Published : 02 Apr 2018 10:50 AM
Last Updated : 02 Apr 2018 10:50 AM

உங்களுக்கு தேவையான காப்பீடு எது?

முதலீட்டை தொடங்கும் முன்பு இரண்டு பாலிசிகள் எடுப்பது முக்கியம். ஒன்று டேர்ம் இன்ஷூரன்ஸ் மற்றொன்று மெடிக்கல் இன்ஷூரன்ஸ். இங்கு டேர்ம் இன்ஷூரன்ஸை குறித்து மட்டுமே பார்ப்போம். இந்த பாலிசியில் முதிர்வு தொகை என எதுவும் கிடைக்காது. ஒரு வேளை குடும்பத்துக்கு வருமானம் ஈட்டுபவர் மறையும் பட்சத்தில் பாலிசி தொகை கிடைக்கும். ஒரு வேளை பாலிசி காலத்தில் குடும்பத் தலைவருக்கு எதுவும் நிகழவில்லை எனில், பிரீமியமாக செலுத்திய தொகை மீண்டும் கிடைக்காது. அதனால் இதனை ஒரு முதலீடாக கருத வேண்டாம்.

டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பதற்கு முன்பு பல விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். பாலிசி தொகை, பிரீமியம், எந்த முறையில் பாலிசியை எடுப்பது, மருத்துவ பரிசோதனை என பல விஷயங்கள் உள்ளன.

எவ்வளவு காப்பீடு தேவை?

உங்களின் தேவை எவ்வளவோ அவ்வளவு தொகைக்கு காப்பீடு எடுக்க வேண்டும். அதாவது குடும்ப தலைவரின் இறப்புக்கு பின்பு குடும்பத்துக்கு எவ்வளவு தொகை தேவையோ அவ்வளவு தொகைக்கு எடுக்க வேண்டும். வீட்டுக்கடன், குழந்தைகளின் கல்வி, திருமணம் மற்றும் உங்கள் குடும்பத்தின் தற்போதைய வாழ்க்கைத்தரம் இதே நிலையில் தொடர வேண்டும். இவை எல்லாம் அடிப்படையாக கொண்டே காப்பீட்டு தொகை நிர்ணயம் செய்ய வேண்டும்.

உதாரணத்துக்கு உங்களின் வயது 35. உங்களின் மாத செலவு ரூ.75,000 என (இஎம்ஐ உள்பட) வைத்துக்கொள்ளுங்கள். உங்களின் ஓய்வுக்கு இன்னும் 25 ஆண்டுகள் இருக்கிறது. மீதமுள்ள மாதங்களுக்கு ஆகும் செலவு ரூ.2.25 கோடி (ரூ.75,000*300 மாதம்). இந்த தொகைக்கு நீங்கள் காப்பீடு எடுக்க வேண்டும். உங்கள் வாழ்க்கை துணையும் வேலைக்கு செல்பவராக இருந்தால் அவரும், டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டியது அவசியம். பொதுவாக ஆண்டு சம்பளத்தில் 10 முதல் 12 மடங்கு வரை காப்பீடு எடுக்க வேண்டும் என காப்பீட்டு நிறுவனங்கள் ஆலோசனை வழங்கும். ஆனால் சில சமயங்களில் இந்த அளவு உங்களின் தேவையை பூர்த்தி செய்யாமல் போகலாம். உங்களுடைய தேவைகளை தெளிவாக பட்டியலிட்ட பிறகு காப்பீட்டு தொகையை முடிவு செய்யலாம்.

எவ்வளவு காலம்?

இந்த பாலிசியில் செலுத்தும் பிரீமியம் தொகை திரும்ப கிடைக்கப்போவதில்லை என்பதால் எவ்வளவு காலத்துக்கு பிரீமியம் செலுத்த வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். பொதுவாக எப்போது ஓய்வு பெறுகிறீர்களோ அதுவரை டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்தால் போதுமானது. உங்களின் ஓய்வு காலம் மைனஸ் வயது. இந்த கால இடைவெளிக்கு மட்டுமே டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கலாம். அதாவது இந்த காலத்துக்குள் உங்களது அனைத்து விதமான பொறுப்புகளையும் முடித்திருப்பீர்கள் என்றால் மட்டுமே ஓய்வு காலம் வரை பாலிசி எடுக்கலாம்.

ஒரு வேளை ஓய்வு காலத்துக்கு பிறகும் உங்களுக்கு பொறுப்புகள் இருக்கிறது என்னும் பட்சத்தில் எவ்வளவு காலம் தேவையோ அவ்வளவு காலத்துக்கு நீட்டிக்கலாம். 75 வயது வரை கூட டேர்ம் இன்ஷூரன்ஸ் வழங்கப்படுகிறது. உங்களது பொறுப்புகள் கூடும் பட்சத்தில் உங்களின் நடுத்தர வயதில் கூடுதலாக இரண்டாவது பாலிசியை கூட எடுக்கலாம். ஆனால் வயது அதிகரிக்கும் பட்சத்தில் பிரீமிய தொகையும் அதிகரிக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

முழுமையான தகவல்களை கொடுங்கள்

டேர்ம் இன்ஷூரன்ஸுக்கு விண்ணப்பிக்கும் போது உங்களை பற்றிய முழுமையான தகவல்கள் மற்றும் பழக்க வழக்கங்களை கொடுங்கள். நீங்கள் புகைப்பிடிப்பவராகவோ அல்லது மது அருந்துவராகவோ இருந்தால் அதனை தெரியப்படுத்துங்கள். உங்களுக்கு ஏற்கெனவே இருக்கும் உடல் உபாதைகளை குறிப்பிடுங்கள். ஆன்லைன் அல்லது ஏஜெண்ட் மூலம் காப்பீடு எடுத்தாலும் மருத்துவ பரிசோதனை செய்யப்படும். இருந்தாலும், உங்களை பற்றிய தகவலை நீங்களே கொடுக்கும்பட்சத்தில், கிளைம் நிராகரிக்கப்படும் வாய்ப்பு குறைவு.

அதேபோல டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும் போது ரைடர்களை (இதர சலுகைகள்) தவிர்க்கவும். விபத்து, உடல் ஊனம், கடும் நோய்களுக்கு ரைடர் வழங்கப்படலாம். இவற்றை தேர்வு செய்யும் போது உங்களது பிரீமியம் 10 முதல் 15 சதவீதம் வரை உயரலாம். தேவைப்பட்டால் விபத்து காப்பீடு மட்டும் எடுக்கலாம். இதர ரைடர்களை எடுப்பதற்கு பதிலாக மருத்துவ காப்பீட்டை எடுக்கலாம்.

கட்டணம்

பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்களில் டேர்ம் இன்ஷூரன்ஸை ஆன்லைன் மூலம் எடுக்கலாம்.35 வயது ஆண் ஒரு கோடி ரூபாய்க்கு 25 ஆண்டு காலம் பாலிசி எடுக்கிறார் என்றால் அவருக்கான பிரீமியத் தொகை ரூ.12,000 முதல் ரூ.20,000 வரை ( ஏஜெண்ட் மூலமாக எடுக்கும் போது) இருக்கும். இந்த தொகைக்கு 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு பெற்றுக்கொள்ள மறக்காதீர்கள்.

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x