

சதுரங்கப் போட்டிகளில் எவர் ஒருவரால், அடுத்த 15 நகர்வுகளை முன்கூட்டியே திட்டமிட முடியுமோ, அவராலேயே கிராண்ட் மாஸ்டர் ஆக முடியும். ஆம்! அவர்கள் மனக்கண் முன்னே அந்த சதுரங்க அட்டை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அதில் காய் நகர்த்தல்கள் குறித்த சிந்தனை அவர்களுக்குள் ஓடிக் கொண்டே இருக்கும்.
பொதுவாக சராசரி மனிதர்களாகிய நாம் அடுத்த ஒரு நகர்வு அல்லது இரண்டு நகர்வுகள் பற்றி மட்டுமே யோசிப்போம். ஆனால் யார் ஒருவரால், அடுத்த 15 நகர்வுகளை மனதுக்குள் திட்டமிட முடியுமோ, அவரால் தான் கிராண்ட் மாஸ்டர் ஆக முடியும் என்கிறார்கள், பயிற்சியாளர்கள்.
நாம் செய்து கொண்டிருக்கும் வணிகத்துக் கும் இது அப்படியே பொருந்தும். உங்கள் தொழிலில் அடுத்த 15 நகர்வுகள் என்னவாக இருக்கப்போகிறது என்று உங்களால் திட்டமிட முடியுமானால் நீங்களும் வெற்றி பெற்று விட முடியும்.
உங்கள் தொழில் திட்டத்தை ஒரு படம் போல் மனதுக்குள் உள்வாங்கிக் கொண்டு, நீங்கள் தொடங்கிய இடம், இப்போது இருக்கிற இடம், இனி போக வேண்டிய இடம் என்பனவற்றை தெளிவாக்கிக் கொண்டால், அடுத்து மேற்கொள்ள வேண்டிய 15 நகர்வுகள் என்ன என்பதைத் திட்டமிட்டுவிட முடியும்.
உதாரணத்துக்கு நீங்கள் ஆண்டுக்கு 20 லட்ச ரூபாய் ஈட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், அதனை 40 லட்ச ரூபாய் ஆக்குவது என தீர்மானித்து விட்டு, அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய அடுத்த 15 நகர்வுகள் என்ன என்பதை வரையறுக்கலாம்.
முதலீட்டுக்கான பணத்தை ஏற்பாடு செய்வது, உற்பத்தியைப் பெருக்குவது, விற்பனை அதிகாரியை நியமிப்பது, 3 பகுதிகளில் உங்கள் வர்த்தகத்தை விரிவாக்குவது, சலுகைகளை அறிவிப்பது, விளம்பர நோட்டீசுகளை வடிவமைப்பது என்பன போன்ற நகர்வுகளை மனதுக்குள் திட்டமிட்டு வைத்துக் கொண்டால் நீங்கள் இலக்கை அடைந்து விட முடியும். இந்த நகர்வுகளைத்தான் வெற்றியாளர்கள் திறம்படச் செய்கிறார்கள்.
எதிராளியின் உத்திகளைப் பொறுத்து, நகர்வுகளில் மாற்றங்களை அவ்வப்போது மேற் கொள்ளத்தான் வேண்டும். இலக்கு தெளிவாக இருப்பதால் நகர்வுகளில் சிறிய, சிறிய மாற்றங்களை ஏற்படுத்துவது எளிதானது. மேலும், நாம் எந்த இடத்திலும் முட்டிக் கொண்டு நின்று விட மாட்டோம். ஆம்! உங்கள் வெற்றி என்பது உங்களுடைய அடுத்த 15 நகர்வுகள் என்ன என்கிற தெளிவில் இருக்கிறது.
- rkcatalyst@gmail.com