

குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்துவதால் கோடைக்கால சுற்றுலா செல்லலாம் என முடிவு எடுக்கிறீர்கள். இதனால் கண்டிப்பாக உங்கள் பட்ஜெட்டில் பெரிய ஓட்டை விழுந்துவிடும். ஆனால் குடும்பத்தின் மகிழ்ச்சியையும், வேலையிலிருந்து கிடைக்கும் ஓய்வையும் கணக்கில் கொள்ளும்போது இது மிகவும் சிறிய தொகைதான். வருமான வரி சட்டப் பிரிவு 10(5) இந்த சமயத்தில் உங்களுக்கு தோள் கொடுக்கும் தோழனாக உதவும் என்பதை மறந்துவிடக் கூடாது.
இந்த சட்டப் பிரிவின் படி உங்களது நிறுவனம் உங்களுக்கு வழங்கியுள்ள விடுமுறை பயணப்படி (எல்டிஏ) அல்லது விடுமுறை பயணச் சலுகை (எல்டிசி) மூலம் வருமான வரிச் சலுகை பெறலாம். இருப்பினும் இதனைப் பெறுவதற்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளன.
உங்களது சம்பள அமைப்பின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் உங்களது நிறுவனம் உங்களுக்கு எல்டிஏ வழங்கலாம். நீங்களும் ஆண்டுதோறும் சுற்றுலா செல்லலாம். ஆனால் ஆண்டுதோறும் வரிச் சலுகை பெறலாம் என நீங்கள் நினைத்தால் , அது முடியாது. 4 கணக்கீட்டு ஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு மட்டுமே நீங்கள் வரிச் சலுகை பெற முடியும். ஒரு கணக்கீட்டு ஆண்டில் ஒருமுறைதான் இந்த வரிச் சலுகையை பயன்படுத்த முடியும்.
ஆனால் பதவி உயர்வுக்கு கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பதால் எல்டிஏ வரிச் சலுகைக்கான நான்கு ஆண்டுகளில் ஒரே ஒரு ஆண்டுதான் சுற்றுலா சென்றுள்ளீர்கள் அல்லது சுற்றுலா சென்றுவிட்டு எல்டிஏ வரிச் சலுகையை பயன்படுத்த மறந்துவிட்டீர்கள். இப்பொழுது என்ன செய்வது?
வரிச் சலுகை தரப்பட இருக்கிற அடுத்த நான்காண்டு காலத்தின் முதல் ஆண்டுக்கு நீங்கள் பயன்படுத்த மறந்த ஒரே ஒரு எல்டிஏ வரிச் சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். எல்டிஏ வரிச் சலுகை இந்தியாவுக்குள் சுற்றுலா சென்றால் மட்டுமே கிடைக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
உங்களுக்கு மற்றும் உங்கள் குடும்பத்துக்கு நீங்கள் செலவழித்த தொகைக்கு வரிச் சலுகை பெறலாம். உங்களது குடும்பம் என்பதில் உங்களது கணவன் அல்லது மனைவி, உங்களது குழந்தைகள் ( சார்ந்திருந்தாலும், இல்லையென்றாலும்) , உங்களை சார்ந்திருக்கும் உங்கள் பெற்றோர்கள், உங்களது உடன்பிறந்தோர் ஆகியோர் வருகிறார்கள்.
அக்டோபர் 1, 1998-க்குப் பிறகு உங்களது குழந்தைகள் பிறந்திருக்குமேயானால் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே நீங்கள் வரிச் சலுகை பெற முடியும். ஆனால் உங்களது முதல் குழந்தைக்குப் பிறகு உங்களுக்கு பிறந்த குழந்தைகள் இரட்டையர்கள் அல்லது ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள் என்றால் இந்த விதி செல்லுபடியாகாது.
ஆண்டுதோறும் உங்களது நிறுவனத்திடமிருந்து ஒரு தொகை, விடுமுறை பயணச் சலுகையாக வழங்கப்படலாம். ஆனால் நீங்கள் உங்களது பயணத்தில் எவ்வளவு தொகை செலவழித்தீர்கள் என்பதைப் பொறுத்தே வருமான வரிச் சலுகை கிடைக்கும்.
உங்களுக்கு நிறுவனம் ஒரு ஆண்டுக்கு அளித்த எல்டிஏ தொகை ரூ.25,000 , ஆனால் நீங்களும், உங்கள் குடும்பமும் பயணம் செய்ய ரூ.15,000 மட்டுமே செலவு செய்கிறீர்கள். இந்த சூழலில் ரூ.15,000-க்கு மட்டுமே உங்களுக்கு வரிச் சலுகை கிடைக்கும். மீதமுள்ள ரூ.10,000 வரி செலுத்த வேண்டிய தொகைக்குள் வரும்.
நீங்கள் அளவுக்கு மீறி ஆடம்பர செலவு செய்தாலும், வரிச் சலுகை என்பது அடிப்படையான சில விஷயங்களுக்கு மட்டுமே கிடைக்கும். தேசிய விமான நிறுவனங்களின் எக்கானமி வகுப்புக் கட்டணம், குளிர்சாதன முதல் வகுப்பு ரயில் கட்டணம் அளவுக்குத்தான் நீங்கள் அதிகபட்சமாக வரிச் சலுகை பெற முடியும். அதிலும் நீங்கள் பயணம் செய்கிற வழித்தடத்தில் குறைந்தபட்ச தூரத்தில் சென்றுசேருகிற பாதைக்கான கட்டணம் மட்டுமே வழங்கப்படும்.
குறிப்பிடப்பட்டிருக்கிற கட்டணங்களை விடக் குறைவான தொகையில் நீங்கள் பயணத்தை முடித்துவிட்டால் செலவு செய்த தொகைக்கு மட்டுமே வரிச் சலுகை கிடைக்கும். உணவுக்கான செலவு, தங்கும் இடம், மற்ற செலவுகள் போன்றவற்றுக்கு வரிச் சலுகை கிடைக்காது. பயணம் செய்வதற்கு ஆகும் போக்குவரத்து செலவுக்கு மட்டுமே வரிச் சலுகை கிடைக்கும். பயணக் கட்டண ரசீதுகளின் நகலை கைவசம் வைத்திருப்பதும் நல்லது.