எதிர்பாராதவை நிகழ்ந்தால், மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்

எதிர்பாராதவை நிகழ்ந்தால், மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்
Updated on
2 min read

நீங்கள் உங்கள் வீட்டுக்கு வரப்போகும் ஒரு முக்கிய விருந்தினருக்காக சமைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். அப்போது திடீரென ஒரு உணவுப் பொருள் செய்து முடிக்க வேண்டிய நேரத்தில் கொட்டி விடுகிறது. நீங்கள் பதறிப் போவீர்கள் அல்லவா.. மீண்டும் முதலில் இருந்து அதை சமைக்கத் தொடங்குவீர்கள் தானே.. ஆனால் கொட்டிவிட்ட அந்த உணவையே அழகாகப் பெயரிட்டு பரிமாறி விட்டால் எப்படி இருக்கும்?

இதோ.. ஒரு உண்மைச் சம்பவம்..

இத்தாலியில் சமையல் கலை நிபுணரான மஸ்ஸிமோ பொட்டுரா நடத்தி வரும் ஓஸ்டீரியா பிரான்ஸ்கானா உணவகம் உலகப் புகழ் பெற்றது. இதில் நீங்கள் உணவருந்த விரும்பினால், முன்பதிவு செய்து விட்டு குறைந்தபட்சம் 6 மாதங்களாவது காத்திருக்க வேண்டும்.
இந்த உணவகத்தில் மிக மிகப் பிரசித்தி பெற்ற உணவு வகைகளில் ஒன்று, 'ஊப்ஸ் ! ஐ ட்ராப்ட் த லெமன் டார்ட்' (OOPS ! I DROPPED THE LEMON TART) என்பதாகும். இது சாப்பாட்டுக்கு பின்பு சாப்பிடக்கூடிய 'டெஸர்ட்' (இனிப்பு) வகையைச் சேர்ந்தது.

இதன் தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா? 'ஐயோ..! நான் எலுமிச்சை இனிப்புப் பதார்த்தத்தை கொட்டி விட்டேனே' என்பதாகும். இந்தப் பெயர் உருவான பின்னணி சுவாரசியமானது. ஒரு முறை இவரது உணவகத்தில் பணியாற்றிய ஒரு ஜப்பானிய சமையல் கலைஞர் டாகா கொண்டோ, எலுமிச்சை இனிப்புப் பதார்த்தத்தை பரிமாற அனுப்பும்போது, அதை தட்டில் கொட்டிவிட்டார்.

கொட்டிவிட்ட அந்த இனிப்பைப் பார்த்தவுடன் அவருக்கு கையும் ஓடவில்லை.. காலும் ஓடவில்லை..

அப்போது அந்த இடத்துக்கு வந்த மஸ்ஸிமோ பொட்டுரா, தட்டில் கொட்டியிருந்த எலுமிச்சை இனிப்பைப் பார்த்தார். அது ஒரு அழகான ஓவியமாக அவர் கண்ணுக்கு தென்பட்டது. உடனடியாக சமையல் கலைஞரை வெகுவாகப் பாராட்டி விட்டு, பிற சமையல் கலைஞர்களை அழைத்தார்.

"இதோ, ஒரு புது பதார்த்தத்தை டாகா உருவாக்கி இருக்கிறார். இது இத்தாலியின் தென்பகுதி கலாச்சாரத்தை அப்படியே பிரதிபலிக்கிறது. அங்கு நீங்கள் சென்றால், பல்வேறு எதிர்பாராத நிகழ்வுகளில் உங்களை மறந்து போவீர்கள். மியூசியத்துக்குச் செல்வீர்கள். அது சில நேரங்களில் திறந்து இருக்காது. ஆலயத்துக்கு சென்றால், உங்கள் அடுத்த வேலைகளை மறந்துவிட்டு அங்கேயே ஐக்கியமாகி விடுவீர்கள். நீச்சல் குளத்துக்கு சென்றால் நேரம் போனதே உங்களுக்குத் தெரியாது.

அதேபோன்றதுதான் இந்தப் பதார்த்தமும். இதுவும் ஒரு எதிர்பாராத ஆச்சரியமே. ஒரு எலுமிச்சை இனிப்புப் பதார்த்தத்தை யாரும், இப்படி ஒரு டிசைனில் பார்த்து இருக்கவே மாட்டார்கள். எனவே இதற்கு 'ஊப்ஸ் ! ஐ டிராப்ட் த லெமன் டார்ட்' என்று பெயர் சூட்டுகிறேன்" என்றார்.

அதிலிருந்து சமையல் கலைஞர்கள் அனைவரும் எலுமிச்சை இனிப்பு பதார்த்தத்தை தயார் செய்து, அதை தட்டில் கொட்டிப் பரிமாறுவதை வழக்கமாக்கி விட்டனர். பிறகு, இது சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி, இன்றைக்கு உலகப் பிரசித்தி பெற்ற பதார்த்தமாகி விட்டது.

ஆம் நண்பர்களே, நாம் எதிர்பார்த்த ஒன்று நடக்கவில்லை என்றால், நாம் அழுது புலம்பலாம் அல்லது மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு தொடர்ந்து பயணிக்கலாம். அழுது புலம்புவதைவிட, மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு பயணிப்பதுதான், வாழ்க்கையை சுவாரசியமாக வைத்திருக்கும்.

இது உணவுக்கு மட்டுமல்ல, எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

- rkcatalyst@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in