

ரிலையன்ஸ் குழுமத்தின் 47-வது ஆண்டு பொதுக்கூட்டத்தில், அதன் தலைவர் முகேஷ் அம்பானி மிகுந்த முகமலர்ச்சியோடு, 'ரிலையன்ஸ் குடும்பத்துக்கு டிஸ்னியை வரவேற்கிறோம்’ என்று சொன்னார். அப்போது அதிகாரிகளும் ஊழியர்களும் ஆரவாரமாக அதனை வரவேற்றனர். உடனே ஊடகங்களில் முதலிடம் பிடித்தது அந்த செய்தி. இதற்கு காரணம்? இருக்கிறது.
ரிலையன்ஸ் குழுமத்தின் ‘வயோகாம் 18’ மற்றும் வால்ட் டிஸ்னியின் இந்திய பிரிவான ‘டிஸ்னி ஸ்டார்' ஆகியவை இணைந்து புதிய நிறுவனத்தை தொடங்க திட்டமிட்டுள்ளன. இந்த இணைப்பின் மதிப்பு ரூ.70,352 கோடி. புதிய நிறுவனத்தில் ரிலையன்ஸின் பங்கு 16.34% ஆகவும் வயோகாம் 18 நிறுவன பங்கு 46.82% ஆகவும் (இதுவும் ரிலையன்ஸ் குழும நிறுவனம்தான்) டிஸ்னியின் பங்கு 36.84% ஆகவும் இருக்கும். ஆக, பெரும்பான்மைப் பங்குகளை வைத்திருப்பதன் மூலம் புதிய நிறுவனம் ரிலையன்ஸின் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
புதிய நிறுவனத்தின் இயக்குநரவையில் 5 பேர் ரிலையன்ஸ் குழுமத்திலிருந்து வருவர். 3 பேர் டிஸ்னி குழும நபர்களாக இருப்பர். இருவர் வெளி நபர்களாக இருக்கப் போகிறார்கள். புதிய நிறுவனத்தில் ரிலையன்ஸ் ரூ.11 ஆயிரம் கோடியை முதலீடு செய்யவிருக்கிறது. டிஸ்னி, உள்ளடக்கம் (Content) தொடர்பான உரிமங்களை புதிய நிறுவனத்துக்கு வழங்கும். கதை தெளிந்த நீரோடை போலப் போகிறதே என்று பார்க்கிறீர்களா? இதோ இருக்கிறது ஒரு திருப்புமுனை.
வணிகத் துறையில் ஏகபோகத்தைக் கட்டுப்படுத்தும் இந்திய போட்டிகள் ஆணையம் (Competition Commission of India) இந்த இணைப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இந்திய பொழுதுபோக்கு ஊடகத் துறையை உற்று நோக்குவோரின் கேள்வியை அது எதிரொலித்தது என்றே சொல்லலாம். எதற்காக இக் கேள்விகள் என்று பார்க்க வேண்டி இருக்கிறது.
திரையரங்குகள் நிலை: இன்று திரையரங்குகளுக்கு திரைப்படம் பார்க்க மக்கள் அதிகம் வருவதில்லை என்ற அங்கலாய்ப்பு தொடர்ச்சியாக பெரிய திரை உலகில் இருக்கிறது. அதில் உண்மை இல்லாமல் இல்லை. திரையரங்க நுழைவு சீட்டு சுண்டைக்காய் என்றால் பாப்கான், இதர நொறுக்குத் தீனிகள், போக்குவரத்து, வாகன நிறுத்துமிட கட்டணம் முதலியவை சுமை கூலி போல. முன்னது கால்வாசி பணம். பிந்தையது முக்கால்வாசி பணம். இதற்கு பயந்து கொண்டுதான் நிறைய பேர் திரையரங்குகளுக்கு செல்வதை தவிர்த்து விட்டு ஓடிடி பக்கம் ஒதுங்கி இருக்கிறார்கள்.
கிரிக்கெட் முதலிய விளையாட்டுப் போட்டிகளை ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து நேரில் பார்க்க இயலாதவர்கள் விளையாட்டு சேனல்கள், ஓடிடி தளங்களில் நேரடி ஒளிபரப்புகளை கண்டு களிக்கின்றனர். இதன் விளைவாக திரையரங்க அனுபவத்துக்காக திரைப்படங்களைத் தனித்துவமாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. திரையரங்குகளும் தரம் உயர்த்தப்படுகின்றன. அது ஒரு தனிக்கதை.
ஓடிடி தளங்களின் வருகை, பொழுதுபோக்கு உள்ளடக்க நுகர்வில் பெரிய தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஓடிடி-யின் தயவால் தாய்மொழி மட்டுமின்றி ஆங்கிலம், இந்தியாவின் பல் வேறுபட்ட மொழிகளில் கிடைக்கும் அனைத்து வகையான திரைப்படங்களையும், தொடர்களையும் ஒரு பார்வையாளரால் பார்க்க முடிகிறது.
