முதலீட்டை பரவலாக்குங்கள்

முதலீட்டை பரவலாக்குங்கள்
Updated on
2 min read

எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்கக் கூடாது என்றொரு பழமொழி உண்டு. இதற்கான காரணம், கூடை கை தவறி விழுந்தால் அனைத்து முட்டைகளும் உடைந்துவிடும். எனவே, அதனால் ஏற்படும் அபாயத்தை குறைக்க வெவ்வேறு கூடைகளில் முட்டைகளை வைத்திருப்பது புத்திசாலித்தனம் என்பது அந்த பழமொழியின் சாராம்சம் . ஒரு கூடை விழுந்தாலும் மற்ற முட்டைகள் பாதுகாப்பாக உள்ளது என்பதை நினைத்து நீங்கள் தைரியமாக இருப்பீர்கள். மன அழுத்தத்துக்கு ஆளாக மாட்டீர்கள்.

இதே பழமொழி முதலீட்டு நடவடிக்கைகளுக்கும் பொருந்தும். நம்மிடம் உள்ள முதலீடு எனும் சொத்துகளை பங்கு, கடன்பத்திரம், தங்கம், ரியல் எஸ்டேட் போன்ற பல்வேறு முதலீட்டு பிரிவுகளில் பிரித்து முதலீடு செய்வது அறிவார்ந்த செயலாக கருதப்படுகிறது. இவ்வகை செயல்பாடு இடர் தணிப்பை உருவாக்குவதுடன் ஆபத்து நம்மை ஒரேயடியாக தாக்கி விடாமல் தடுக்கவும் உதவுகிறது. பங்கு, கடன்பத்திரம் என முதலீட்டு திட்டங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான சந்தை சுழற்சிகளுக்கு உட்பட்டவை.

ஒரு முதலீட்டு திட்டத்தின் செயல்திறன் குறைவாக இருக்கும்போது, பிற முதலீட்டு திட்டங்கள் சிறப்பாக செயல்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. உதாரணமாக, பங்கு முதலீட்டு போர்ட்போலியோவில் தொய்வு ஏற்படும்போது தங்கம், கடன்பத்திரங்கள், ரியல் எஸ்டேட் போர்ட்போலியோக்கள் சிறப்பாக செயல்பட்டு அந்த இழப்பை ஈடு செய்ய உதவும். இதுபோன்ற சொத்து ஒதுக்கீடு முதலீட்டு உத்தியானது முதலீட்டாளர்களின் போர்ட்போலியோக்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. அதேநேரம், ஒரு நல்ல கவுரவமான வருமானத்தையும் வழங்குகிறது.

ஆனால், பெரும்பாலான முதலீட்டாளர்கள் பல்வேறு முதலீட்டு பிரிவுகளுக்கு அவ்வப்போது தாமாகவே சொத்துகளை பிரித்து ஒதுக்கி முதலீடு செய்வது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. ஏனெனில், பொருளாதார சூழல், சந்தையில் ஏற்ற இறக்கம், உலக நிலவரம் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியிருக்கும். முதலீட்டாளர்களுக்கு இந்த சுமையை போக்குவதற்கு பரஸ்பர நிதி திட்டங்கள் பெரிதும் உதவுகின்றன. இதனை விரிவான ஆராய்ச்சிகளின் அடிப்படையில் தொழில்முறையிலான நிதி மேலாண்மை நிறுவனங்கள் வழங்குகின்றன.

நாளைய சிறப்பான எதிர்காலத்துக்கு இன்று நம் கையில் உள்ள சொத்துகளை பரஸ்பர நிதி, பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட், மல்டி அசெட் ஃபண்ட் போன்ற திட்டங்களில் முதலீடு செய்வதே வியூகம் சார்ந்த ஆக்கப்பூர்வ செயல்முறையாக இருக்க முடியும். இதற்கு, ஐசிஐசிஐ புரூடென்ஷியல் அசெட் அலோகேட்டர் பண்ட் (எப்எப்ஓ) சிறந்த உதாரணமாக இருக்கும். இது, நடப்பாண்டு ஆகஸ்ட் 30 நிலவரப்படி 22.28 சதவீத ஓராண்டு வருமானத்தை வழங்கியுள்ளது. நீண்டகால அடிப்படையில் இதன் 3 ஆண்டு சிஏஜிஆர் 14.02 சதவீதமாகவும், 5-ஆண்டு சிஏஜிஆர் 15.21 சதவீதமாகவும் இருந்தது.

2024 பட்ஜெட் அறிவிப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வரி விதிப்பு முறைகளின் கீழ், நீண்டகால மூலதன ஆதாயங்களுக்கு 12.5 சதவீத வரி விதிக்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 24 மாதங்களுக்கு இந்த ஃபண்டை வைத்திருப்பதன் மூலம் வரிக்கு பிந்தைய வருமானத்தை அவர்கள் மேம்படுத்திக் கொள்ள முடியும்.

- கே.எஸ்.மகேஷ், நிறுவனர், ப்யூச்சர் வெல்த் இன்வெஸ்ட்மென்ட்ஸ்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in