

இமாச்சல பிரதேச மாநிலம் உனா மாவட்டம் பனோ கிராமத்தில் 1958-ம் ஆண்டு பிறந்தவர் ஜெய் சவுத்ரி (65). விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பாகத் மற்றும் சுர்ஜீத் சவுத்ரி தம்பதிக்கு 3-வது மகனாக பிறந்தார் ஜெய். துசாரா கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு தினமும் 4 கி.மீ. தூரம் நடந்து சென்று படித்தார். இவருடைய ஊரில் அப்போது மின்சார வசதி கூட இல்லை.
பள்ளிப்படிப்பில் சிறந்து விளங்கிய இவருக்கு வாராணசி ஐஐடியில் இடம் கிடைத்தது. அங்கு மின்னணு பொறியியல் பட்டம் பெற்ற இவர், தனது 22 வயதில் உயர் கல்விக்காக அமெரிக்கா சென்றார். சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் தொழிற்சாலை பொறியியல், கணினி பொறியியல் மற்றும் சந்தைப்படுத்துதலில் முதுநிலை பட்டம் பெற்றார். ஹார்வர்டு பிஸ்னஸ் ஸ்கூலில் நிர்வாக படிப்பையும் முடித்தார்.
ஒருவழியாக படிப்பை முடித்த ஜெய், ஐபிஎம், யுனிசிஸ் மற்றும் என்சிஆர் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களில் பொறியியல், விற்பனை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றினார். 1996-ம் ஆண்டு ஜெய் சவுத்ரி தனது மனைவி ஜோதியுடன் இணைந்து, சிறுக சிறுக சேர்த்த பணத்தைக் கொண்டு ‘செக்யூர்-ஐடி’ (SecureIT) என்ற இணையதள பாதுகாப்பு சேவை நிறுவனத்தைத் தொடங்கினார்.
1998-ம் ஆண்டு இவரது நிறுவனத்தை அமெரிக்காவின் வெரிசைன் நிறுவனம் ரூ.585 கோடிக்கு வாங்கியது. பின்னர் வெரிசைன் நிறுவனத்தின் இணையதள பாதுகாப்பு சேவை பிரிவுக்கு தலைமை தாங்கினார். 1999-ல் அந்நிறுவனத்திலிருந்து விலகினார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், செக்யூர்-ஐடி நிறுவனத்தை விற்றபோது குறிப்பிட்ட பகுதியை வெரிசைன் நிறுவன பங்குகளாக மாற்றிக் கொண்டார்.
இதில் பெரும் பகுதி பங்குகளை தனது நிறுவனத்தில் பணியாற்றிய 80 ஊழியர்களுக்கு வழங்கினார். அடுத்த 2 ஆண்டுகளில் (2000-வது ஆண்டு) வெரிசைன் நிறுவன பங்குகள் 2,300% உயர்ந்தது. ஒரு பங்கின் விலை 253 டாலரானது. இதன்மூலம் 80-ல் 70 பேர் கோடீஸ்வரர்களாகி விட்டனர் என பெருமையுடன் கூறுகிறார் ஜெய் சவுத்ரி.
இவ்வளவு சீக்கிரமாக கோடீஸ்வரர் ஆவோம் என அந்த ஊழியர்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இதையடுத்து, அந்த பங்குகளை விற்ற சிலர் புதிய வீடு, கார் வாங்கினர். ஒருவர் உலக நாடுகளை சுற்றி வந்தார். இன்னும் சிலர் தாங்கள் நினைத்ததை செய்தனர்.
எனினும், அதே ஆண்டின் இறுதியில் அந்த பங்கு விலை படிப்படியாக 75% வரை சரிந்தது. 2002-ல் வெறும் 4 டாலராக சரிந்தது. எனினும், அப்போது பங்குகளை விற்காமல் பொறுமையாக காத்திருந்தவர்களுக்கு இப்போது லாபம் கிடைத்திருக்கும். 2021-ல் அதிகபட்சமாக 254 டாலராக அதிகரித்தது. இப்போது 180 டாலரை ஒட்டி வர்த்தகமாகி வருகிறது.
செக்யூர் ஐடி நிறுவனத்திலிருந்து வெளியேறிய ஜெய், சிபர் டிரஸ்ட், கோர் ஹார்பர் (இணைய வணிகம்), ஏர் டிபன்ஸ் உள்ளிட்ட வேறு சில ஸ்டார்ட்-அப் நிறுவனங்களையும் தொடங்கினார். பின்னர் இந்த நிறுவனங்களையும் வேறு நிறுவனங்களுக்கு விற்றுவிட்டார். கடைசியாக கடந்த 2007-ம் ஆண்டு ஸ்கேலர் (Zscaler) நிறுவனத்தை தொடங்கினார்.
அமெரிக்காவை தலைமையகமாக கொண்டு செயல்படும் இது கிளவுட் இணையதள பாதுகாப்பு சேவை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் இப்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.2.34 லட்சம் கோடி. இது இப்போது இணையதள பாதுகாப்பு முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது.
“எனக்கு பணத்தின் மீது அதிக ஆர்வம் இல்லை. இதுவே என் வெற்றிக்கு முக்கிய காரணம். வர்த்தகம் செய்வோருக்கு இணையம் ஒரு பாதுகாப்பான இடம் என்பதை உறுதி செய்வதுதான் என் லட்சியம்” என்கிறார் ஸ்கேலர் நிறுவ தலைமைச் செயல் அதிகாரி ஜெய் சவுத்ரி.