

உலகின் மிகப் பெரிய காபி விற்பனை நிறுவனமான ‘ஸ்டார்பக்ஸ்', கடந்த ஆண்டு இந்தியரான லக்ஷ்மன் நரசிம்மனை சிஇஓ-வாக நியமித்தது. ஆனால், ஓராண்டுதான் ஆகி இருக்கிறது. இதற்குள்ளாக லக்ஷ்மன் நரசிம்மனை நீக்கி விட்டு சிபொடில் மெக்ஸீகன் கிரில் நிறுவனத்தின் சிஇஓ-வாக இருந்த பிரைன் நிக்கோலை தனது புதிய சிஇஓ-வாக ஸ்டார்பக்ஸ் நியமித்துள்ளது.
அமெரிக்காவில் 1971-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்டார்பக்ஸ், இன்று 80 நாடுகளில் 35,711 கடைகளைக் கொண்டிருக்கிறது. நிறுவனச் செயல்பாடுகளை வளர்த்தெடுக்க 2023 மார்ச் மாதம் லக்ஷ்மன் நரசிம்மன் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டார். நரசிம்மன் 1967-ம் ஆண்டு புனேயில் பிறந்தவர். இயந்திரவியல் பொறியியல் முடித்தவர். மெக்கின்ஸி, பெப்சிகோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்தவர். ஸ்டார்பக்ஸின் சிஇஓ-வாக நியமிக்கப்படுவதற்கு முன்பாக ரெக்கிட் நிறுவனத்தின் சிஇஓ-வாக இருந்தார்.
இவரது தலைமையின் கீழ் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டில் புதுமை கொண்டுவரப்படவில்லை என்றும் இதன் காரணமாக விற்பனை குறைந்துள்ளது என்றும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், முதலீட்டாளர்கள் புதிய சிஇஓ-வை நியமிக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து வந்தனர்.
இதனிடையே நரசிம்மன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “நான் மாலை 6 மணிக்கு மேல் அலுவலக வேலைகளை பார்க்க மாட்டேன். மிக முக்கியமான வேலை என்றால் மட்டுமே 6 மணிக்கு பிறகும் அதில் தொடர்வேன்” என்றார். அவரது இந்தக் கருத்துக்கு எந்த அளவுக்கு ஆதரவு இருந்ததோ அதே அளவுக்கு எதிர்ப்பும் இருந்தது.
‘‘ஒரு நிறுவனத்தின் சிஇஓ 6 மணிக்கு பிறகு வேலை பார்க்க மாட்டேன் என்று சொன்னால், அந்த நிறுவனம் எப்படி வளர்ச்சி அடையும்’’ என்று பலர் கேள்வி எழுப்பினர். இந்தச் சூழலில், அவரை சிஇஓ பொறுப்பிலிருந்து ஸ்டார்பக்ஸ் நீக்கியுள்ளது.