

மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் ஆல்ப்ஸ் மோட்டார் பைனான்ஸ் அல்லது பிர்தி சந்த் பன்னலால் ஏஜென்சீஸ் போன்ற பிரபலமில்லாத பங்குகளில் முதலீடு செய்தால் அதிக லாபம் உறுதி என்பது போன்ற குறுந்தகவல்கள் கடந்த ஆண்டுகளில் நம்மில் பலருக்கு வந்திருக்கும். இந்தப் பங்குகளில் முதலீடு செய்தால் உங்களுக்கு ஜாக்பாட் அடிக்கும், பங்கு வர்த்தகத்துக்கு நீங்கள் ஒதுக்கியிருக்கும் மொத்தத் தொகையையும் இந்தப் பங்குகளில் முதலீடு செய்தால் வெற்றி உறுதி போன்ற பல்வேறு வாக்குறுதிகள் இவற்றில் இடம்பெற்றிருக்கும். பலர் இத்தகைய குறுந்தகவல்களை நகைச்சுவையாக எண்ணி அலட்சியம் செய்திருக்கலாம். இருப்பினும் சிலர் இதை தீவிரமாக எடுத்துக்கொண்டு பின்னாட்களில் வருத்தப்பட்ட நேரிட்டிருக்கும்.
மும்பை பங்கு சந்தையில் வர்த்தகமாகி வரும் கல்பா கமர்ஷியல் என்கிற மைக்ரோ-கேப் பங்கை வாங்கவும், விற்கவும் 28 அமைப்புகளுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் செபி இடைக்கால தடை விதித்துள்ளது. கல்பா கமர்சியல் பங்குகளை வாங்குமாறு மிக அதிக அளவில் குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டு முதலீட்டாளர் அணுகுமுறையில் தாக்கம் ஏற்படுத்தியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செபியின் இந்த உத்தரவை கூர்ந்து கவனிப்பதன் மூலம் சில முக்கியமான படிப்பினைகளை முதலீட்டாளர்கள் பெறலாம்.
கல்பா கமர்சியல் நிறுவனத்தின் (கேசிஎல்) மொத்த சந்தை மதிப்பு ரூ.8.5 கோடி. 2017-ம் நிதியாண்டுக்கான அதன் வருவாய் மற்றும் நிகர லாபம் முறையே ரூ.5.8 கோடி மற்றும் ரூ.11 லட்சம். 2017-ம் ஆண்டு அக்டோபர் 10 மற்றும் அக்டோபர் 17-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இந்த நிறுவன பங்குகளின் செயல்பாடுகளில் திடீர் மாற்றம் நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து அடையாளம் தெரியாத நிறுவனங்கள் தங்களது பெயரைப் பயன்படுத்தி போலியான குறுந்தகவல்களை அனுப்புவதாகவும் இதன்மூலம் குறிப்பிட்ட பங்குகளில் முதலீடு செய்யுமாறு முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்துவதாகவும் பங்குச் சந்தை இடைத்தரகர்கள் செபிக்கு புகார் அளித்தார்கள்.
குறுந்தகவல்கள் அனுப்பப்பட்ட காலகட்டத்தில் கல்பா கமர்ஷியல் நிறுவனத்தின் பங்குகளின் விலையிலும், அளவிலும் பெரும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. குறுந்தகவல்கள் அனுப்புப்படுவதற்கு முன்பாக மும்பை பங்குச் சந்தையில் ஒருநாளைக்கு இந்த நிறுவனத்தின் 1,793 பங்குகள் வர்த்தகமாயின. தொடர்ச்சியாக குறுந்தகவல்கள் அனுப்பப்பட்ட காலத்தில் இந்த நிறுவனத்தின் பங்குகள் ஒரு நாளைக்கு சராசரியாக 5,06,460 பங்குகள் என்ற அளவில் வர்த்தகமானது. ஆனால் குறுந்தகவல்கள் அனுப்பப்படுவது நிறுத்தப்பட்ட பிறகு ஒருநாளைக்கு 1,537 பங்குகள் வர்த்தகமாயின. இப்பொழுது சில நாட்களாக இந்த நிறுவனத்தின் ஒரு பங்குகூட வர்த்தகமாகாத நிலையும் காணப்படுகிறது. குறுந்தகவல்கள் அனுப்பப்பட்ட காலத்தில் இந்த நிறுவனப் பங்குகள் ரூ.26.60 மற்றும் ரூ.33.45-க்கு இடைப்பட்ட விலையில் வர்த்தகமாயின. இப்பொழுது இந்தப் பங்குகள் 8.30 ரூபாய்க்கு வர்த்தகமாகின்றன.
