

பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த நிகழ்வு இது. செய்தித்தாள்களைத் திறந்தால் ஒரே ‘புத்தொழில் நிறுவனத்தில் கோடிக்கணக்கில் முதலீடு’ ரக செய்திகள்தான். படித்தவுடன் சொந்தத் தொழில் நரம்புகள் புடைத்துக் கொள்ளும். உடனே என்னிடம் நீண்டகாலம் அடைகாக்கப்பட்டு இருந்த ஒரு தொழில் யோசனையை ஒரு முதலீடு கோரும் திட்டமாக (pitch deck) தயாரித்துக் கொண்டு நாட்டின் முக்கியமான ஏஞ்செல் கூட்டமைப்புகளுக்கு அனுப்பினேன். அவர்களுடன் சில நேர்காணல்களும் நடந்தன.
அந்நிறுவனங்கள் தற்போதைக்கு எனது துறை சார்ந்து முதலீடு செய்வதில்லை எனவும் வாய்ப்பு வரும்போது மீண்டும் பேசுவோம் என்றும் சொல்லி வணங்கின. கனவான்கள்! சளைக்காமல் தென்னிந்திய நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கத் தொடங்கினேன். எதிர்பார்த்த அளவுக்கு தகவல் தொடர்பையே காணோம். சரியென்று புத்தொழில் முனைவோர்-முதலீட்டாளர் சந்திப்பு எங்கு நடக்கிறது என்று தேடத்தொடங்கினேன்.
கண்டு கொண்டேன்.. கண்டு கொண்டேன்.. என் எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல தமிழகத்தின் முக்கிய நகரம் ஒன்றில் முதலீட்டுத் திருவிழா ஒன்று அறிவிக்கப்பட்டிருந்தது. உடனடியாகப் போய்ப் பதிவு செய்து கொண்டேன். எங்கு பார்த்தாலும் இளம் தொழில்முனைவோர். கண்கொள்ளாக் காட்சி. எனது திட்ட அறிக்கையுடன் எனது முறைக்காகக் காத்திருந்தேன். எனது முறையும் வந்தது.
நீயா நானா? - என்னை நேர்காணல் செய்தவருக்கு வயது 60-க்கு மேல் இருக்கும். எனது வணிகத் திட்டத்தை அலசினார். அப்புறம் நடந்ததுதான் வேடிக்கை. தமிழ்நாட்டில் எனது தொழில் யோசனை தொடர்பான துறை சார்ந்த ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, ‘அவரைத்தெரியுமா?’ என்று கேட்டார். 'நன்றாகத் தெரியுமே' என்றேன். உடனே, அந்நிறுவனத்தின் தயாரிப்பைச் சொல்லி,
“அது ரொம்ப நல்லா போகுதுல்ல” என்றார்.
நான், “இல்லை. தொடக்கத்தில் அவங்களுக்கு தங்களோட வாடிக்கையாளர்கள் யார் அப்படிங்கறதுல பெரிய குழப்பம் இருந்தது. 5 ஆண்டுகள் கழிச்சுத்தான் அவங்களுக்கு இலக்கு வாடிக்கையாளர் யார் (target group) அப்படின்னே தெரிய வந்துச்சு. அதன்பிறகு வேறு ஒரு திசை வழியில் பயணிக்கறாங்க. அவங்ககிட்ட மொத்தம் 10 தயாரிப்புகளுக்கு மேல இருக்கு. அதில் நீங்க சொல்ற தயாரிப்பு மட்டும் நட்டத்துலதான் இயங்கி வருது” யோசித்தார்.
“அவரோட போட்டிபோட்டு உங்களால ஜெயிக்க முடியுமா?”
“முடியும்னு நினைக்கறேன். ஏன்னா, ஒரு வணிகம் சிறந்த யோசனையால் மட்டும் வெற்றி பெறாது. சிறப்பான முறையில அதை நடைமுறைப்படுத்தனும். அதை எங்கள் குழுவால் செய்ய முடியும்”
”சரிதான். உங்களுக்கு வயசு என்ன?”
