இன்ட்ரா டே வர்த்தகத்தில் 70% பேர் நஷ்டம்

இன்ட்ரா டே வர்த்தகத்தில் 70% பேர் நஷ்டம்
Updated on
1 min read

இந்தியாவில் பங்குச் சந்தையில் களமிறங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இளைஞர்களின் மத்தியில் பங்குச் சந்தை மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருகிறது. 2019-20 நிதி ஆண்டில் 4.1 கோடி டிமேட் கணக்குகள் இருந்தன. 2023-24 நிதி ஆண்டில் அது 15.14 கோடியாக உயர்ந்துள்ளது.

பங்குகளில் முதலீடு செய்வது, இன்ட்ரா டே (தினசரி பங்கு வர்த்தகம்) மற்றும் பியூச்சர் அன்ட் ஆப்சன் என பங்குச் சந்தையில் வெவ்வேறு பிரிவுகள் உள்ளன. இதில் தினசரி பங்கு வர்த்தகம் ரிஸ்க் நிறைந்தது. ஆனால், வெகு விரைவாக வருமானம் பார்க்க முடியும் என்ற எண்ணத்தில் பலர் அதில் களம் இறங்குகின்றனர்.

குறிப்பாக, கரோனாவுக்குப் பிறகு தினசரி பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. இந்நிலையில், தினசரி பங்கு
வர்த்தகம் தொடர்பான ஆய்வறிக்கை ஒன்றை பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியம் (செபி) சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் தினசரி பங்கு வர்த்தகத்தில் லாபம் ஈட்டுபவர்களைவிட நஷ்டம் அடைபவர்களே அதிகம் என்பது தெரியவந்துள்ளது. 2018–19, 2021-22, 2022-23 ஆகிய நிதி ஆண்டுகளின் தினசரி பங்கு வர்த்தகத்தை ஆய்வுக்கு உட்படுத்தி இந்த அறிக்கையை செபி உருவாக்கியுள்ளது. இதன்படி, 2022-23 நிதி ஆண்டில் தினசரி பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களில் 70 சதவீதத்தினர் கடும் இழப்பைச் சந்தித்துள்ளனர் என்று செபி தெரிவித்துள்ளது.

ஆபத்தில் சிக்கும் இளைய தலைமுறையினர் 2018-19 நிதி ஆண்டில் தினசரி பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை 15 லட்சமாக இருந்தது. தற்போது அது 69 லட்சமாக உயர்ந்துள்ளது. 30 வயதுக்குட்பட்டோர் இதில் தீவிர ஈடுபாடு காட்டுகின்றனர்.

தினசரி பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் 30 வயதுக்குட்ப்பட்ட இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை 2018-19 நிதி ஆண்டில் 18 சதவீதமாக இருந்தது. 2022-23 நிதி ஆண்டில் அது 48 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அதேபோல், அதிக நஷ்டத்தைச் சந்திப்பவர்களும் இளைய தலைமுறையினர்தான். 30 வயதுக்குட்பட்டவர்களில் 76 சதவீதம் பேர் இழப்பைச் சந்திக்கின்றனர். பங்குச் சந்தை மூலம் விரைவாக சம்பாதிக்க வேண்டும் என்று, தினசரி பங்கு வர்த்தகத்தில் குதிப்பவர்களுக்கு செபியின் ஆய்வறிக்கை எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in