கேசிஎல் நிறுவனத்தின் பங்குகளை வாங்குமாறு பார்தி ஏர்டெல் நெட்வொர்க் வழியாக குறிப்பிட்ட கால அளவில் மொத்தமாக 3.42 கோடி குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. முதலீட்டாளர் விருப்பத்தில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் சில குறிப்பிட்ட குழுக்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. அதன் பின்பு தங்களிடமுள்ள இந்த நிறுவனத்தின் பங்குகளை வெளிச் சந்தையில் விற்றுள்ளனர்.
இந்திய பங்குச் சந்தைகளில் சுமார் 4,000 பங்குகள் வர்த்தகமாகின்றன. முன்னணியில் உள்ள 500 பங்குகளை தவிர்த்துவிட்டு பார்க்கும்பொழுது மற்ற பங்குகளில் பணப் புழக்கம் மிகக் குறைவாக உள்ளது. பணப் புழக்கம் குறைவாக உள்ளதால் சிறிய நிறுவனங்கள் இத்தகைய மோசடிகளால் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகின்றன. தினமும் வர்த்தகமாகும் தகவல்கள் செபி வசம் இருந்தாலும் இத்தகைய மோசடிகளைக் கண்டறியும் அளவுக்குக்கான பணியாளர்கள் எண்ணிக்கை அதனிடம் இல்லை.
எனவே இத்தகைய மோசடிகளிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டியதும், ஏற்கெனவே கற்றுக்கொண்ட முதலீட்டின் அடிப்படை பாடங்களில் உறுதியாக இருக்கவேண்டியதும் முதலீட்டாளர்களின் கடமையாகும். குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள், நண்பர்கள், உறவினர்கள் என எந்த வகையிலாக இருப்பினும் பங்குச் சந்தை ஆலோசனைகளை பின்பற்றாமல் இருப்பதே சிறப்பாகும்.
முதலீடு செய்வதற்கு முன்பு நிறுவனத்தின் அடிப்படைகள் குறித்து கவனம் செலுத்தவேண்டும். போலி குறுந்தகவல்கள் அனுப்பப்படும் பெரும்பாலான பங்குகளில் லாபம் என்பதே இருக்காது. இந்த நிறுவனங்களின் நிதி நிலைமையை கவனித்தாலே இவற்றை வாங்குவதைத் தவிர்த்துவிடலாம். குறைவான விலைக்கு பங்குகள் கிடைப்பதை நோக்கி செல்லவேண்டாம். இவற்றில் முதலீடு செய்வதன் மூலம் எளிதில் இருமடங்கு அல்லது மூன்று மடங்கு லாபம் கிடைக்கும் என நினைக்கிறார்கள். ஆனால் இந்தப் பங்குகளின் மோசமான செயல்பாட்டால்தான் அவை மிகவும் கீழ்நிலையில் உள்ளன என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
இறுதியாக, நீங்கள் இப்பொழுதுதான் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் புதியவர் என்றால் பங்கு வர்த்தகம் என்ற பெரிய உலகத்தை புரிந்துகொள்ளும்வரை நேரடியாக பங்குகளில் முதலீடு செய்வதைத் தவிர்த்து மியூச்சுவல் ஃபண்ட்களின் வழியாக பங்குச் சந்தையில் குதிக்கலாம்.
-