உற்பத்தித் துறையில் புதிய புரட்சி: 3D பிரின்டிங் தொழில் தொடங்குவது எப்படி? - ஏலிங்ஸ் நிறுவன சிஇஓ அரவிந்த் கிருஷ்ணா பேட்டி

உற்பத்தித் துறையில் புதிய புரட்சி: 3D பிரின்டிங் தொழில் தொடங்குவது எப்படி? - ஏலிங்ஸ் நிறுவன சிஇஓ அரவிந்த் கிருஷ்ணா பேட்டி
Updated on
2 min read

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் 3டி பிரின்டிங் முக்கிய வரவாக அமைந்துள்ளது. சிறிய அளவிலான பிளாஸ்டிக் பொருட்களை உருவாக்குவது முதல் பெரிய அளவிலான கட்டிடங்கள் வரை விரைவாக செய்து முடிப்பது இன்று 3டி பிரின்டிங் டெக்னாலஜி மூலம் சாத்தியமாகியுள்ளது.

நாளுக்கு நாள் 3 டி பிரின்டிங் தொழில் நுட்பம் முக்கியத்துவம் பெற்று வருகிற நிலையில், அத்துறையில் எத்தகைய வாய்ப்புகள் உள்ளன, அதில் செயல்பட என்ன திறன்கள் தேவை உள்ளிட்டவை குறித்து 3டி பிரின்டிங் நிறுவனமான ஏலிங்ஸ் நிறுவனத்தின் சிஇஓ அரவிந்த் கிருஷ்ணா உடன் உரையாடியதிலிருந்து...

3டி பிரின்டிங் எப்படி செயல்படுகிறது? - கடைகளில் சாதாரணமாக நாம் பயன்படுத்தும் பிரின்டர் 2டி வகையைச் சேர்ந்தது. அதனைக் கொண்டு பேப்பர் பிரின்ட் அவுட்தான் எடுக்க முடியும். ஆனால், 3டி பிரின்டர் என்பது அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. 3டி பிரின்டரைக் கொண்டு ஒரு பொருளை உருவாக்கி நிகழ்நேரத்தில் அதனை நாம் பயன்படுத்த முடியும். முதலில் கம்ப்யூட்டரில் நமக்கு தேவையான பொருட்களை வடிவமைக்க 3டி மாடலிங் சாப்ட்வேரை பயன்படுத்தி ப்ரோகி
ராம் செய்ய வேண்டும்.

ஆன்லைனிலும் இலவசமாக 3டி டிசைன்கள் ஏராளமாக கிடைக்கின்றன. கம்ப்யூட்டரில் நாம் உருவாக்க வேண்டிய பொருளின் டிசைனை இறுதி செய்த பிறகு 3டி பிரின்டருக்கு அதனை கமாண்ட் செய்ய வேண்டும். அதன் பின்னர் 3டி பிரின்டரில் தேவையான மூலப்பொருளை நிரப்பிவிட்டால், நமக்கான பொருளை அது உருவாக்கி தந்துவிடும்.

இந்தத் தொழிலுக்கான கல்வித் தகுதி என்ன? - அடிப்படையான கம்ப்யூட்டர் அறிவு இருந்தால் போதுமானது. எப்படி டிசைனிங் செய்வது, பிரின்டரை இயக்குவது, பராமரிப்பது என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். நாம் உருவாக்கிய பொருளை எங்கே தேடி மார்க்கெட்டிங் செய்கிறோம் என்பதில்தான் வெற்றி இருக்கிறது. 3டி பிரின்டிங் போல தயாரிப்பு துறைக்கான எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்பது தொழில்துறை நிபுணர்களின் கணிப்பு.

3டி பிரின்டிங் சார்ந்து தொழில் தொடங்க எவ்வளவு முதலீடு தேவை? - முதலில் பிரின்டர்களின் விலை அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது சீனாவைச் சேர்ந்த பல முன்னணி நிறுவனங்கள் 3டி பிரின்டரை அதிக அளவில் உருவாக்கி மார்க்கெட்டிங் செய்து வருவதால் அதன் விலை வெகுவாக குறைந்துள்ளது.குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் ரூபாய்க்கே நாம் பிரின்டரை வாங்கிவிட முடியும்.

ஆனால், அதில் சிறிய பொருட்களை மட்டுமே நாம் தயாரிக்க முடியும். அதேநேரம் அதிக விலை கொடுத்து நாம் 3டி பிரின்டரை வாங்கும்பட்சத்தில் வர்த்தக ரீதியில் பெரிய தயாரிப்புகளை மேற்கொள்ள முடியும். ஆட்டோமொபைல் நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் வாங்கப்படும் 3டி பிரின்டர்கள் என்பது ரூ.1 கோடிக்கும் அதிகமான விலையுடையதாக இருக்கும்.

3டி பிரின்டிங் துறையில் நாம் தொழில் தொடங்க வேண்டும் என்றால் வெறும் ரூ.1 லட்சம் முதலீட்டில் வீட்டிலேயே அதனை செய்யலாம். ஆனால் நமது தயாரிப்பு என்பது வாடிக்கையாளரை கவர்ந்து இழுக்கும் வகையிலான டிசைன்களை கொண்டிருக்க வேண்டும். நமது தயாரிப்புகளை அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் தளங்கள் மூலமாகவும் விற்பனை செய்யலாம். மேலும், இந்த தொழிலுக்கு அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களும் தேவையில்லை.

3டி பிரின்டிங் தொழிலை பொருத்தவரை யில் நமக்கான வாடிக்கையாளரை பிடிப்பது தான் முக்கியம். அவர்களுக்கு தேவையான பொருட்களை உரிய நேரத்தில் செய்து கொடுக்கும்பட்சத்தில் ரூ.1 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை சம்பாதிக்காலம். நமது முதலீட்டை 3 மாதங்களில் எடுத்துவிடலாம்.

உங்கள் இலக்கு என்ன? - பாதுகாப்பு துறைக்கு டாக் ரோபோட்டை 3டி பிரின்டிங் முறையில் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அதற்கான எலக்ட்ரானிக்ஸ் பொருத்தும் பணி ஆராய்ச்சி அளவில் உள்ளது. அதேபோன்று, விண்வெளி துறையிலும் கவனம் செலுத்தி வருகிறோம். ராக்கெட் தொழில்நுட்பத்தில் 3டி பிரின்டிங் முறையை பயன்படுத்தி ஆராய்ச்சிகளை மேம்படுத்தி வருகிறோம்.

- rajanpalanikumar.a@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in