நியமனதாரர், வாரிசுதாரர்: யாருக்கு முழு உரிமை

நியமனதாரர், வாரிசுதாரர்: யாருக்கு முழு உரிமை
Updated on
2 min read

திரு.ரகுபதி ஒரு முன்னணி வங்கியில் சில வைப்பு கணக்குகளை (டெபாசிட் வைத்திருந்தார். இந்தக் கணக்குகள் அனைத்தும் அவருடைய ஒரே பெயரில் இருந்தன. குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவு இல்லாததால், அனைத்து வங்கிக் கணக்குகளுக்கும், தனது நண்பர் குருவை நியமனதாரராக (Nominee) நியமித்திருந்தார்

ரகுபதியின் மரணத்துகுப் பிறகு, அவருடைய பெயரில் உள்ள அனைத்து டெபாசிட்களையும் பெறுவதற்காக குரு வங்கியை அணுகினார். இதற்கிடையில் ரகுபதியின் மனைவி மற்றும் குழந்தைகளும் வங்கியை அணுகி தொகையை கோரினர்.

அனுபவிப்பதற்கான உரிமை அல்ல.. டெபாசிட் கணக்குகளுக்கு, குடும்ப உறுப்பினர்களை நியமனதாரர்களாக நியமிக்காததால் அவர்களுக்கு அந்த டெபாசிட்களுக்கு உரிமை இல்லை என்று சிலர் நினைக்கலாம். ஆனால் சட்ட நிலை வேறு. நாமினேஷன் என்பது உண்மையில் டெபாசிட் தொகையைப் பெறுவதற்கான ஒரு ஏற்பாடு மட்டுமே, அந்த தொகையை அனுபவிப்பதற்கான உரிமை அல்ல. நியமனதாரர் டெபாசிட் தொகையை பெற மட்டுமே முடியும். மற்றபடி டெபாசிட் தொகைக்கு உரிமை இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு மட்டுமே உரியது.

எவ்வாறாயினும், வங்கிகள் நியமனதாரருக்கு டெபாசிட் தொகையை வழங்கினால் அவைகளின் பொறுப்பு முடிந்துவிடும். ஆனால் சட்டப்பூர்வ வாரிசுகள் உரிமை கோரினால், நியமனதாரருக்கு அந்தத் தொகையை வங்கிகள் வழங்காது. இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவைப் பெற்று வருமாறு சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு வங்கி அறிவுறுத்தும்.

புதிய மசோதா அறிமுகம்: ஆகஸ்ட் 9-ம் தேதி, நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2024-ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி உள்ளார். இது வங்கிக் கணக்குகளின் நாமினேஷன் விதிகளில் (வைப்புகள், லாக்கர்கள் போன்றவை) சில மாற்றங்களைச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வங்கிக் கணக்கில் தற்போது ஒரு கணக்குக்கு ஒரு நாமினி மட்டுமே இருக்க முடியும். திருத்தப்பட்ட விதி நடைமுறைப்படுத்தப்படும்போது, 4 பேர் வரையில் நியமனதாரர்களை நியமிக்க முடியும். மேலும் அதுபோன்ற நியமனங்களை ஒரே சமயத்திலோ அல்லது தொடர்ச்சியாகவோ நியமிக்க முடியும். முன்மொழியப்பட்ட திருத்தத்தில் உள்ள மற்ற விதிகளைப் பார்ப்போம்.

