

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியப் பங்குச் சந்தையில் புதிய பங்கு வெளியீட்டை (ஐபிஓ) அதிகம் பார்க்க முடிந்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 நிறுவனங்கள் ஐபிஓ மூலம் ரூ.17,047 கோடி நிதி திரட்டியுள்ளன. இது கடந்த 27 மாதங்களில் இல்லாத உச்சம் ஆகும். இந்த ஆண்டில் இதுவரையில், 56 நிறுவனங்கள் ஐபிஓ மூலம் ரூ.65,000 கோடி நிதி திரட்டியுள்ளன. 2023-ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 20 நிறுவனங்கள் ஐபிஓ மூலம் ரூ.15,051 நிதி திரட்டி இருந்தன.
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சி ஆட்சிக்கு வரும், அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்ற குழப்பம் முதலீட்டாளர்களிடையே நிலவியது. இதன் காரணமாக நடப்பு நிதி ஆண்டின் முதலாம் காலாண்டில் நிறுவனங்கள் புதிய பங்கு வெளியிட்டில் ஈடுபட தயக்கம் காட்டின. இந்நிலையில், ஜூன் மாதம் தேர்தல் முடிவு வெளியாகி மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு புதிய பங்கு வெளியீடு மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்தது. ஆகஸ்டில் அது உச்சம் தொட்டுள்ளது.
இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக இருப்பதாலும், இந்தியப் பங்குச் சந்தை ஏற்றம் கண்டு வருவதாலும், கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் ஆரோக்கியமாக இருப்பதாலும் நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டில் ஆர்வம் காட்டுகின்றன என்று இத்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அமெரிக்க மத்திய வங்கி (பெடரல் ரிசர்வ்) வட்டி விகிதத்தை குறைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் இந்தியா உட்பட சர்வதேச பங்குச் சந்தைகள் ஏற்றம் அடையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதுவும் புதிய பங்கு வெளியீடு அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதிக நிதி திரட்டிய நிறுவனங்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஐபிஓ மூலம் அதிகபட்சமாக ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி ரூ.6,145 கோடி நிதி திரட்டியுள்ளது. பிரைன் பீ சொல்யூசன் ரூ.4,193 கோடி, பிரீமியர் எனர்ஜிஸ் ரூ.2,830 கோடி நிதி திரட்டியுள்ளன.
சிகால் இந்தியா (Ceigall India) ரூ. 1,253 கோடி,பஜார் ஸ்டைல் ரீடெய்ல் ரூ. 835 கோடி, ECOS இந்தியா மொபிலிட்டி & ஹாஸ்பிடாலிட்டி ரூ. 600 கோடி, மற்றும் இண்டர்ஆர்க் பில்டிங் ப்ராடெக்ட்ஸ் ரூ.600 கோடி நிதி திரட்டியுள்ளன.
அதிக ஆர்வம் ஏன்? - புதிய பங்கு வெளியீட்டுக்குப் பிறகு பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் முதல் நாளில் 20 முதல் 100 சதவீதம் வரை அந்தப் பங்கின் விலை உயர்கிறது. இதனால் புதிய பங்கு வெளியீட்டுக்கு பல முதலீட்டாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பிக்கின்றனர்.
செப்டம்பரில் வெளியாகும் டாப் 10 ஐபிஓ (ரூ.கோடியில்)