எப்டி-யை விட என்சிடி சிறந்ததா?

எப்டி-யை விட என்சிடி சிறந்ததா?
Updated on
2 min read

பிக்ஸட் டெபாசிட்கள் வழங்கி வரும் குறைந்த வட்டி உங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கும் அதே சமயத்தில் என்பிஎப்சிகள் வெளியிடும், மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் (என்சிடி) 9 சதவீதத்துக்கு மேலாக வட்டி வழங்குவது உங்களுக்கு ஆர்வத்தைத் தூண்டலாம். என்பிஎப்சி பிக்ஸட் டெபாசிட்களின் வட்டி விகிதம் எட்டு சதவீத அளவில் இருக்கும் சூழலில், அவை வெளியிடும் கடன் பத்திரங்களின் வட்டி விகிதம் நிச்சயம் அதிகமாகவே இருக்கும். ஆனால் இரண்டையும் எப்படி மதிப்பீடு செய்வது?

என்சிடி மற்றும் எப்டி ஆகிய இரண்டும் முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தை திரட்டுவதாக இருந்தாலும், ஒழுங்கு முறை மற்றும் ரிஸ்க்கில் சில மாறுதல்கள் உள்ளன. வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுவதற்கு கடும் விதிமுறைகளை வைத்திருக்கின்றன. டெபாசிட் திரட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட என்பிஎப்சி-கள் மட்டுமே பொது மக்களிடம் இருந்து பிக்ஸட் டெபாசிட் பெற முடியும். ஓர் ஆண்டு முதல் 5 ஆண்டு வரை மட்டுமே டெபாசிட் காலம் இருக்க முடியும், 12.5 சதவீதத்துக்கு மேல் வட்டி வழங்க முடியாது என்னும் விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வைத்திருக்கிறது. இவை எல்லாம் என்பிஎப்சி வெளியிடும் பிக்ஸட் டெபாசிட்களுக்காக ரிசர்வ் வங்கி வைத்திருக்கும் விதிமுறைகள்.

ஆனால் ஒரு என்பிஎப்சி கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் பட்சத்தில் அவை செபியின் கட்டுப்பாட்டில் வரும். செபி விதிமுறைகளின் படி, என்பிஎப்சி வெளியிடும் பட்சத்தில் நிறுவனத்தை பற்றிய விவரம், ரிஸ்க் குறித்த தகவல்கள், வட்டி விகிதம், முதிர்வு தேதி, தரமதிப்பீட்டு நிறுவனங்களின் குறியீடு உள்ளிட்டவற்றை வெளியிட வேண்டும்.

செபியின் விதிமுறைகள் இருந்தாலும், என்பிஎப்சி வெளியிடும் பிக்ஸட் டெபாசிட்களை விட, கடன் பத்திரங்களில் கொஞ்சம் ரிஸ்க் அதிகம். குறைந்த தரமதிப்பீடு இருந்தால் கூட கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்ட முடியும். ஆனால் நல்ல தரமதிப்பீடு இருக்கும் பட்சத்தில்தான் பிக்ஸட் டெபாசிட் மூலம் நிதி திரட்ட முடியும்.

அடுத்ததாக, பிக்ஸட் டெபாசிட்களில் செய்யப்பட்ட பணத்தை திருப்பி கொடுக்காமல் இருப்பது அல்லது காலம் தாழ்த்துவதை ஒழுங்கு முறை ஆணையங்கள் மூலம் கடுமையான நெருக்கடியை கொடுக்கலாம். பிக்ஸட் டெபாசிட் திவால் ஆகும் பட்சத்தில் கம்பெனி சட்ட ஆணையம் அல்லது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும். ஆனால் என்சிடி திவால் ஆகும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அறங்காவலர் குழுவை நாட வேண்டும்.

மூன்றாவதாக பிக்ஸட் டெபாசிட் வெளியிடுவதற்கு ரிசர்வ் வங்கி அனுமதிக்காத என்பிஎப்சி நிறுவனங்கள் கூட கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்ட முடியும். உதாரணத்துக்கு கொசமட்டம் பைனான்ஸ், முத்தூட் பின்கார்ப் உள்ளிட்ட நிறுவனங்கள் சமீபத்தில் கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டின. ஆனால் இந்த நிறுவனங்கள் பிக்ஸட் டெபாசிட் வெளியிட ரிசர்வ் வங்கி அனுமதிக்கவில்லை. அதனால் பிக்ஸட் டெபாசிட்டை விட கடன் பத்திரங்கள் கொஞ்சம் ரிஸ்கானவை. அதனால் மூன்று விஷயங்களை அடிப்படையாக கொண்டு என்சிடியை மதிப்பீடு செய்யவும்.

வட்டி விகிதம் அதிகமாக கிடைக்கும் காரணத்தாலே கடன் பத்திரங்களில் முதலீட்டாளர்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அதிக வட்டி விகிதம் இருக்கும் பட்சத்தில் இயல்பாகவே கொஞ்சம் ரிஸ்க் அதிகமாக இருக்கும். அதனால் அந்த கடன் பத்திரத்தின் ரிஸ்க் என்ன என்பதை தரமதிப்பீட்டு நிறுவனங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். ஏ முதல் ஏஏஏ என தர மதிப்பீடு வழங்கப்பட்டிருக்கும் நிறுவனங்கள் குறைந்த ரிஸ்க் என புரிந்துகொள்ளலாம். பிபிபி அல்லது அதற்கும் கீழ் இருக்கும் தரமதிப்பீடு மிதமான முதல் அதிக ரிஸ்க் இருக்கும். முதலீடு செய்த பிறகும் கூட தரமதிப்பீடு மாறுவதற்கு வாய்ப்பு இருக்கும். அதனையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

பாதுகாப்பானது அல்லது பாதுகாப்பு இல்லாதது என இரு வகைகளில் வெளியிடப்படும். secured NCD-களில் முதலீடு செய்யலாம். ஒரு வேளை நிறுவனத்துக்கு பிரச்சினை எனில் அடமானம் வைக்கப்பட்டிருக்கும் சொத்தினை வைத்து முதலீட்டாளர்களுக்கு பணம் திருப்பி தரப்படும்.

நீண்ட கால கடன் பத்திரங்களில் அதிக வருமானம் இருக்கும். நீண்ட காலம் நீங்கள் முதலீடு செய்வதால் அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதிலும் இரு வகை ரிஸ்க் இருக்கிறது. தற்போது நல்ல தரமதிப்பீடுடன் இருக்கும் நிறுவனம் நீண்ட காலத்துக்கும் சிறப்பாக இருக்கும் என சொல்ல முடியாது. அதே சமயத்தில் சந்தையில் வட்டி விகிதம் உயரும் சூழலில், அதிக வட்டி கொடுக்கும் திட்டத்துக்கு முதலீட்டை மாற்றமுடியாது. அதனால் ஐந்தாண்டுகளுக்கு மேல் என்சிடிகளில் முதலீடு செய்ய வேண்டாம்.

-

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in