உச்சத்தில் தங்கம்

உச்சத்தில் தங்கம்
Updated on
2 min read

வரலாறு காணாத உச்சத்தை தொட்டிருக்கிறது தங்கம் விலை. ஏன் தங்கத்துக்கு மட்டும் இந்தமோகம்?. முதலுக்கு மோசம் இல்லை, சேமிப்புக்கு உகந்தது. உலகின் எந்த மூலையிலும் விற்றுப் பணமாக்கலாம், உலகத்தின் பொருளாதார இயக்கத்தில் தங்கத்தின் பங்களிப்பு முக்கியமானது... இத்தகைய சிறப்புகளைப் பெற்றது தங்கம்.

வழக்கமாக பங்குச்சந்தையும் தங்கத்தின் விலையும் ஒன்றுக்கு ஒன்று தலைகீழ் தொடர்பைக் கொண்டிருக்கும். பங்குச்சந்தை உயர்ந்தால் தங்கத்தின் விலை ஏற்றம் காணாமல் அப்படியே இருக்கும். பங்குச் சந்தை சரிந்தால் தங்கம் விலை உயரும். ஆனால் இப்போது இரண்டுமே வரலாறு காணாத உச்சத்தில் இருக்கின்றன.

இப்போது இந்தியாவில் 1 கிராம் தங்கம் கிட்டத்தட்ட ரூ.7 ஆயிரத்தை நெருங்கியிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக தங்கம் சராசரியாக ஆண்டுக்கு 11.2% என்ற அளவில் வருவாய் தந்திருக்கிறது. இது, வங்கிகளில் டெபாசிட் மூலம் கிடைக்கும் வருவாயை விட அதிகம். எனினும், 2012-ல்இருந்து 2018 வரை தங்கத்தின் விலையில் மிகப்பெரிய மாற்றம் இல்லை. ஆனால் இப்போது பெரும் உயர்வு கண்டு வருகிறது. என்ன காரணம்?

இந்தியாவின் தங்கத்தின் விலைக்கும் அமெரிக்க டாலர் குறியீட்டுக்கும் இடையே உள்ள தொடர்பும் தலைகீழானது. அதாவது ஒன்று உயர்ந்தால் மற்றொன்று குறையும். சமீபகாலமாக டாலர் குறியீடு சரிந்துள்ளது. உலக சந்தைகளில் தங்கம், அமெரிக்க டாலரில்தான் குறிப்பிடப்படுகிறது. அமெரிக்க டாலர் வலுவடையும்போது தங்கத்தின் விலை குறையும். மாறாக அமெரிக்க டாலர் பலவீனமடையும்போது தங்கத்தின் விலை உயரும்.

வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும் போது தங்கத்தை வைத்திருப்பதற்கான வாய்ப்புச் செலவு (Opportunity Cost) குறைவதால், தங்கத்தின் தேவை அதிகரித்து விலை உயர்கிறது.

ஒருவேளை வட்டி உயர்ந்தால் தங்கத்தில் மிகப்பெரிய முதலீடுகள் இருக்காது. இதன் விளைவாக விலை குறையலாம். ஆனால் வரும் ஜூன் மாதத்தில் அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகித குறைப்பை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் தங்கத்தின் விலை உயர்வதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

தங்கத்திற்கான தேவை சீனாவில் மட்டும் 16% அதிகரித்துள்ளதாக தங்கத்திற்கான உலககூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் இளைஞர்கள் அதிக அளவு தங்கம் வாங்குவதாக ஒருசீனப் பத்திரிகை தெரிவித்துள்ளது. சமீபத்தில்சீனாவின் மத்திய வங்கியும் தனது இருப்புகளில் கணிசமான அளவிற்கு தங்கத்தை சேர்த்திருக்கிறது.

தங்கத்தின் விலை உயர்வு இந்திய பொருளாதாரத்தில் பல்வேறு தாக்கத்தை கொண்டிருக்கிறது. தங்கத்தின் விலை உயரும்போது இறக்குமதியின் மதிப்பு அதிகரிப்பதால் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கிறது. இது இந்தியாவின் வர்த்தக சமநிலையை பாதிப்பதோடு அந்நிய செலாவணி கையிருப்பில் அழுத்தத்தை உருவாக்குகிறது. தங்கத்தை அடகு வைத்து கடன் வாங்குபவர்களுக்கு அதிக கடன் கிடைப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

எது எப்படி இருந்தாலும் தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை ஏற்றத்தின் பின்னால் சர்வதேச காரணிகளும் சிக்கல்களும் இருப்பதால் குறுகிய காலத்தில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என கணிப்பது எல்லோருக்கும் ஒரு சவாலான விஷயம். மொத்தத்தில் இன்னும் கொஞ்ச காலத்திற்கு தேவைக்கு மட்டும் தங்கம் வாங்குவது நல்லது!

- somasmen@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in