சமீபத்தில் வெளிவந்த காந்தாரா, மஞ்ஞும்மல் பாய்ஸ், பிரம யுகம், ஆவேசம், மஹராஜ் தொடங்கி பல்வேறு வேற்று மொழிப்படங்
களுக்கு புதிய சந்தை உருவாகியிருக்கிறது. அதாவது, சின்னத்திரையில் (அல்லது உங்கள் செல் திரையில்) ஒரு பான் இந்தியா சினிமா. இன்றைக்கு எந்த ஒரு படைப்பாளியும் தனது தாய்மொழியை மட்டும் மனதில் வைத்து படைப்புகளை உருவாக்குவதில்லை மாறாக, மற்ற மொழிகளின் பார்வையாளர்களையும் கணக்கில் கொண்டு திரைப்படங்கள், தொடர்களை தயாரிக்கின்றனர்.
இவ்வாறு புதிதாக உருவாகியுள்ள சந்தையை அனைத்து திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ள நினைப்பது இயல்பானதே. அந்த வகையில் ஒவ்வொரு ஓடிடி நிறுவனமும் தனக்கென தனிப்பட்ட உள்ளடக்கங்களைக் கொண்டு, தனித்து வாடிக்கையாளர்களை ஈர்க்க முயல்கிறது. எல்லாம் நல்லதுக்குத்தானே என்று நீங்கள் நினைக்கலம்.
ஆனால், பெருவணிக உலகம் இங்கும் தனது கார்ப்பரேட் வித்தைகளைக் காட்டத் தொடங்குகிறது. மற்ற தொழில் நிறுவனங்களைப் போலவே இதிலும் கையகப்படுத்துதல்-இணைத்தல் நடவடிக்கைகளை செய்தால் என்ன என்று அவை யோசிக்கத் தொடங்கி இருக்கின்றன. அதாவது 'சக்திவேல் வீட்டில் பெண் எடுத்தால் பணமும் பணமும் சேருமல்லவா’ என்று 'சூர்யவம்சம்' தர்மலிங்கம் நினைப்பது மாதிரி.
அப்படித்தான் டிஸ்னி ஸ்டாரை நாம் ஏன் கையகப்படுத்தக் கூடாது என்ற யோசனை முகேஷ் அம்பானிக்கு வந்தது. இது தொடர்பாக காய் நகர்த்தத் தொடங்கினார். தற்போது காய் கனிந்து பழமாகியிருக்கிறது. ஊர்ப் பெரியவர் வீட்டு விசேஷம் என்றால் ஊகங்களுக்கும் விமர்சனங்களுக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்குமா? இந்த கையகப்படுத்தல் யோசனை வெளியாகத் தொடங்கியதிலிருந்து ’இந்த இணைப்பு இந்த துறையில் ஏகபோகத்தை உருவாக்கி விடும்’ என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கவலைகள் வரத் தொடங்கி விட்டன.
ஏனென்றால் டிஸ்னி ஸ்டார் உள்ளடக்க தயாரிப்பிலும் சரி கைவசம் உள்ள உள்ளடக்கத்திலும் சரி எவ்வளவு பெரிய நிறுவனம் என்பது உலகம் அறிந்த உண்மை. அதேபோல, வயோகாம் 18 நிறுவனத்தின் கீழ் உள்ள சேனல்கள் ஒவ்வொன்றுமே ஆலமரம் போல பரவி தங்களை விரிவாக்கி வைத்திருக்கின்றன. இவ்விரண்டு நிறுவனங்களும் இணையும்போது மிகப்பெரிய ஊடகமாக ரிலையன்ஸ் உருவெடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
நாட்டின் மிகப்பெரிய ஊடகம்: இந்த சூழ்நிலையில்தான் இந்திய போட்டி ஆணையம் தனது கவலையை வெளிப்படுத்தி இருந்தது. ஏற்கெனவே வயோகாம் நிறுவனமும் டிஸ்னி ஸ்டாரின் ஸ்போர்ட்ஸ் சேனலும் விளையாட்டு சேனல் துறையில் பெரும்பங்கை வகிக்கின்றன. இதனைக் குறிப்பிட்டு தற்போதைய இணைப்பு நடவடிக்கை ஒரு முற்றுரிமை (monopoly) நிலையை நோக்கிச் சென்று விடக்கூடாது என்று அது ரிலையன்ஸ் குழுமத்துக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது. மற்ற சேனல்களை விடுங்கள். விளையாட்டு என்ற சந்தை நிலவரமே இன்று அதகளமாகத்தான் இருக்கிறது.
