

சில்லறை வணிகம் தொடர்ந்து பரிணாமம் அடைந்து வருகிறது. 1990-க்குப் பிறகு, இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட உலகமயக் கொள்கைகளால் வெளிநாட்டு சில்லறை விற்பனையாளர்கள் இந்திய சந்தையில் நுழைய ஆரம்பித்தனர்.
அவர்கள் வழியே இந்தியாவில் பல்பொருள் அங்காடிகள், ஹைப்பர் மார்க்கெட்கள் போன்ற புதியவடிவங்கள், நடைமுறைகள் அறிமுகமாகின. இது இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனைத் துறையின் (organized retailing) வளர்ச்சிக்கு வழிவகுத்தது.
இந்தியப் பொருளாதாரத்தில் சில்லறை வணிகத்துறை என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சில்லறை வணிகத் துறையின் பங்களிப்பு 10 சதவீதமாகும். தற்போது சில்லறை வணிகத் துறையில் பெரும் புரட்சியை நிகழ்த்தி வருகிறது க்யூ காமர்ஸ் (Q-Commerce) என்று அழைக்கப்படும் அதிவேக வணிகம்.
இதன்படி, வாடிக்கையாளர்கள் தாங்கள் வீட்டிலிருந்தபடி ஆர்டர் செய்து 10 நிமிடங்களில் மளிகைப் பொருட்கள், காய்கறி, இறைச்சி, தின்பண்டங்கள் உள்ளிட்டவற்றை பெற முடியும். இப்பிரிவில் இந்தியாவில், சொமேட்டோவின் பிளிங்கிட், ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட், ஸெப்டோ, பிக்பாஸ்கெட்டின் பிபிநெள (BB Now) ஆகியவை முன்னிலை வகிக்கின்றன.
வேலைக்குச் செல்பவர்கள் மத்தியில் இத்தகைய செயலிகள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகாலையில் எழுந்து அன்றைக்குத் தேவையான பொருள்களை இத்தகைய செயலி மூலம் ஆர்டர் செய்து அடுத்த 10-15 நிமிடங்களில் அவற்றை பெற்று விடுகின்றனர். இதனால், எந்தவித பதற்றமும் இல்லாமல் பணிக்குச் செல்ல முடிகிறது என்று கூறுகின்றனர்.
வீட்டில் அன்றாடம் உபயோகிக்கும் பொருள்கள் மட்டுமல்லாமல் பரிசுப் பொருள்கள், பூங்கொத்துகள், ஆடைகள் ஆகியவற்றையும் இவை நுகர்வோர்களிடம் கொண்டு சேர்க்கின்றன.
அதிவேகமாக பொருள்களை நுகர்வோர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்ற நோக்கில் 4-5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு ‘டார்க் ஸ்டோர்ஸ்’ என அறியப்படும் பொருள் இருப்புக் கிடங்குகளை இந்நிறுவனங்கள் அமைத்திருக்கின்றன.
க்யூ காமர்ஸ் நிறுவனங்களின் வருகை பாரம்பரிய அண்ணாச்சிக் கடைகளுக்கு சவாலாக அமைந்துள்ளது.
இந்நிறுவனங்கள் அதிக தள்ளுபடி வழங்குவதால், பெருநகரங்களில் மக்கள் பாரம்பரிய அண்ணாச்சிக் கடைகளில் சென்று பொருள்கள் வாங்குவதற்குப் பதிலாக க்யூ காமர்ஸ் செயலியை நோக்கி செல்வது அதிகரித்து வருகிறது. இந்த மாற்றத்தை எதிர்கொள்ள அண்ணாச்சிக் கடைகள் புதிய உத்திகளை கடைபிடிக்க வேண்டிய சூழலில் உள்ளன.
- sidvigh@gmail.com