

பங்குச்சந்தையில் இரண்டு விதமான வர்த்தகங்கள் உண்டு. ஒன்று கேஷ் மார்க்கெட். இது ‘கையில காசு வாயில தோசை' என்பது போன்றது. தாங்கள் விரும்பும் நிறுவன பங்குகளை உரிய பணத்தை செலுத்தி டீமேட் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம். மற்றொன்று டெரிவேட்டிவ் மார்க்கெட் (பியூச்சர்ஸ் அன்ட் ஆப்ஷன்ஸ் - எப் அன்ட் ஓ) எனப்படும். டெரிவேட்டிவ் மார்க்கெட்டில் குறைவான முதலீட்டில் அதிக அளவு (கேஷ் மார்க்கெட்டைவிட பலமடங்கு) வாங்கி விற்க முடியும். இதில் பியூச்சர்ஸ் என்பது பங்குகளை குறிப்பிட்ட விலையில், குறிப்பிட்ட காலத்
துக்குள் வாங்கி கொள்கிறோம் (அல்லது விற்றுக் கொள்கிறோம்) என்று ஒப்பந்தம் செய்து கொள்வதுதான். இந்த ஒப்பந்தங்களை மீற முடியாது. குறிப்பிட்ட காலத்துக்குள் நேர் செய்தே ஆக வேண்டும். இதற்கு ஒப்பந்த மதிப்பில் குறைந்த அளவு பணம் செலுத்தினால் போதும். ஆப்ஷன்ஸ் என்பது, பங்குகளை வாங்கும் அல்லது விற்கும் ஒப்பந்தத்துடன் அந்த ஒப்பந்தத்தை மீறக்கூடிய ஒரு வாய்ப்பையும் உள்ளடக்கியது.
இந்த டெரிவேட்டிவ் மார்க்கெட் என்பது ஏற்கெனவே பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு ‘ஹெட்ஜிங்' செய்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவே அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது சந்தை இறக்கத்தால் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்கவே இந்த முறை வந்தது. உதாரணமாக, உங்களுக்கு விவசாய நிலத்தில் இருந்து மூன்று மாதத்தில் 500 மூட்டை நெல் விளையும் என்றால், அதை மூன்று மாதத்துக்கு பிறகு குறிப்பிட்ட விலையில் விற்க இப்போதே ஒப்பந்தமிடலாம்.
ஒருவருக்கு அதுபோல் எந்த நிலமோ அல்லது விளைச்சலோ இல்லாதபோது 3 மாதத்தில் விற்க தற்போது ஒப்பந்தமிட்டால் அதற்கு பெயர் ஸ்பெகுலேஷன். தற்போது பங்குச்சந்தையில் அதிக அளவில் நடப்பது இதுபோன்ற ஸ்பெகுலேஷன்தான். பங்குகளை வைத்துக் கொள்ளாமலேயே எப் அன்ட் ஓ வர்த்தகத்தில் ஈடுபடுகிறார்கள். இதனால் சிறு முதலீட்டாளர்கள் அதிக அளவில் நஷ்டம் அடைகிறார்கள்.
எப் அன்ட் ஓ முறையை ஹெட்ஜிங் காரணத்துக்கு மட்டும் அனுமதித்து ஸ்பெகுலே ஷனுக்கு மறுப்பதே சரியான அணுகுமுறை. ஆனால் இந்த வர்த்தகத்தால் பங்குச் சந்தை மற்றும் தரகர்களுக்கு அதிக வருமானமும் அரசுக்கு வரி வருவாயும் கிடைக்கிறது. இதனால், அரசும் செபியும் பெயர் அளவுக்கு சில அறிவுரைகளை வழங்கி திருப்திபட்டுக்கொள்கின்றன.
அமெரிக்க தொழிலதிபரும் முதலீட்டாளருமான வாரன் பபெட் ஒரு முறை கூறும்போது, “பங்குச்சந்தையில் எப் அன்ட் ஓ என்பது பேரழிவுக்கான நிதி ஆயுதம், அவை ஆபத்துக்களை சுமந்து வருகின்றன, ஆபத்துகள் இப்போது மறைந்திருந்தாலும் ஆபத்தானவை” என்றார்
ரூ.1.8 லட்சம் கோடி நஷ்டம்: கடந்த 2022 முதல் 2024 வரையிலான 3 நிதியாண்டுகளில் நடைபெற்ற எப் அன்ட் ஓ வர்த்தகம் தொடர்பாக செபி சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியது. இதன்படி கடந்த 3 நிதியாண்டுகளில் எப் அன்ட் ஓ வர்த்தகத்தில் 93 சதவீத சில்லறை முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர். குறிப்பாக 1.13 கோடி சில்லறை வர்த்தகர்களுக்கு ரூ.1.8 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இவர்களுக்கு சராசரியாக தலா ரூ.1.6 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சில்லறை முதலீட்டாளர்களில் 93 சதவீதம் பேர் தலா ரூ.2 லட்சம் நஷ்டம் அடைந்துள்ளனர். 7 சதவீதசில்லறை முதலீட்டாளர்கள் மட்டுமே லாபம் ஈட்டி உள்ளனர். இவர்களுக்கு சராசரியாக தலா ரூ.3 லட்சம் கிடைத்துள்ளது.
விதிமுறைகளில் திருத்தம்: இந்நிலையில், சில்லறை வர்த்தகர்களை பாதுகாக்கும் பொருட்டு செபி பின்வரும் 6 மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இவை வரும் நவம்பர் 20-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி வரைபடிப்படியாக அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எப் அன்ட் ஓ வர்த்தகத்தில் ஈடுபடுவது 30 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள் இதில் ஈடுபடுவது குறையும். இதனால் அவர்கள் நஷ்டமடைவதிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள் என செபி கருதுகிறது.
1. பங்குச் சந்தையில் ஈடுபடுவதற்கான வாராந்திர இன்டெக்ஸ் டெரிவேட்டிவ் ஒப்பந்தம் ஒரு எக்ஸ்சேஞ்சிற்கு ஒரு பென்ச்மார்க் என்ற அளவில் மட்டுமே காலாவதியாவதற்கு அனுமதிக்கப்படும். இதனால் தற்போதுள்ள (வாராந்திர)18 இன்டெக்ஸ் டெரிவேட்டிவ் 6 ஆக குறையும்.
2. குறைந்தபட்ச ஒப்பந்த அளவு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
3. வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான முன்பணம் அதிகரிக்கப்படுகிறது.
4. ஆப்ஷன் பிரீமியம் முன்கூட்டியே வசூலிக்கப்படும்
5. காலாவதி தினத்தில் காலண்டர் ஸ்பிரெட் வசதி இனி கிடையாது.
6. ஒரு நாளுக்குள் ஏற்படும் பொசிஷன் கண்காணிக்கப்படும்.
செபியின் இந்த நடவடிக்கை எந்த அளவுக்கு சில்லறை வர்த்தகர்களை காப்பாற்றும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- ஓய்வுபெற்ற வங்கியாளர்; 1952kalsu@gmail.com