வெற்றி பெற வேண்டுமா... நண்பர்களை அளவிடுங்கள்...

வெற்றி பெற வேண்டுமா... நண்பர்களை அளவிடுங்கள்...
Updated on
1 min read

உங்கள் நண்பர்களை மாற்ற வேண்டிய தருணம் இது என்று சொன்னால், நம்மை உதைக்க வருவீர்கள். இருப்பினும் தொடர்ந்து படியுங்கள். ‘‘வெற்றி பெற விரும்புபவர்கள் எப்போதும் தங்களைச் சுற்றி ஒரு பாசிட்டிவான சூழலை உருவாக்கிக் கொள்ள வேண்டியது அவசியம்’’ என்கிறார், ‘ஆட்டிடியூட் இஸ் எவ்ரிதிங்' (Attitude Is Everything) என்னும் தன்முனைப்பு நூலை எழுதிய ஜெஃப் கெல்லர் (Jeff Keller).

உற்சாகமாக இருத்தல், பாசிட்டிவாகச் சிந்தித்தல், கடுமையாக உழைத்தல், தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருத்தல் எனப் பல விஷயங்கள் வெற்றிக்கு அவசியம் என்றாலும், ஒருவரைச் சுற்றிலும் எப்போதும் பாசிட்டிவான நண்பர்களும் கட்டாயம் உடன் இருக்க வேண்டும் என்பது அவரது கருத்து. ‘‘நீங்கள் எந்த 5 பேருடன் அதிக நேரத்தைச் செலவிடுகிறீர்களோ, அவர்களின் சராசரி தான் நீங்கள்’’ என்கிறார், தன்னம்பிக்கைப் பேச்சாளர் ஜிம் ரோன்.

நீங்கள் நாள்தோறும் எந்தெந்த நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுகிறீர்கள் என்று யோசித்துப் பாருகள். அவர்களின் குணமே உங்களிடத்திலும் பிரதிபலிப்பதைகாண்பீர்கள். அவர்கள் பாசிட்டிவாக இருந்தால், நீங்களும் பாசிட்டிவாக இருப்பீர்கள்.

நீங்கள் அடைய நினைக்கும் கனவுகளுக்கும், இலக்குகளுக்கும் அவர்கள் பொருத்த மானவர்களாக இல்லை என்றால், அவர்களை மாற்றிவிட்டு புதிய நண்பர்களோடு பழகத்தொடங்குங்கள். உங்களைவிட அனுபவத்தில் உயர்ந்த, சிந்தனையில் சிறந்த, செல்வாக்கில்மேலான நண்பர்களுடன் நீங்கள் பழகினால் அது உங்கள் வளர்ச்சிக்கு பன்மடங்கு உதவும்.

உலகப் புகழ் பெற்ற இன்போசிஸ் நிறுவனம், நாராயணமூர்த்தி என்ற தனி மனிதரால் தொடங்கப்பட்டதில்லை. நந்தன் நிலகேணி, கிரிஷ் கோபாலகிருஷ்ணன், ஷிபுலால், தினேஷ், ராகவன், அசோக் அரோரா ஆகிய 6 நண்பர்களுடன் சேர்ந்து தான் அவர் அதைத் தொடங்கினார். அதுபோல், பிட்ஸ், பிலானி கல்வி நிறுவனத்தில் ஒன்றாகப் படித்த பணிந்தர சாமா, சுதாகர் பசுபுணுரி, சரண் பத்மராஜூ ஆகிய நண்பர்கள் இணைந்து தொடங்கியதுதான் ரெட் பஸ் மொபைல் செயலி நிறுவனம்.

நமது வெற்றிக்கு நம்மைச் சுற்றி இருக்கும் நண்பர்களும் முக்கியக் காரணம் என்பதால், அவர்களை அவ்வப்போது ஆடிட் செய்து, அளவிட வேண்டியதுமுக்கியம். வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சியின்போதும், புதிய புதிய நண்பர்களை வெற்றியாளர்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள்.

அதுவே அவர்களை உச்சிக்கு இட்டுச் செல்கிறது. அதற்காக, பழைய நண்பர்களை ஒதுக்கி விட வேண்டும் என்று அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. புதிய நண்பர்களோடு தொடர்ந்து பழகிக் கொண்டே இருக்க வேண்டியது ஒவ்வொருவரின் வளர்ச்சிக்கும் அவசியம் என்பதைப் புரிந்து கொண்டால் போதும். வெற்றி நிச்சயம் !

- rkcatalyst@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in