தேவையற்றவற்றில் இருந்து விலகி நில்லுங்கள்

தேவையற்றவற்றில் இருந்து விலகி நில்லுங்கள்
Updated on
1 min read

எல்லோருக்கும் வலியப் போய் உதவி செய்கிற மனிதரா நீங்கள்? பிறருக்கு உதவி செய்வது நல்ல குணம்தான். ஆனால் அடுத்தவர் கேட்காமல், நீங்களே முன் சென்று உதவும்போது, ‘இவர் ஏன் நமக்கு வலிய வந்து உதவி செய்கிறார்? வேறு ஏதேனும் நம்மிடம் எதிர்பார்க்கிறாரோ?’ என்கிற சந்தேகம் எழக்கூடும்.

இதை இன்னொரு கோணத்திலும் நாம் பார்க்கலாம். பிறர் கேட்காமலேயே ஓர் உதவியை இரண்டு முறை செய்து விட்டால், அது அவர்களிடம் எதிர்பார்ப்பாக மாறிவிடுகிறது. அதே உதவியை ஆறு முறை செய்து விட்டால் அது உரிமையாகவே மாறி விடுகிறது என்கிறது ஒரு உளவியல் புள்ளி விவரம்.

ஆகவே எல்லாவற்றிலும் தலையைக் கொடுக்காதீர்கள். தேவையற்றவற்றில் இருந்து விலகி நிற்கப் பழகுங்கள். சரி.. தேவையற்றவற்றை எப்படித் தவிர்ப்பது? மவுனமாக இருப்பதுதான் சிறந்த வழி. இல்லையென்றால், ஒரு புன்சிரிப்போடு அந்தச் சூழலைக் கடந்து செல்லுங்கள்.

நோ சொல்லப் பழகுங்கள்: பிறர் நம்மிடம் வந்து கேட்கிற உதவியை எல்லாம் செய்தே ஆக வேண்டிய அவசியமில்லை. உங்களால் எது முடியுமோ, உங்களுக்கு எவர் பயன்படுவாரோ அதைச் செய்தால் மட்டும் போதும். மற்றவர்களிடம் சிரித்த முகத்தோடு ‘நோ’ சொல்லி விடுங்கள். அடுத்ததாக, பலர் உங்களைப் பாராட்டி, பல வேலைகளை உங்கள் முதுகில் ஏற்றக் கூடும். நீங்களும் பாராட்டுக்கு மயங்கி அந்த வேலைகளை ஏற்றுக் கொள்வீர்கள். அதனால் உங்கள் தொழில் பெரிதும் பாதிப்படைவதை கடைசியில்தான் உணர்வீர்கள்.

நண்பர்கள் தேவைதான். ஆனால், வெட்டிப் பொழுது போக்கக் காத்திருக்கும் நண்பர்கள் நமக்குத் தேவையில்லை. நம் இலக்குக்கு உதவக் கூடியவர்கள் அல்லது ஆலோசனை சொல்லக் கூடியவர்கள் நமது சிந்தனைகளை மதிப்பவர்கள் நமக்கு நண்பர்களாக இருக்க வேண்டும். இந்த ஒற்றை நோக்கில் இருந்து யாரெல்லாம் மாறுபட்டு நிற்கிறார்களோ அவர்களுடனான பழக்கத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் மூழ்காதீர்: ஃபேஸ்புக் , எக்ஸ், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப் போன்ற சமூக ஊடகங்கள் நம்மையும் அறியாமல் நாளொன்றுக்கு 3 மணி நேரத்தை விழுங்கி விடுவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. எனவே தேவையற்ற – பெரும்பாலான வாட்ஸ்அப் குரூப்களில் இருந்தும், பேஸ்புக் குரூப்களில் இருந்தும் முதலில் வெளியேறி விடுங்கள். உங்கள் பொன்னான நேரம் மிச்சமாகும்.

விவாதங்களைத் தவிருங்கள்: மதம், இனம், ஜாதி, இறைவன், அரசியல், திரைப்படம் தொடர்பான விவாதங்கள் அனைத்தும் தீர்வில்லாதவை. ஒவ்வொருவருக்கும் இதில் மாறுபட்ட கருத்து இருக்கத்தான் செய்யும். இவற்றைப் பற்றி எப்போது, எங்கு பேசினாலும் நேரமும் விரயம்; நல்ல நட்பும் காணாமல் போகும். விவாதங்கள் தொழில் சார்ந்து இருக்கலாம். ஆனால் உணர்வு சார்ந்து இருக்கக் கூடாது. நமக்கு கருத்துக்களைவிட மனிதர்கள் முக்கியம்.

இந்தத் தெளிவு இருந்தால், வெற்றி நம்மைத் தேடி வரும்.

- rkcatalyst@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in