

அவசர மற்றும் நீண்டகால தேவைகளுக்காக கடன் பெறுபவர்கள் வங்கிகளின் பல்வேறு விதிமுறை மற்றும் நிபந்தனைகளைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். பின்னாளில் அதுவே அவர்களுக்கு பெரும் சிக்கலாக மாறிவிடுகிறது. இதற்கு, வாடிக்கையாளர்களிடமிருந்து பெரும் உத்தரவாதங்களை வங்கிகள் எவ்வாறெல்லாம் கையாளுகின்றன என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
வட்டி மற்றும் கட்டணங்கள்: கடன் வாங்குபவரிடமிருந்து வங்கிகள் பெறும் எந்த வட்டியும் அல்லது கட்டணமும் அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளின்படி மட்டுமே இருக்க முடியும். வட்டி என்பது நிலையானதா (Fixed Rate) அல்லது மாறக்கூடியதா (Floating Rate) என்பதைதப் பார்க்க வேண்டும். மாறுபடும் அடிப்படையில் இருந்தால், அது எந்த அடிப்படை விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
பிணை இல்லா கடன்கள் (Unsecured Loans): வங்கி எந்தவொரு பிணையப் பத்திரமும் இல்லாமல் கடன் வழங்கும் போதெல்லாம் அதற்காக டிமாண்ட் பிராமிசரி பத்திரம் மற்றும் தேவையான உறுதிக் கடிதத்தை பெறுகிறது. டிமாண்ட் பிராமிசரி பத்திரங்கள் சட்டப்பூர்வமாக 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். கடனை திருப்பிச் செலுத்தாத நிலையில் வங்கிகள் அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய முடியும்.
செட்-ஆஃப் முறை (Set-off): ஒருவரின் கடன் பாக்கிக்கு, அவரது வேறு ஏதாவது கணக்கில் உள்ள தொகையை பயன்படுத்திக் கொள்வதே செட்-ஆஃப் முறை. எடுத்துக்காட்டாக ஒருவருக்கு சேமிப்புக் கணக்கிலோ அல்லது நடப்புக் கணக்கிலோ அல்லது வைப்புக் கணக்கிலோ பணம் இருந்தால், வங்கி அந்த தொகையை கடன் கணக்குக்கு வரவு வைக்க அதிகாரம் உண்டு.
ஜெனரல் லீன் (General Lien): நிலுவைத் தொகைக்கு ஈடாக சொத்துகளை தக்க வைத்துக்கொள்ளும் வங்கிகளுக்குள்ள உரிமை ஜெனரல் லீன் எனப்படும். வாடிக்கையாளரின் கடனுக்கு ஈடாக எந்தவொரு பிணை சொத்துகளையும் தக்க வைத்துக் கொள்ளும் உரிமை வங்கிகளுக்கு உண்டு. அவற்றை விற்று கடனை வசூலித்துக் கொள்ளவும் உரிமை உண்டு. உதாரணத்துக்கு, நீங்கள் நகைக் கடன் பெற்றிருந்து, அந்தக் கடனை திரும்பச் செலுத்தியிருந்தாலும், வேறு ஏதேனும் கடனில் நிலுவைத் தொகை இருந்தால் வங்கிகள் நகைகளை உங்களுக்கு திருப்பிக் கொடுக்காது.
பிளெட்ஜ் (Pledge): அசையும் சொத்துகளை கடனுக்கு ஈடாக வங்கிகளிடம் ஒப்படைப்பதை அடமானம் என்கிறோம். உதாரணமாக நீங்கள் நகைக்கடன் வாங்கும்போது உங்கள் நகைகளை வங்கியிடம் ஒப்படைக்கிறீர்கள். கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்றால், வங்கி நகைகளை ஏலம் விட்டு அவற்றின் நிலுவைத் தொகையை பெறும்.
ஹைப்பாதிகேஷன் (Hypothecation): இதுவும் அசையும் சொத்துகளை (வாகனங்கள்) கடனுக்கு அடமானமாக வைக்கும் ஒரு முறையே. இதில் அசையும் சொத்துகளை வங்கிகளிடம் ஒப்படைப்பதில்லை. சொத்துகள் உரிமையாளரிடம் இருக்கும். ஆனால் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சொத்து பிணையாக வங்கியிடம் வழங்கப்படுகிறது. அந்த அசையும் சொத்தை கடனை திருப்பிச் செலுத்தாதவரை விற்க முடியாது.
அடமானம் (Mortgage): நிலம் மற்றும் கட்டிடம் போன்ற அசையா சொத்துகளுக்கு அடமானம் முறையில் கடன் வழங்கப்படுகிறது. சொத்துகளுக்கான அசல் உரிமைப் பத்திரங்கள் இருந்தால் அவற்றை உரிமையாளர் வங்கியிடம் ஒப்படைத்தால் போதுமானது. அசல் பத்திரங்கள் இல்லாத சூழ்நிலையில் தனியாக அடமான பத்திரம் தயாரித்து அதை அரசு பதிவாளர் அலுவகத்தில் பதிவு செய்ய வேண்டும். இதை பதிவு செய்யப்பட்ட அடமானம் (Registered mortgage) என்போம். கடன் வசூலாகாத நிலையில் வங்கிகள் இந்த அசையா சொத்துகளை விற்று கடனை பைசல் செய்து கொள்ளும்.
அசைன்மெண்ட் (Assignment): சில நேரங்களில் இன்சூரன்ஸ் பாலிசி போன்றவற்றையும் வங்கிகள் பிணையாக பெற்றுக் கொள்கின்றன. அசைன்மென்ட் முறையில் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் உள்ள பாலிசிக்கான சொத்து வங்கிக்கு பிணையாக கொடுக்கப்படுகிறது. கடன் வசூல் ஆகாத சூழ்நிலையில் வங்கிகள் இன்சூரன்ஸ் பாலிசியை சரண்டர் செய்து கிடைக்கும் நிதியில் கடனை பைசல் செய்ய முயற்சிக்கும்.
நிலுவை இல்லை சான்றிதழ்: வங்கியில் வாங்கிய கடனை முழுமையாக செலுத்திய பிறகு வங்கியிடமிருந்து கடன் எதுவும் நிலுவை இல்லை (No Dues Certificate) என்ற சான்றிதழை பெற வேண்டும். கடனை முழுவதுமாக அடைத்த விவரங்களை சிபில் (CIBIL) நிறுவனத்துக்கு வங்கி தெரிவித்ததா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.