

பொதுமக்கள் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்வது கணிசமாக அதிகரித்து வருகிறது. அதிலும் பங்குச் சந்தை சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களுக்கு முதலீட்டாளர்களிடம் வரவேற்பு அதிகரித்து வருகிது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இத்தகைய திட்டங்களில் செய்த ஒட்டுமொத்த முதலீடு ரூ.72,542 கோடி. இதில் முதலீட்டாளர்கள் திருப்பி எடுத்தது (வித்ட்ரா) போக நிகர முதலீடு ரூ.38,239 கோடி ஆகும்.
பங்குச் சந்தை சார்ந்த பரஸ்பர திட்டங்களில் இந்த ஆண்டில் ஜூன் மாதத்தில் ரூ.81,145 முதலீடு குவிந்தது. நிகர முதலீடு ரூ.40,608 கோடியாக இருந்தது. இதுதான் இதுவரை பதிவான அதிகபட்ச நிகர முதலீடு. அதன் பிறகு, கடந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் 2-வது அதிகபட்ச அளவாக ரூ.38,239 கோடி நிகர முதலீடு செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் முதலீடு செய்யும் (எஸ்ஐபி) திட்டம் மூலமான முதலீடு முந்தைய ஜூலை மாதத்தை காட்டிலும் 1 சதவீதம் உயர்ந்துமுன்னெப்போதும் இல்லாத அளவாக ரூ.23,547 கோடியைத் தொட்டது. ஆறு புதிய திட்டங்கள் அறிமுகம் (என்எஃப்ஓ) மூலமாக கடந்த மாதம் ரூ.11,067 கோடி திரட்டப்பட்டது. அவற்றில் 5 என்எஃப்ஓ-க்களின் வசூல் மட்டும் 92 சதவீதமாக இருந்தது.
நடப்பு 2024-25 நிதியாண்டில் இதுவரையில் (5 மாதங்கள்) பங்குச் சந்தை சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களின் மூலம் ரூ.1.7 லட்சம் கோடி திரட்டப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டு முழுவதும் (12 மாதங்கள்) திரட்டிய ரூ.1.8 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது 92 சதவீதம் என்பது கவனிக்கத்தக்கது. எஞ்சியுள்ள மாதங்களையும் கணக்கில் கொள்ளும்போது நடப்பாண்டில் இத்திட்டத்தில் வசூலாகும் தொகையானது ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டும் என்பது சந்தை வட்டாரத்தினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதேபோன்று, பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களில் நிர்வகிக்கப்படும் தொகை என்பது முதன்முறையாக ஆகஸ்ட் மாதத்தில் ரூ.30 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்த துறையில் நிர்வகிக்கப்படும் மொத்த நிதியில் பங்கு பரஸ்பர நிதி திட்டங்களின் பங்களிப்பு மட்டும் 45 சதவீதம் அளவுக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் மாத இறுதி நிலவரப்படி, கடன்பத்திரங்கள், பங்குச்சந்தை உட்பட ஒட்டுமொத்தமாக அனைத்து பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ள தொகை ரூ.66.7 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த 2010-ம் ஆண்டு ரூ.10.13 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.