டிஜிட்டல் மயமாகும் வேளாண் துறை

டிஜிட்டல் மயமாகும் வேளாண் துறை
Updated on
2 min read

எங்கும் எதிலும் டிஜிட்டல் மயம் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில், நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் வேளாண் துறைக்கான சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

குறிப்பாக, மாநில அரசுகளுடன் இணைந்து, 'அக்ரி ஸ்டாக்' எனப்படும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு செயல்படுத்தப்படும் என்றும் 400 மாவட்டங்களில் டிஜிட்டல் முறை பயிர் கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார். தற்போதைய நிலையில் இது வேளாண்மை துறைக்கு தேவைப்படும் மிக முக்கியமான ஒன்றாகும்.

அடுத்த 3 ஆண்டுகளில் 6 கோடி விவசாயிகளின் நிலங்கள் மற்றும் அது தொடர்பான தகவல்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டம் பிற மாநிலங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்ரி ஸ்டாக் (Agri Stack) என்பது விவசாயிகளின் விவரங்கள், நில ஆவணங்கள், காப்பீடு, கடன் மற்றும் பயிர் சாகுபடி மற்றும் அவர்களின் வருமானம் போன்ற அனைத்தையும் கொண்டிருக்கும் சேமிப்பு பெட்டகமாக இருக்கும்.

மேலும் இதற்கு தேவைப்படும் தரவுகள் அனைத்தும் இஸ்ரோ வழங்கக்கூடிய செயற்கைக்கோள் தரவுகள், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், புவியிடம்சார் தகவல்கள் (Geospatial Data) மற்றும் தொழில்நுட்ப காட்சியளிப்பு (Visual Analytics) போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களின் மூலம் சேகரிக்கப்படும். அத்துடன் விவசாயிகள், அரசாங்க துறைகள், வேளாண் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் போன்றவைகளை ஒருங்கிணைக்கும் ஒரு டிஜிட்டல் தளமாகவும் அக்ரிஸ்டாக் செயல்படும்.

தற்போதைய நிலையில் விவசாயிகளின் அடையாள ஆவணங்கள் மற்றும் நிலம் தொடர்பான தகவல்கள் அனைத்தும் வெவ்வேறு துறைகளிடம் உள்ளன. அதனால் குறிப்பிட்ட மானியம் அல்லது இன்னபிற சலுகைகள் வழங்குவதில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இத்தகைய பிரச்சினைகளை போக்கி விவசாயிகளின் தகவல்கள் அனைத்தும் ஒரே தளத்தில் இயங்கும் வகையில் அக்ரி ஸ்டாக் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் அக்ரி ஸ்டாக் வழியே விவசாயிகளுக்கு போதிய அளவிலான பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் உற்பத்தி மேம்படுத்தும் வழிமுறைகள், தக்க சமயத்தில் முடிவு எடுக்க ஆலோசனைகள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் வகையிலான தகவல்களை உள்ளடக்கிய தளமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பானது ஒரு திறந்த தரவுநிலைகளை கொண்டதாகவும் எளிதாக அணுகும் வகையில் பொதுவான ஒன்றாகவும் இருக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இதன் மூலம் விவசாயிகள் பயிர் சாகுபடிக்கு திட்டமிடுவது, வேளாண் உபகரணங்கள், வேளாண் கடன், காப்பீடு, சந்தை விலை உள்ளிட்ட தகவல்களை அறிந்து கொள்ளும் தளமாகவும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

வேளாண் துறையில் களமிறங்கி இருக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு பேருதவியாக இருக்கும் வகையிலும், விவசாயிகளுக்கு நிதி வழங்கும் நிதி நிறுவனங்களுக்கும் அக்ரி ஸ்டாக் உதவியாக இருக்கப் போகிறது. மத்திய வேளாண்மை அமைச்சகம், மாநிலங்களின் வருவாய் மற்றும் வேளாண்மைத் துறையுடன் இணைந்து, அக்ரி ஸ்டாக் தளத்தை மென்மேலும் மேம்படுத்தி எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட இருக்கிறது.

தனியார் நிறுவனங்களின் உதவியுடன் அக்ரி ஸ்டாக் தளத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சியிலும் மத்திய அரசு இறங்கியுள்ளது. மொத்தத்தில் இனி வரும் காலம் வேளாண்மைக்கும் டிஜிட்டல் காலம்தான்!

- வேளாண் ஆராய்ச்சியாளர்; saraths1995@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in