முக்கிய அம்சங்கள்:

# நியமனதாரராக நான்கு நபர்களுக்கு மேல் நியமனம் செய்ய முடியாது.
# ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை ஒரே நேரத்திலோ அல்லது அடுத்தடுத்து தொடர்ந்தோ நியமிக்கலாம்.
# ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு ஆதரவாக தொடர்ச்சியாக நாமினி நியமனம் செய்யப்பட்டால், குறிப்பிடப்பட்ட முன்னுரிமை வரிசையில் ஒருவருக்கு மட்டுமே நாமினேஷன் பொருந்தும்.
# ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு ஆதரவாக நியமனம் செய்யப்பட்டால், அந்த நியமனம் அறிவிக்கப்பட்ட விகிதாச்சாரத்தில் அத்தகைய நபர்கள் அனைவருக்கும் பொருந்தும்.
# அவ்வாறு நியமிக்கும்போது நியமனம் ஒவ்வொரு நாமினிக்கும் சாதகமாக சதவீத அடிப்படையில் வைப்புத் தொகையின் விகிதத்தை வெளிப்படையாகக் குறிப்பிட வேண்டும்.
# மொத்த வைப்புத் தொகைக்கோ அல்லது கணக்குக்கோ நாமினேஷன் செய்யப்பட வேண்டும்.
# வங்கியிலிருந்து டெபாசிட்டை திரும்ப பெறுவதற்கு முன் நாமினி எவரேனும் இறந்து விட்டால், அவரது நியமனம் மட்டும் செல்லாததாக ஆகிவிடும். அவ்வாறு இறந்த நாமினிக்கு பரிந்துரைக்கப்பட்ட டெபாசிட்டின் பகுதி நாமினேஷன் எதுவும் இல்லாததாகக் கருதப்படும். வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் இறந்த நபரின் சொத்துகள் மற்றும் பொறுப்புகளை மரபுரிமையாகப் பெற சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு உரிமை உண்டு.

இறந்தவருக்கு சொந்தமான வங்கி வைப்புத் தொகையின் உரிமையாளர்கள் சட்டப்பூர்வ வாரிசுகள். நாமினிகள் அத்தகைய வைப்புத் தொகைகளின் உரிமையாளர்களாக மாற மாட்டார்கள். டெபாசிட் தொகையைப் பெற விரும்பும் சட்டப்பூர்வ வாரிசுகள், இறப்புச் சான்றிதழ், உயில், தகுதிகாண் சான்றிதழ் போன்ற சட்டப்பூர்வ ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதேசமயம் இறந்தவரின் இறப்புச் சான்றிதழுடன் மட்டுமே, நாமினி டெபாசிட் தொகையைப் பெறலாம்.

முன்னெடுக்கப்பட்டுள்ள மாற்றத்தின் பயன்: இந்தத் திருத்தத்தின் நோக்கம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. நாமினேஷன் வழிமுறையைப் பயன்படுத்தி டெபாசிட் சொத்தை விருப்பப்பட்டவருக்கு மாற்றலாம் என்பது பிழையானது. சொத்தை மாற்றுவதற்கான ஆவணம் உயில் ஆகும். உயிலுக்கு மாற்றாக வங்கிகளில் கூட்டுக்கணக்கு வசதிகள் உண்டு.

எடுத்துக்காட்டாக கூட்டுக்கணக்கில் பார்மர் ஆர் சர்வைவர் (Former or survivor) என்ற வகையில் கணக்கை தொடங்கினால் டெபாசிட்டரின் ஆயுள்காலத்தில் அவரும் (Former), அவர் காலத்துக்குப் பிறகு இரண்டாவது நபரும் (Survivor) அந்த கணக்குக்கு உரிமை கோர முடியும். அதேபோல் எய்தர் ஆர் சர்வைவர் (Either or Survivor) கணக்கில் தற்போது இருவரும் தனித்தனியாக உரிமை கோரவும் ஒருவரின் காலத்துக்கு பிறகு மீதமுள்ளவர் உரிமை கோரவும் முடியும்.

நாமினிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பதிலாக, வங்கி வாடிக்கையாளர்களுக்கு நியமன விதிகள் மற்றும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல்வேறு செயல்பாட்டு அதிகாரங்களைக் கொண்ட கூட்டுக் கணக்குகளின் பயன்பாடு ஆகியவற்றைப் பற்றிய புரிதலை மேம்படுத்துவது சிறந்தது.

- ஓய்வு பெற்ற வங்கியாளர்; 1952kalsu@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in