நிதி நெருக்கடியில் போக்ஸ்வேகன்

நிதி நெருக்கடியில் போக்ஸ்வேகன்
Updated on
2 min read

ஜெர்மனியைச் சேர்ந்த போக்ஸ்வேகன் தயாரிக்கும் கார்கள் உலக அளவில் பிரசித்தம். போக்ஸ்வேகன் நிறுவனத்தின் தயாரிப்புகளான டிகுவான், கோல்ஃப், ஜெட்டா, பீட்டில், விர்டஸ், ஜிடிஐ, அமியோ உள்ளிட்ட கார்களுக்கு உலக அளவில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். 87 ஆண்டுகள் பழமைவாய்ந்த அந்த நிறுவனம் தற்போது நிதி நெருக்கடியை சமாளிக்க தனது சொந்த நாட்டில் உள்ள சில ஆலைகளை மூடுவது குறித்து பரிசீலித்து வருவதாக வெளியான தகவல் வாகன உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பணவீக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில் செலவுகளை குறைக்க இலக்கு நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்துக்கு போக்ஸ்வேகன் தள்ளப்பட்டுள்ளது. இல்லையெனில், அது இதர நிறுவனங்களுடன் போட்டியிட முடியாத சூழல் உருவாகி விடும் என்ற நிலை உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

கரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகு ஐரோப்பிய கார் சந்தை முன்பை விட சிறியதாகி உள்ளது. அதேசமயம், போக்ஸ்வேகன் நிறுவனத்தின் கார் உற்பத்தித் திறன் தேவைக்கு அதிகமாவே உள்ளது. இதனால், பணியாளர்களை குறைக்க வேண்டிய தேவை அந்நிறுவனத்துக்கு எழுந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு முன்பான 2019-ம் ஆண்டில் ஐரோப்பியர்கள் 1.57 கோடி கார்களை வாங்கினர். ஆனால், இப்போது வருடத்துக்கு அதைவிட 20 லட்சம் கார்களை குறைவாக வாங்குகிறார்கள் என 25 ஆயிரம் தொழிலாளர்கள் கூடியிருந்த வொல்ஃப்ஸ்பர்க் இல்லத்தில் பேசிய போக்ஸ்வேகன் தலைமை நிதி அதிகாரி அர்னோ ஆன்ட்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

போக்ஸ்வேகன் ஐரோப்பிய சந்தையில் ஏறத்தாழ கால் பங்கை கொண்டிருப்பதால் விற்பனை மந்த நிலை காரணமாக 5 லட்சம் கார்களை குறைக்க வேண்டிய கட்டாயத்துக்கு இப்போது தள்ளப்பட்டுள்ளது. இது, இரண்டு ஆலைகளின் உற்பத்திக்கு சமமானது. எனவே, சந்தை வாய்ப்பின்மை காரணமாகவே சிக்கன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதே தவிர, எல்லோரும் கூறுவது போல நிறுவனத்தின் மோசமான செயல்திறன் காரணமில்லை என்கிறார் ஆன்ட்லிட்ஸ்.

சீனாவின் போட்டி: போக்ஸ்வேகன் போன்ற ஜாம்பவான் நிறுவனங்கள் நெருக்கடிகளை சந்திப்பதற்கு ஐரோப்பிய சந்தையில் சீனா தனது பங்கை அதிகரித்து வருவது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. குறிப்பாக, மின்சார வாகனங்களின் விற்பனையில் சீன நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது.

அதனால், போக்ஸ்வேகன் மின்சார கார் விற்பனையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதிக பேட்டரி செலவுகள், நுகர்வோர் மானியங்களை திரும்பப் பெறுதல், பொது சார்ஜிங் கட்டமைப்புகளை உருவாக்குவதில் தாமதம் உள்ளிட்டவை காரணமாக ஐரோப்பாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை பலவீனமான நிலையில் உள்ளது. இது, போக்ஸ்வேகன் போன்ற நிறுவனங்களின் லாப வரம்பில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

சீனாவில் டஜன் கணக்கான கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஐரோப்பாவுடன் ஒப்பிடும்போது மிகவும் மலிவான விலையில் மின்சார கார்களை தயாரிக்கின்றன. அந்த கார்கள் ஐரோப்பிய சந்தையில் அதிகளவில் விற்கப்படுகின்றன. இதனால், ஜெர்மனியின் பிஎம்டபிள்யூ மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் போன்ற நிறுவனங்கள் போட்டியிட முடியாமல் அவற்றின் லாபமும் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

1.20 லட்சம் பணியாளர்கள்: போக்ஸ்வேகன் ஜெர்மனியில் 10 ஆலைகளை கொண்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள 6.84 லட்சம் தொழிலாளர்களில் 1.20 லட்சம் பேர் ஜெர்மனியில் மட்டும் பணிபுரிகின்றனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனியின் பொருளாதார வளர்ச்சியின் அடையாளமாக போக்ஸ் வேகன் திகழ்கிறது.

இத்தனை புகழ்வாய்ந்த போக்ஸ்வேகன் நிறுவனத்தை தாமதமானாலும் அதன் நிர்வாகம், ஊழியர் பிரதிநிதிகள், அரசு ஆகியவை இணைந்து பேச்சுவார்த்தை மூலம் ஆலையை மூடும் பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே அதன் வாடிக்கையாளர்களின் தற்போதைய எதிர்பார்ப்பு.

இதனிடையே, ஜெர்மனியின் எம்டென் நகரில் உள்ள போக்ஸ்வேகன் தொழிற்சாலையை சமீபத்தில் பார்வையிட்ட அந்நாட்டு பொருளாதார அமைச்சர் ராபர்ட் ஹாபெக், தொழிற்சாலைகளை மூடும் முடிவை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் அந்நிறுவனத்துக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

- rajanpalanikumar.a@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in