

சூரியகாந்தி பூ, நமக்கு கற்றுத் தரும் பாடங்கள் ஏராளம். ஒவ்வொரு முறையும் சமையலுக்கு அதைப் பயன்படுத்தும்போது, இந்தப் பாடங்களையும் நினைத்துக் கொண்டால், நமது வாழ்க்கை பயனுள்ளதாக அமையும்.
பொறுமை தேவை: பொதுவாக விதைகள், விதைத்த 10 நாளிலிருந்து 30 நாட்களுக்குள் வளர்ந்து விடும். ஆனால் சூரியகாந்தி விதையோ, விதைத்த நாளிலிருந்து பூவாக மலர்வதற்கு அதிகபட்சம் 120 நாட்கள் வரை ஆகும். வாழ்க்கையில் பொறுமை அவசியம் என்பதை நமக்குச் சொல்லிக் கொடுக்கிறது சூரியகாந்தி.
எந்த மண்ணிலும் வளரும்: சூரியகாந்தி விதைகள், கரிசல் மண்ணில் சிறப்பாக வளரும் என்றாலும், பொதுவில் எந்த மண்ணிலும் அவை வளரும் தன்மை கொண்டவை. மண்ணில் கொஞ்சம் ஈரப்பதம் இருந்தால் போதும். இதுபோல் நாமும் எங்கோ ஒரிடத்தில் படித்து, எங்கோ ஓரிடத்தில் வேலை பார்த்து, எங்கோ தொழில் தொடங்கி வாழ்க்கையில் செட்டிலாக வேண்டி இருப்பதால் எல்லா மண்ணிலும் நம்மை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தை சூரியகாந்தியிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
உயரும் தன்மை: சூரியகாந்தி விதைகள் வளர்வதற்கு நாட்களானாலும், வளரத் தொடங்கியவுடன் விறுவிறுவென மிக உயரமாக வளரும். தூரத்தில் இருந்து பார்த்தாலும் சூரியகாந்தி பூக்களை நாம் எளிதில் அடையாளம் கண்டுவிடலாம். அதுபோல் நாமும் நமது துறையில் உயர்வான இடத்தைப் பெற வேண்டும். எவர், எங்கிருந்து பார்த்தாலும் நம்முடைய வளர்ச்சி பிறருக்குத் தென்பட வேண்டும்.
நிறைய விதைகளை உருவாக்கும்: ஒவ்வொரு சூரியகாந்தி பூவும் இந்த உலகுக்கு பல சூரியகாந்தி விதைகளை உருவாக்கி விட்டுச் செல்லும். அதுபோல் நாமும் நமக்கு கீழ் பணியாற்றநல்ல பணியாளர்களை பயிற்றுவிக்க உதவ வேண்டும்.
சக்தியைப் பகிர்தல்: இந்த ஒரு குணம்தான் மற்ற பூக்களைவிட சூரியகாந்தி பூவை பன்மடங்கு உயர்த்திக் காண்பிக்கிறது. பொதுவாக சூரியன் சில நாட்கள் தோன்றாதபோது, சூரியகாந்தி பூக்கள் தரையை நோக்கி தாழ்ந்து இருப்பதில்லை. அவை அடுத்து இருக்கும் சூரியகாந்தி பூக்களை பார்த்த வண்ணம் பொழுதைக் கழிக்கும்.
அதாவதுஎந்த சூரியகாந்தி பூவிடம் சக்தி குறைவாக இருக்கிறதோ, அதற்கு சக்தி கூடுதலாக உள்ள இன்னொரு பூ, தன்னுடைய சக்தியைக் கொடுத்து, சூரியன் வரும்வரை அதை வாட விடாமல் பாதுகாக்கும்.
இந்த கொடுக்கல் குணம்தான் சூரியகாந்தி பூவை உயரத்தில் நிறுத்துகிறது. நாமும் இயலாதோருக்கு முடிந்த அளவு உதவி செய்து நம்முடைய வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திக் காண்பிக்கிற குணத்தை அதனிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
- rkcatalyst@gmail.com