வயோகாம் நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் 18 சேனலும் அதன் ஒடிடி தளமான ஜியோ ஸ்போர்ட்ஸும் விளையாட்டு ஒளிபரப்புச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இத்தோடு டிஸ்னி ஸ்டாரின் ஹாட்-ஸ்டார் ஓடிடி இணைந்தால் அது விளையாட்டு தொடர்பான ஒப்பந்த உரிமங்களைப் பெறுவதில் மிகப்பெரிய ஏகபோகத்தை ஏற்படுத்திவிடும் என்றும் விளம்பரங்களை பெறுவதிலும் மற்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டி உருவாகும் என்றும் அதில் விரிவாக குறிப்பிட்டு இருக்கிறது. இது குறித்த விளக்கத்தை 30 நாட்களுக்குள் தருமாறு ரிலையன்ஸுக்கு இந்திய போட்டிகள் ஆணையம் கடிதம் மூலம் தெரிவித்திருந்தது.
இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட இந்திய போட்டிகள் ஆணையமும் தேசிய நிறுவன சட்டதீர்ப்பாயமும் (NCLT) வயோகாம் 18 மற்றும் டிஸ்னி ஸ்டார் இணைப்புக்கு ஒப்புதல் கொடுத்து விட்டன என்பதுதான் சுவையான சேதி. இனி ரிலையன்ஸின் பார்வையாளர் எண்ணிக்கை 75 கோடியாக உயரவிருக்கிறது.
பல்வேறு ஓடிடி தயாரிப்புகள் இந்தியாவிலேயே படம் பிடிக்கப்படும். 120 சேனல்களும் இரண்டு ஸ்ட்ரீமிங் சேனல்களுமாக மிகப்பெரிய வாய்ப்பு பார்வையாளனுக்குக் கிடைக்க இருக்கிறது. ஐபிஎல் முதல் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் உரிமைக்கான போட்டி, விளம்பரங்களைக் கையகப்படுத்தும் போட்டியில் ரிலையன்ஸின் கை ஓங்கி இருக்கப் போகிறது.
விளையாட்டு சேனல் பார்வையாளர்களின் பெரும்பான்மை, ரிலையன்ஸின் புதிய நிறுவனத்தின் கையில்தான் (70%க்கும் மேல்) இருக்கும். அத்துடன் இந்தியாவின் மிகப்பெரிய ஊடக நிறுவனமாக இது உருவெடுக்கும்
போட்டிக்கு தயாராக வேண்டியதுதான்: வயோகாம் 18 மற்றும் டிஸ்னி ஸ்டார் நிறுவனங்களின் (ரிலையன்ஸ்-டிஸ்னி) புதியகூட்டு நிறுவன உருவாக்கத்தால் யாருக்கு லாபம் என்று பார்க்க வேண்டியிருக்கிறது. கண்ணை மூடிக்கொண்டு ரிலையன் ஸுக்குத்தான் லாபம் என்று சொல்லிவிடலாம்.
டிஸ்னியின் வசமுள்ள கிரிக்கெட் போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமங்கள் முதல் சர்வதேச தரத்திலான சேனல்கள், ஓடிடி தள உள்ளடக்கங்கள் புதிய நிறுவனத்துக்கு தானாகவே வந்துவிடும். ஜியோ சினிமாவின் கையிலுள்ள திரைப்படங்கள், வெப் சீரிஸ், ஆவணப்படங்கள் ஒருபுறம் வலுசேர்க்கும். ஆக, பொழுதுபோக்குத் துறை, விளையாட்டுத் துறை உள்ளடக்கத்தின் ஏகபோக நிறுவனமாக புதிய நிறுவனம் உருவெடுப்பதை இனி எவராலும் தடுக்க முடியாது. இத்துறை சார்ந்த மற்ற நிறுவனங்கள் கடுமையான போட்டிக்கு தயாராக வேண்டியதுதான்.
புதிய நிறுவனத்தின் மூலம் பலருக்கும் வேலை, தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதையும் மறுக்க முடியாது. இந்திய பொழுதுபோக்கு சந்தை ஏறுமுகத்தில்தான் இருக்கிறது. நிதியாதாரம் பலமாக உள்ள நிறுவனங்கள், சிறிய நிறுவனங்களைக் கையகப்படுத்துவதன் மூலம் ஏகபோகத்தை உருவாக்குவது ஒரு பக்கம் என்றால், இரு பெரிய நிறுவனங்கள் இணைவதன் மூலம் இன்னும் பலமான ஏகபோக நிலை உருவாகவே செய்யும்.
இதனால் ஏற்படும் நல்ல விஷயங்கள் வாடிக்கையாளர்களுக்கு போய்ச்சேரும். ஆனால் கட்டண நிர்ணயம்? கொஞ்சம் கவலையாகத்தான் இருக்கிறது இல்லையா! அச்சம் வேண்டாம். அதை சந்தை பார்த்துக் கொள்ளும். ஏற்கெனவே தனியார் செல்போன் சேவை நிறுவனங்களின் கட்டண உயர்வை அடுத்து மக்கள் சாரை சாரையாக பி.எஸ்.என்.எல்.லுக்கு மாறவில்லையா! அதுதான் சந்தையின் தன்மை. பொறுத்திருந்து பார்ப்போம்.
- வணிக இதழாளர்; editdurai@gmail.com