என்பிஎப்சி டெபாசிட்களில் என்ன தெரிந்துகொள்ள வேண்டும்?

என்பிஎப்சி டெபாசிட்களில் என்ன தெரிந்துகொள்ள வேண்டும்?
Updated on
2 min read

ங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் (என்பிஎப்சி) டெபாசிட்களில் முதலீடு செய்யும்போக்கு தற்போது அதிகரித்து வருகிறது. வங்கிகளை விட என்பிஎப்சிகள் அதிக வட்டி வழங்குவதும் ஒரு காரணம். ஆனால் பல சமயங்களில் இந்த டெபாசிட்களில் இருக்கும் அபாயங்களை முதலீட்டாளர்கள் கவனிக்க தவறிவிடுகிறார்கள். என்பிஎப்சி டெபாசிட்களில் முதலீடு செய்வதற்கு முன்பு என்ன கவனிக்க வேண்டும். பிரச்சினை ஏற்பட்டால் எங்கு செல்வது என்பதை அறிந்துகொள்ளலாம்.

பொதுவாக வங்கி டெபாசிட்களில் ஒரு லட்ச ரூபாய் வரையில் காப்பீடு செய்யப்பட்டிருக்கும். இதன் மூலம் டெபாசிட் செய்த தொகை முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். ஆனால் என்பிஎப்சிகளில் உள்ள டெபாசிட்டுக்கு காப்பீடு எதுவும் கிடையாது. அனைத்து வங்கிகளும் மக்களிடமிருந்து டெபாசிட் திரட்டலாம். ஆனால் ரிசர்வ் வங்கி அனுமதித்திருக்கும் என்பிஎப்சிகள் மட்டுமே பொதுமக்களிடமிருந்து டெபாசிட் திரட்ட முடியும். ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கினாலும், டெபாசிட்டுக்கான உத்தரவாதத்தை வழங்காது.

எந்தெந்த என்பிஎப்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றன, எந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை, அனுமதி வழங்கப்பட்டு பிறகு ரத்து செய்யப்பட்ட நிறுவனங்கள் எவை என்னும் பட்டியல் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் உள்ளது. முதலீட்டுக்கு முன்பாக ரிசர்வ் வங்கியின் பட்டியலை ஒரு முறை பார்த்துவிடவும். தவிர முதலீட்டை திரட்டுவதற்கு முன்பாக ஒவ்வொரு என்பிஎப்சியும் தங்களது தரமதிப்பீட்டினை வெளியிட வேண்டும். இந்த தர மதிப்பீட்டையும் முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

தவிர அதிகபட்சம் எவ்வளவு வட்டி வழங்கப்பட வேண்டும், கால அளவு உள்ளிட்டவற்றுக்கு ரிசர்வ் வங்கி விதிமுறைகளை வகுத்திருக்கிறது. என்பிஎப்சிகள் அதிகபட்சம் 12.5 சதவீத அளவுக்கு வட்டி வழங்கலாம். குறைந்த பட்சம் 12 மாதங்கள் அதிகபட்சம் 60 மாதங்கள் வரையிலும் டெபாசிட் காலம் இருக்கலாம். இதை தவிர எந்த விதமான பரிசுகள், ஊக்க தொகைகள் அல்லது கூடுதல் சலுகைகளை என்பிஎப்சிகள் வழங்க கூடாது என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு வரை என்பிஎப்சி டெபாசிட்களில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தை அணுக வேண்டும் அல்லது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு இந்த நடைமுறையில் ரிசர்வ் வங்கி மாற்றம் கொண்டு வந்தது. வங்கி பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு தீர்வாளர் (ஆம்புட்ஸ்மேன்)இருப்பது போல வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளவும் பிரத்யேக தீர்வாளரை ரிசர்வ் வங்கி நியமித்திருக்கிறது. பிப்ரவரியில் இருந்து இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

தற்போது புதுடெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் செயல்பட்டு வருகிறது. டெபாசிட் வழங்க ரிசர்வ் வங்கி அனுமதித்திருக்கும் அனைத்து நிறுவனங்களும் இந்த தீர்வாளர் கட்டுப்பாட்டில் வருவார்கள். பணத்தை திருப்பி தராமல் இருப்பது, கால தாமதம் ஏற்படுத்துவது, ரிசர்வ் வங்கி விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பது போன்ற பிரச்சினைகளை தீர்வாளரிடம் கொண்டு செல்ல முடியும். என்பிஎப்சிகளிடம் வாங்கிய கடனில் உண்டான சச்சரவுகளையும் கொண்டு செல்ல முடியும். ஒரு தனிநபர் தனக்கு ஏற்படும் பிரச்சினைகளை நேரடியாக தீர்வாளரிடம் கொண்டு செல்ல முடியும். என்பிஎப்சியின் தலைமையகம், பிரச்சினை ஏற்பட்ட கிளை, பெயர், பிரச்சினை விவரம் அதற்கான ஆதாரங்களுடன் சமர்பிக்க முடியும்.

பிரச்சினையை பரஸ்பரம் தீர்ப்பதற்கு ஏற்பாடு செய்யலாம் அல்லது தீர்வாளரே நேரடியாக உத்தரவு பிறப்பிக்கலாம். ஆனால் இந்த உத்தரவினை பாதிக்கப்பட்ட நபர் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில்தான் அந்த தீர்ப்பு செல்லுபடியாகும். அதே சமயத்தில் இழப்பீட்டுக்கு அதிகமாக (அல்லது ரூ.10 லட்சம். இதில் எது குறைவோ அந்த தொகை) நிதி சார்ந்த உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் தீர்வாளருக்கு இல்லை. மன உளைச்சல், இதர செலவுகள், கால விரயம் ஆகியவற்றால் ஏற்பட்ட இழப்பீட்டுக்காக ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் உத்தரவிட முடியாது. கார்ப்பரேட் நிறுவனங்கள் திரட்டும் டெபாசிட்கள் கம்பெனி விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழும், வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்கள் திரட்டும் டெபாசிட்கள் நேஷனல் ஹவுசிங் பைனான்ஸ் கீழும் வரும். அதனால் மேலே உள்ள விதிமுறைகள் வங்கிகள் மற்றும் என்பிஎப்சி திரட்டும் டெபாசிட்களில் மட்டுமே ரிசர்வ் வங்கி கண்காணிப்பின் கீழ் வரும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in