2018 ஆண்டு ஏப்ரல் 30-க்குள் ஸ்விஃப்ட் முறையை சிபிஎஸ் உடன் இணைக்கவேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் வங்கிகளை அறிவுறுத்தியுள்ளது. மே மாதம் முடிவடைந்துவிட்ட நிலையில் இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து எந்த தகவலும் இதுவரை இல்லை. ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள் குறித்து அரசு கவனம் செலுத்தாததும் இதன்மூலம் தெளிவாக புலப்படுகிறது.
சிபிஐ முன்வைக்கும் தர்க்கங்கள் படி யோசிக்கும்பொழுது ரிசர்வ் வங்கி அலுவலர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என எல்லோருமே இந்த விவகாரத்தில் சிபிஐ குற்றப் பத்திரிகையில் இடம்பெறத் தகுதியானவர்கள்தான்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஃபின்னகிள் மென்பொருளை சிபிஎஸ் முறைக்காக பெரும்பாலான வங்கிகள் பயன்படுத்திவரும் நிலையில் அதனை ஸ்விஃப்ட் முறையோடு இணைப்பதற்கு இன்ஃபோசிஸ் இவ்வளவு காலம் எடுத்துக்கொள்வதேன் என்பதும் முக்கியமான கேள்வியே. உஷா அனந்தசுப்ரமணியன்மீது சிபிஐ வைக்கும் குற்றசாட்டுகள் இன்ஃபோசிஸின் செயல்படாத தன்மைக்கும் பொருந்தும். உஷா அனந்தசுப்ரமணியன் குறைகூறவே முடியாதவர் அல்ல.
ஆனால் அவரை மட்டும் பலிகடா ஆக்குவதும், பகடைக்காய் ஆக்குவதும் அநீதி மட்டுமே. இந்த மோசடியின்போது பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவர்களாக பணிபுரிந்த, ஆனால் தற்பொழுது தலைமைப் பொறுப்புகள் எதுவும் இல்லாதவர்களை வெறுமனே விட்டுவிட்டு, அலஹாபாத் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி என்ற பொறுப்பில் இருக்கும் உஷா அனந்தசுப்ரமணியனை மட்டும் சிபிஐ அமைப்பும், அரசும் நெருக்குவது இந்த மோசடி வழக்கில் அதிகாரத்தில் இருப்பவர்கள்மீதே நடவடிக்கை எடுக்க அரசும், சிபிஐ அமைப்பும் தவறியதில்லை என எதிர்காலத்தில் காட்டிக்கொள்ளத்தானா எனும் கேள்வி எழுகின்றது.