“35 ஆகுது சார்”
“ரொம்ப தாமதமா(!) தொழில் தொடங்க வந்திருக்கீங்க”
“உண்மைதான் சார். அதேநேரத்துல என்னோட குடும்ப, பொருளாதார பின்னணி போன்ற காரணங்
களும் இருக்கு சார். உங்களுக்குத் தெரியாததில்ல”
“ம்ம்ம்….உங்களுக்கு ஒன்னு தெரியுமா…? அந்தத் தொழிலதிபர் எனக்கு ரொம்ப நண்பர்”
“ரொம்ப மகிழ்ச்சி சார்”
“வாழ்த்துகள்!”
“நன்றிங்க சார்”
இவ்வாறாக முடிந்தது ஒரு முதலீட்டு தேவதைக்கும் (ஏஞ்சல் இன்வெஸ்டார்) எனக்கும் இடையிலான உரையாடல். நேர்காணலின் முடிவு? எனது வணிகத் திட்டம் நிராகரிக்கப்பட்டது. அதற்கு என்ன வேண்டுமானாலும் காரணம் இருக்கலாம். ஆனால், முதலீட்டு தேவதைகள்’ இன்னும் கொஞ்சம் கரிசனையோடு தொழில் முனைவோரை அணுகலாமே என்றுதான் எனக்குப் பட்டது.
இதுகுறித்த சில எண்ண, அனுபவப் பகிர்வு இதோ:
போகுமிடம் வெகுதூரமில்லை: *இன்றைய சூழலிலும்கூட நமது கல்லூரி மாணவர்களில் பெரும்பாலானோர் வளாக நேர்காணலில் லட்சங்களை எட்டிப்பிடிக்கத் துடிக்கின்றனரே யொழிய, சொந்தத் தொழில் லட்சியங்களை எட்டிப் பிடிக்க முயல்வதில்லை என்பது ஏமாற்றமாக இருக்கிறது.
*இச்சூழலிலும் இளைஞர் ஒருவர் சொந்தத்தொழில் கனவுடன் வருகிறார் என்று வையுங்கள். அவருக்கு முதலீட்டு உலகம் என்ற ஒன்று இருப்பதுதெரிந்திருந்தால்தான் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியும். அதன் பின்னர்தான் கதையே தொடங்கும். சென்னை ஏஞ்சல்ஸ், மும்பை ஏஞ்சல்ஸ் நெட்வொர்க் போன்றவை சிறந்த முறையில் செயல்பட்டு வந்தாலும் தேவைக்கும் அளிப்புக்கும் இடையிலான இடைவெளி பெரிது.
*முதலீட்டு நிறுவனங்களின் இணையதளங்கள் வாயிலாகவும் நீங்கள் முதலீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்தான். ஆனால், அவர்களின் விண்ணப்ப படிவங்கள் நீளமானவை. ஒவ்வொரு நிறுவனத்தின் விண்ணப்பமும் ஒவ்வொரு வடிவத்தில் இருக்கும். இதில் உள்ள சிரமங்களை அந்நிறுவனங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
*தமிழக அரசு ஒரு ஆறுதல் செய்தி தருகிறது. புத்தொழில் முனைவோரின் நலனுக்காக டான்சிம் என்ற அமைப்பை உருவாக்கி, தொழில் முனைவோரைப்பயிற்றுவித்து, அரசின் நிதியைப் பெற்றுத் தருகிறதுஅது. ஆனால் அதுகுறித்த விழிப்புணர்வு இங்கு போதாது. அவ்வமைப்பின் நிதியம் இன்னும் பெரிதாக்கப்பட வேண்டும். பெங்களூரு, மும்பையைப் போலதமிழகத்திலும் ஊர்தோறும் முதலீட்டுத் திருவிழாக்களையும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்த வேண்டும்.
மொத்தத்தில் ‘எளிதாகத் தொழில் தொடங்குதல் என்பது வெறும் முழக்கமாக இருக்கக்கூடாது. மாறாக, முதலீட்டாளர்கள், அரசு, புத்தொழில் முனைவோர் என்று எல்லோரும் சேர்ந்து எழுப்புகிற ஆரவாரமாக இருக்க வேண்டும். எது எளிதாக இருக்கிறதோ, அது அற்புதங்களைச் செய்யும் என்பதை முத்தரப்பும் புரிந்து கொள்ள வேண்டும்.
- வணிக இதழாளர்; editdurai@gmail.com