

கோவையில் வசித்து வருகிறார் அம்பி மூர்த்தி. தனது தந்தையின் நினைவாக ‘ஆலமரம்’ என்ற பெயரில் இன்குபேஷன் மையத்தை 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினார். இதன்மூலம் கிராமங்களில் இருந்து தொழில் முனைவுக் கனவோடு வரும் முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு தேவையான இடவசதி, உணவு மற்றும் வணிக மற்றும் நிதி ஆலோசனைகளை வழங்குகிறார்.
அம்பி மூர்த்தியின் பூர்வீகம் கும்பகோணம் அருகே உள்ள திங்களூர். சிறுவயதிலேயே பெற்றோர் கோவைக்கு இடம் பெயர்ந்துவிட்டனர். இதனால், அவரது பள்ளிப் படிப்பு கோவையில் அமைந்தது. வேலூரில் கல்லூரி படிப்பு பயின்றார். அதன் பிறகு, அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் ஸ்டார்ட்அப் தொடங்கும் வாய்ப்பு அவருக்கு அமைந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவில் அது செல்லவில்லை.
இதையடுத்து இந்தியா திரும்பிய அவருக்கு சோஹோ நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அங்கு விற்பனை பிரிவில் கன்டென்ட் எழுத்தாளராக தன் பணியைத் தொடங்கினார். அப்பிரிவில் கவனிக்கத்தக்க நபராக உருவெடுத்த அம்பி மூர்த்திக்கு, லண்டன், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து நாடுகளுக்குச் சென்று பணிபுரியும் வாய்ப்பு அமைந்தது.
அந்த அனுபவம் உலகளாவிய ஸ்டார்ட்ப் சூழல் குறித்த புரிதலை அவருக்கு ஏற்படுத்தியது. சொந்தமாக ஸ்டார்ட் அப் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தை அது அவருள் விதைத்தது. “வளர்ந்த நாடுகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து, நிறைய ஸ்டார்ட் அப்களை தொடங்கி நிறைய வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவிலும் ஸ்டார்ட் அப் தொடங்கி வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற சிந்தனையை மனதில் விதைத்து கொண்டேன்” என்று கூறும் அம்பி மூர்த்தி, 2022-ல் சோஹோ நிறுவன பணியை ராஜினாமா செய்துவிட்டு, நண்பர் ராகுல் நந்தகோபாலுடன் இணைந்து ‘கோ ஜென்’ ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கினார். தற்போது இந்நிறுவனத்தில் 50 பேர் பணிபுரிகின்றனர்.
அமெரிக்காவிலும் இந்நிறுவனத்துக்கு அலுவலகம் உள்ளது. சொந்தமாக ஸ்டார்ட் அப் தொடங்கினாலும், சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவரை துரத்தியது. கிராமங்களிலிருந்து வரும் முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு ஸ்டார்ட் அப் தொடங்குதல், அதை சந்தைப்படுத்துதல், நிதி திரட்டுதல் உள்ளிட்டவற்றுக்கு போதிய வழிகாட்டுதல்கள் இல்லாமல் திணறி வருவதை உணர்ந்த அம்பி மூர்த்தி, இத்தகையவர்களுக்கு உதவ வேண்டும் என்று முடிவெடுக்கிறார். அதற்காக அவர் தொடங்கியதுதான் ‘ஆலமரம்’ இன்குபேஷன் மையம்.
தன்னுடைய இன்குபேஷன் மையம் குறித்து அம்பி மூர்த்தி நம்முடன் பகிர்ந்து கொண்டார். “எனது தந்தை திருமூர்த்தி தன்னலமற்று சேவையாற்றியவர். சமூகத்துக்கு நம்மால் முடிந்ததை வழங்க வேண்டும் என்ற எண்ணம் என் அப்பா மூலம் சிறுவயதில் என்னுள் உருவானது. 2020-ல் என் அப்பா காலமானார். அவர் நினைவாக எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. அப்படித்தான் 2022-ல் ஆலமரம் இன்குபேஷன் மையத்தைத் தொடங்கினேன்.
எங்களது ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் கிடைக்கும் லாப தொகையை வைத்து இன்குபேஷன் மையத்தை நடத்தி வருகிறேன். குறிப்பாக கிராமப் பகுதிகளில் இருந்து இரண்டாம் நிலை நகரங்களுக்கு வரும் தொழில்முனைவோருக்கு தேவையான அடித்தளத்தை உருவாக்கும் வகையில் இந்த மையம் செயல்பட்டு வருகிறது.
கோவையில் தொழில் துறை வளர்ச்சி நன்றாக உள்ளது. இங்கு நிறுவனங்களுக்கு தேவையான மனிதவளம் நன்றாக உள்ளது. எனவே ஸ்டார்ட் அப்களை உருவாக்கி அதன்மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் ‘ஆலமரம்’ முழுமையாக ஈடுபடுத்தி செயலாற்றி வருகிறது” என்று நம்பிக்கை மிளிர தெரிவித்தார்.
- aathithan.r@hindutamil.co.in